search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் துப்பாக்கிகள்"

    தூத்துக்குடி கலவரத்தில் துப்பாக்கிசூடு நடத்த போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகள் கோவில்பட்டி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கிற்கு தேவையான ஆவணங்களை சேகரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. துப்பாக்கி சூடு வழக்கின் முக்கிய ஆவணங்களான பிரேத பரிசோதனை அறிக்கை கோர்ட்டு மூலம் பெறப்பட்டுள்ளது.

    தீவைப்பு மற்றும் கலவரத்தில் சேதம் அடைந்த அனைத்து கார்களும் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விசாரணை அதிகாரிகள் மற்றும் தடயவியல் மூலம் சோதனை செய்யப்பட்டன.

    மேலும் கலவரம் நடந்த அனைத்து பகுதிகளிலும் தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்குலம் அங்குலமாக தடயங்களை தேடினர். இதில் 2 துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணாடி துண்டுகள், கற்கள் உள்பட பல தடயங்கள் சிக்கி உள்ளன.

    அதேநேரத்தில் கலவரம் நடந்த பல இடங்களில் மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு விட்டன. இந்த குப்பைகள் அனைத்தும் தருவைகுளம் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குப்பைக்கிடங்கில் கடந்த 3 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

    கடந்த 5 நாட்களாக நடந்து வரும் தேடுதல் வேட்டையில் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான தடயங்கள் சிக்கியுள்ளன. இதில் பல தடயங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    இது தவிர 2 சாக்கு மூட்டைகளில் சந்தேகப்படும்படியான தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதனை ஆய்வு செய்து வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    மேலும் துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்பட்டதாக 303 ரக துப்பாக்கிகள் 5, எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் 5, கைத்துப்பாக்கிகள் 3 ஆகியவை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டன. அவை தூத்துக்குடி ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

    அந்த துப்பாக்கிகளை வழக்கு விசாரணைக்காக சென்னை கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவற்றை கோர்ட்டில் ஒப்படைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கோவில்பட்டி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று ஒப்படைக்கின்றனர்.
    ×