என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொள்ளாச்சி மாணவி கொலை"
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி, பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பிர கதிக்கு நாட்டுதுரை என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. உறவினர்கள், நண்பர்களை திருமணத்திற்கு அழைக்க பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட பிரகதியை காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கோவை காட்டூர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் கல்லூரி மாணவி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன பிரகதி நேற்று முன்தினம் பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் ரோட்டோரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆடைகள் கலைந்து இருந்ததால் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா நேற்று காலை பூசாரிபட்டிக்கு வந்து கல்லூரி மாணவியின் உடல் கிடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி தலைமையில் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார் (பொள்ளாச்சி), பாலமுருகன் (பேரூர்), இன்ஸ்பெக்டர்கள் வைரம், வெற்றிவேல்ராஜன், பாலமுரளிசுந்தரம் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலங்கியது. பரபரப்பு தகவல்களும் வெளியாயின. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
மாணவி பிரகதி காணாமல் போனதை தொடர்ந்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், மாணவி பிரகதியை ஒரு வாலிபர் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
மேலும் பிரகதியின் செல்போனில் பதிவாகி இருந்த எண்களை ஆய்வு செய்தபோது, இந்த கொலையில் முக்கிய துப்பு கிடைத்தது. பிரகதியின் உறவினர் சதீஷ்குமார் (30) என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். தலைமறைவான அவரை போலீசார் பல இடங்களில் தேடி ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பிரகதி பள்ளியில் படிக்கும் போது இருந்து அவருக்கும், சதீஷ்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சதீஷ்குமார், பிரகதியை முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் பிரகதியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஆனாலும் பிரகதியும், சதீஷ்குமாரும் ஒருவரை ஒருவர் விரும்பி உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் சதீஷ்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொடுவாயூரில் சதீஷ்குமார் அடகு கடை நடத்தி வந்தார். கோவையில் பிரகதி கல்லூரியில் படித்து வந்ததால், மனைவிக்கு தெரியாமல் அவர், பிரகதியை அடிக்கடி வந்து சந்தித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவி பிரகதியை சந்திப்பதற்காக சதீஷ்குமார் காரில் வந்துள்ளார். பிரகதி அவருடன் காரில் சென்றார். இருவரும் பொள்ளாச்சி பகுதியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது, தனக்கு திருமணம் நிச்சயமான விவரத்தை மாணவி பிரகதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், கத்தியால் பிரகதியின் கழுத்தில் குத்தி கொலை செய்து பிணத்தை பூசாரிப்பட்டி பகுதியில் போட்டுவிட்டு காரில் தப்பிச்சென்றுவிட்டார். கோவை காட்டூர் போலீசார் மாணவி காணாமல் போனது குறித்து, முதலில் மாணவியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் சதீஷ்குமாரை போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். சதீஷ்குமார் மனைவி, குழந்தையுடன் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து, பிரகதி காணாமல் போனது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
இதனால் அவரை போலீசார் சந்தேகப்படாமல் விட்டு விட்டனர். பின்னர்தான் அவர் பிரகதியை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு, போலீஸ் நிலையத்துக்கு குடும்பத்துடன் வந்து சதீஷ்குமார் நாடகமாடியது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் உடல் கிடந்த பகுதியான கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படையினர் சதீஷ்குமாரை தேடியபோது, அவர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி நேற்று அவரை கைது செய்தனர். மாணவியை அழைத்து செல்ல பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கைதான சதீஷ்குமார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நெல்லுக்குழிகாடு பகுதியை சேர்ந்தவன். என்னுடைய தந்தை தங்கராஜ். ரூ.40 லட்சம் கடன் இருந்ததால் என்னுடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். நான் பிரகதியை விரும்பினேன். பிரகதியும் என்னை விரும்பினார். ஆனால் எனக்கு பிரகதியை திருமணம் செய்து கொடுக்க அவளுடைய பெற்றோர் மறுத்துவிட்டனர்.
எனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நடைபெற்றது. இருந்தாலும் தொடர்ந்து பிரகதியுடன் பழகினேன். கோவையில் கல்லூரியில் படித்து வந்த பிரகதிக்கு பரிசு பொருட்கள், சேலை, நகைகள் வாங்கி கொடுத்துள்ளேன். ஏற்கனவே 10 பவுன் தங்கநகை வாங்கி கொடுத்தேன்.
இதற்கிடையே மீண்டும் 10 பவுன் தங்க நகை வாங்கி தருமாறு என்னிடம் கேட்டாள். வேறு ஒருவருடன் பிரகதிக்கு திருமணம் நடைபெறுவது எனக்கு பிடிக்கவில்லை. திருமணம் ஆனாலும் என்னுடன் பழகுவேன் என்று பிரகதி கூறினாள். ஆனாலும் பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது என்று கருதினேன். வழக்கமாக பிரகதியை கோவையில் இருந்து பல்லடம் வரை அழைத்து சென்று விடுவேன்.
கடந்த வெள்ளிக்கிழமை (5-ந் தேதி) காரில் பல்லடத்துக்கு அழைத்து செல்லாமல் கோமங்கலத்துக்கு அழைத்து சென்றேன். காரில் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். இந்த நிலையில் நான் ஏற்கனவே தயாராக வைத்து இருந்த கத்தியால் பிரகதியின் நெஞ்சு மற்றும் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு உடலை பூசாரிபட்டி பகுதியில் வீசி சென்றேன். போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
பிரகதியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 3 மணி நேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவியின் கழுத்து மற்றும் நெஞ்சில் கத்திக்குத்து காயமும், கையால் தடுத்ததால் அவரின் கைவிரல் அறுபட்டு இருந்ததும் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
கல்லூரி மாணவியை, உறவினரே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் கோவையில் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PollachiIssue
கோவை
கோவையில் மாயமான கல்லூரி மாணவி பிரகதி பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் சென்றனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதில் ஒரு தனிப்படையினர் காந்திபுரம், பொள்ளாச்சி, பல்லடம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் மாணவியின் செல்போன் அழைப்புகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறுகையில், மாணவி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் துப்பு கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces
கோவை:
கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி பிரகதியின் சொந்த அண்ணன் அரவிந்த்குமார் கூறியதாவது:-
எனது தந்தை விவசாயி. நானும் விவசாயி. எனது தங்கை நன்றாக படிப்பார். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். 2.30 மணிக்கு பிரகதி எங்கள் அம்மாவை போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வர பஸ் ஏற நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.
3.30 மணிக்கு பிரகதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுதுரை தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது பல்லடம் வந்து கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
அதன்பின்னர் பிரகதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியடைந்த நாங்கள் பல்லடம் போலீசில் புகார் செய்ய சென்றோம். பல்லடம் போலீசார் நீங்கள் கோவை போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர்.
உடனே கோவைக்கு புறப்பட்டோம். கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தோம். இந்நிலையில் எனது தங்கை மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கோவை, பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வருவது அதிக கவலை அளிக்கிறது.
கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்