search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்"

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில் ரூ.5 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் கட்டப்படும் நீச்சல் குளத்துக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.
    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு பாத்திமா கோவில் அருகே 175 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 12½ ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்துடன் ரூ.5 கோடி மதிப்பில் புதிய நீச்சல் குளம் கட்டப்படுகிறது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

    அப்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 கோடி செலவில் சர்வதேச தரத்தில் புதிய நீச்சல்குளம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று (அதாவது நேற்று) அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி நீச்சல் குளம், உடற்பயிற்சி குளம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான நிதி தமிழக அரசு நிதியாகும்.

    உயர்கல்வி துறையை பொறுத்த வரையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் 506 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. செப்டம்பர் 1-ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக கோர்ட்டில் நாங்கள் அனுமதி பெற்றுவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், பொருளாளர் தச்சை கணேசராஜா, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
    நெல்லை:

    நெல்லை பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் சார்பில் டிவிஎஸ் பயிற்சி மையம் மூலமாக ஐசிஐசிஐ வங்கிக்கு இருபாலரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். எல்-டி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு அதிகாரி பணியிடத்துக்கு ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான வளாகத்தேர்வு நாளை (12-ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பல்கலைக்கழகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கில் நடைபெறுகிறது.

    கலை, அறிவியல் படிப்பை முடித்த பட்டதாரிகளும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். 26 வயதுக்குள் இருக்கவேண்டும். விருப்பமுள்ளவர்கள் கல்விச் சான்றிதழ்களின் நகல், சுயதகவல் பதிவேடு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரவேண்டும். பதிவு கட்டணம் கிடையாது. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

    முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களும் கலந்துகொள்ளலாம். இவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் பயிற்சிக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் பணியமர்த்தப்படுவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
    ×