search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி அதிகாரி"

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சி அதிகாரியின் காரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் பணம் சிக்கியது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாகவும், முடித்த பணிகளுக்கு பணத்தை வழங்குவதிலும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

    நேற்று இரவும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 9 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் மாடசாமி (வயது 48) திடீரென தனது காரில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தார்.

    அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரது காரை சோதனை செய்தனர். காரில் 3 லட்சத்து 52 ஆயிரமும், மாடசாமி சுந்தர ராஜின் சட்டைப்பையில் ரூ.18 ஆயிரமும் இருந்தது. காரில் இருந்த பை ஒன்றை சோதனை செய்தபோது அதில், ரூ.39 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.4 லட்சத்து 9 ஆயிரம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மாடசாமி சுந்தரராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முறையான பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்களையும் காட்டவில்லை.

    நள்ளிரவு 1.30 மணி வரை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் விசாரணைக்கு பிறகு அடுத்த விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று கூறி மாடசாமி சுந்தரராஜை அனுப்பி வைத்தனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய மாடசாமி சுந்தரராஜின் சொந்த ஊர் நெல்லை வண்ணார்ப்பேட்டை ஆகும். தினமும் ஊரில் இருந்து தான் பணிக்கு வந்து சென்றுள்ளார்.

    மாடசாமி சுந்தரராஜிடம் இருந்து ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிகிறது. அதன் பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட போதுசெயல் அலுவலர் மேஜை டிராயரில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×