search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக்கில் அவதூறு"

    பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதால் மனமுடைந்த அரசு பெண் டாக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் விஜயகுமார் (வயது 30). ஸ்டுடியோ உரிமையாளர். இவர், கடந்த புதன்கிழமை தனது மனைவி ஜோதியை (27) அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவுக்கு வந்தார்.

    பணியில் இருந்த மகப்பேறு டாக்டர் பவானியிடம் சென்று தங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளது. மீண்டும் கருவுற்றுள்ள தனது மனைவிக்கு கருக்கலைப்பு செய்யுங்கள் என்று விஜயகுமார் கூறினார். அதற்கு, கருக்கலைப்புடன் சேர்த்து குடும்ப கட்டுப்பாடும் செய்து கொள்ளுங்கள் என டாக்டர் பவானி கூறினார்.

    இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜய குமார், வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் டாக்டர் பவானியின் போட்டோவை ஆபாசமாக பதிவிட்டு அவதூறான தகவல் பரப்பினார். இந்த தகவலுக்கு விஜயகுமார் நண்பர்கள் பலர் பதிலளித்து ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டது பெண் டாக்டர் பவானிக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் டாக்டர் பவானி அளித்த புகாரின்பேரில், விஜயகுமார் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் ஒன்றுகூடி விஜய் குமாரின் கருத்துக்கு பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்து பதிவிட்டவர்களில் குறைந்தது 10 பேரையாவது கைது செய்ய வேண்டும்.

    அவர்கள் மீது மருத்துவமனை மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48-ன் கீழ் வழக்குப்பதிய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டம் செய்தனர். தொடர்ந்து 2 நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை கைவிடவில்லை என்றால் டாக்டர்கள் மீது துறை ரீதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரி டீன் நடராஜன் எச்சரித்தார். மேலும், உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்த நோயாளிகளுக்கு டீன் மற்றும் சீனியர் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    தன்னை பற்றி அவதூறு பரப்பியதால் மனமுடைந்த நிலையில் இருந்த டாக்டர் பவானி இன்று அதிகாலை தனது வீட்டில் அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் பவானி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    டாக்டர் தற்கொலை முயற்சியால் அதிர்ச்சியடைந்த சக டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்புக்குள்ளாகினர்.

    தற்கொலைக்கு முயன்ற பெண் டாக்டர் பவானிக்கு 31 வயதாகிறது. இவருடைய கணவர் சூரியபிரகாஷூம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×