search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணாடம் தீவிபத்து"

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இன்று அதிகாலை 4 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயில் சிக்கிய 2 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெ.பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து சாமி (வயது 65). விவசாயி. இவரது மகன்கள் சுப்பிரமணியன் (49), சிவக்குமார் (45), வெங்கடேசன் (38).

    இவர்கள் விவசாய வேலை பார்த்து வருகின்றனர். 4 பேரும் கூரை வீடுகளில் அடுத்தடுத்து வசித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் சுப்பிரமணியன் வீட்டில் திடீரென்று தீப்பிடித்தது.

    அப்போது வீட்டின் மேற்கூரையில் இருந்து தீ பிழம்புகள் கீழே விழுந்தன. வீட்டுக்குள் படுத்து தூங்கிய சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் முன்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

    உள்ளே தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகள் வெளியேற முடியாமல் தவித்தனர். இதையறிந்த சுப்பிரமணியனும், அவரது மனைவியும் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த மகாலிங்கம் (52), வானம்மாள் (32) ஆகியோர் அங்கு ஓடிவந்தனர்.

    அப்போது சுப்பிரமணியன் வீட்டின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. உடனே அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 2 குழந்தைகளையும் உயிருடன் மீட்டனர்.

    இதில் மகாலிங்கத்துக்கும், வானம்மாளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதற்கிடையே காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த முத்துசாமி, சிவக்குமார், வெங்கடேசன் ஆகிய 3 பேரின் வீடுகளுக்கும் தீ பரவியது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

    இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 4 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்தில் வெங்கடேசன் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 15 மூட்டை விதை நெல், ரே‌ஷன் கார்டு, வீட்டின் பத்திரம் மற்றும் பல்வேறு பொருட்கள் எரிந்தன.

    இதேபோல் சிவக்குமார் வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் 25 மூட்டை விதை நெல் எரிந்து நாசமானது.

    சுப்பிரமணியன் வீட்டில் இருந்த 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம், 50 மூட்டை விதை நெல் உள்பட பல பொருட்கள் எரிந்தன.

    இந்த தீ விபத்தில் 4 வீடுகளிலும் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த மகாலிங்கம், வானம்மாள் ஆகியோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

    பெண்ணாடம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் திட்டக்குடியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்துதான் தீயணைப்பு வீரர்கள் வரவேண்டி உள்ளது. அவர்கள் 18 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருவதற்குள் தீ எரிந்து முடிந்து விடுகிறது.

    கடந்த 20 ஆண்டு காலமாக இந்த நிலைதான் ஏற்படுகிறது. எனவே, பெண்ணாடம் பகுதியில் தீயணைப்பு நிலையம அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×