search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • பிரதாப் சந்திர சாரங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • எதிர்க்கட்சித் தலைவரைப் போல் அல்லாமல் பவுன்சர் போல் நடந்து கொண்டார்.

    புதுடெல்லி:

    அம்பேத்கரை மத்திய மந்திரி அமித்ஷா அவமதித்ததாக கூறி கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

    பதிலுக்கு பா.ஜ.க. எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் ஒடிசா மாநிலம் பாலசோரைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    ராகுல்காந்தி தன்னை கீழே தள்ளியதாக அவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. காயம் அடைந்த பிரதாப் சந்திர சாரங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்தநிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்பை விட தற்போது நலமாக உள்ளேன். என் தலையில் உள்ள தையல்கள் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின்போது திடீரென ராகுல் காந்தி தனது கட்சியினருடன் வந்து முன்நோக்கி தள்ளினார்.

    லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரைப் போல் அல்லாமல் பவுன்சர் போல் நடந்து கொண்டார். ஒரு காலத்தில் வாஜ்பாய் போன்ற பெரியவர்கள் இந்த பதவியில் இருந்திருக்கிறார்கள் என்றார்.

    • சோலே பதுரா மற்றும் பல வகையான உணவுகளை அவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.
    • ராகுல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அதானி விவகாரம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சைப் பேச்சுக்கான போராட்டம் என பல்வேறு சூடான நிகழ்வுகள் தற்போது நடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் நடந்து முடிந்தது.

    இந்த சூடான நிகழ்வுகளில் பங்கேற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தாய் மற்றும் தங்கையுடன் தனியார் ஓட்டலில் மதிய உணவருந்தி மகிழ்ந்துள்ளார்.

    தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவிட டெல்லியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலுக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகள் மரியா வதேரா மற்றும் ராபர்ட் வதேராவின் தாயார் ஆகியோர் நேற்று சென்றனர். அந்த ஓட்டலின் சிறந்த உணவான சோலே பதுரா மற்றும் பல வகையான உணவுகளை அவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.

    அந்த ஓட்டலில் சாப்பிட்டு மகிழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களை ராகுல் காந்தி `குவாலிட்டி உணவகத்தில் மதிய உணவு 'என குறிப்பிட்டு அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் ராபர்ட் வதேரா பெரிய அளவிலான சோலே பதுராவை பரிமாறுவதும் , சோனியா காந்தி தன்முன்னே பஞ்சு போன்ற சோலே பதுரா இருப்பதை பார்த்து புன்னகைப்பதும் போல் உள்ள அவர்களது குடும்பத்தினரின் மகிழ்வான தருணங்களின் படங்கள் அதில் பதிவாகி உள்ளன.

    குடும்பத்தோடு உள்ள படம் என்றாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என 3 எம்.பி.க்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்கள் சென்று மகிழ்ந்த குவாலிட்டி ஓட்டல் டெல்லியில் தனித்தன்மையுடன் விளங்கும் நீண்ட பாரம்பரியம் கொண்ட உணவகமாகும். 

    • காங்கிரஸ் தலைவர்களும் பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
    • பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தள்ளு முள்ளுவில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து பாராளுமன்ற சாலை போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரில், ராகுல் காந்தி வேண்டும் என்றே தள்ளிவிட்டதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைய நேரிட்டது என்று குறிப்பிடப்பட்டது.

    இதையடுத்து பாராளுமன்ற சாலை போலீசார் 5 பிரிவுகளில் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரிவு 117 (படுகாயம் ஏற்படுத்துதல்), 125 (பிறர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல்), 131 (குற்றவியல் பலவந்தப்டுத்துதல்), 351 (வன்முறை), பிரிவு3 (5) (உள்நோக்கத்துடன் செயல்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற சாலை போலீசாரிடம் பா.ஜ.க. தலைவர்கள் பிரிவு 109 (கொலை முயற்சி) சட்டத்தின்படி ராகுல் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார்கள். ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை.

    என்றாலும் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்துவது பற்றி பாராளுமன்ற சாலை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

    பாராளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்ய அனுமதி கோரியுள்ளனர். அதன் அடிப்படையில் ராகுலிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ராகுலை விசாரணைக்கு ஆஜராக வருமாறு சம்மன் அனுப்பவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது காங்கிரஸ் தலைவர்களிடம் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து காங்கிரஸ் தலைவர்களும் பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

    அவர்கள் புகார் மனுவில், "பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது. இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவரை காங்கிரசார் கொடுத்த புகார் மனு மீது போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது அம்பேத்கர் விவகாரத்தில் ராகுலுக்கு அளிக்கப்பட்ட கவுரவம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் எக்ஸ் வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் கூறுகையில், "ராகுல் மீது இதுவரை 26 எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை களுக்கு பயப்பட மாட் டோம்" என்று கூறியுள்ளார்.

    மேலும் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பா.ஜ.க. தலை வர்கள் மீது கொடுத்த புகா ரின் மீது போலீசார் ஏன் வழக்குப்பதிவு செய்ய வில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கனிமொழி நோட்டீஸ்.
    • பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணி.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கியது.

    அதானி குழும விவகாரம், உ.பி. கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    மேலும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவற்றை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, சபைக்கு அதன் சொந்த மரியாதை, உயர்தரம், கண்ணியம் உள்ளது. அவற்றை யாரும் தாழ்த்த முயற்சிக்க வேண்டாம். நாம் அனை வரும் சபையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்.

    ஆனால் சில நாட்களாக நல்லதல்லாத சில விஷயங்கள் நடந்ததை நான் கண்டேன். இந்த சம்பவங்களில் மூத்த தலைவர்கள் கூட பங்கேற்றது கவனிக்கத்தக்கது, இது நல்லதல்ல என்றார்.

    பின்னர் கேள்வி நேரத்தை பிர்லா தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளை எழுப்ப முற்பட்டனர்.

    அவர்களிடம் சபாநாயகர் சபையை சாதாரணமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

    ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    அதேபோல் மேல்-சபை இன்று கூடியதும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். இரு தரப்பு எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பியதால் கூச்சல்-குழுப்பம் நிலவியது. இதனால் மேல்-சபையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்தார்.

    மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

    இந்த நிலையில் டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக குறித்து பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. பாராளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கினார்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூரும் நோட்டீஸ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக இன்று காலை பாராளுமன்றத்தின் பிரதான குழு அறையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்தது.

    இதில் பிரியங்கா காந்தி உள்பட எம்.பிக்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் காங்கிரஸ் எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    பிரதமர் மோடி, அதானி ஒன்றாக இருக்கும் புகைப்படம் பொறித்த பையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் அதானி விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராகவும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

    இதற்கிடையே பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், மாநிலங்களவையில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும், மக்களவையில் உள்ள சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் பல கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர்.

    ராகுல் காந்திக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் மக்களின் வலி மற்றும் பிரச்சனைகளை அவரால் உணர முடியவில்லை. ஆனால் அதை மற்ற எம்.பி.க்கள் உணருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
    • மோடி, அதானி போன்ற தொழில் அதிபர்களையும் மக்களையும் வெவ்வேறாக கருதுகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்றார்.

    தொடர்ந்து அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வயநாடு வந்தார். அவருடன் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அவரது சகோதரருமான ராகுல்காந்தியும் வந்திருந்தார்.

    அவர்கள் இருவரும் மலப்புரம், நிலம்பூர், வண்டூர், எடாவண்ணா, ஏர்நாடு பகுதிகளில் நடை பெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, வயநாடு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவியை விடுவிக்காமல் பிரதமர் மோடி பாரபட்சமாக செயல்படுகிறார். குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென அரசமைப்பு சட்டம் கூறுகிறது.

    ஆனால் பிரதமர் மோடி, அதானி போன்ற தொழில் அதிபர்களையும் மக்களையும் வெவ்வேறாக கருதுகிறார் என்றார்.

    பிரியங்கா காந்தி பேசும் போது, வயநாடு மக்களுக்கான என்னுடைய போராட்டம் தொடங்கிவிட்டது. உங்களது பிரச்சனைகள் என்ன என்பது எனக்கு தெரியும். அவற்றை தீர்த்து வைப்பது தான் எனது முதல் கடமை. பா.ஜ.க.வுக்கு அரசியல் மரியாதை எதுவும் தெரியாது.

    நாட்டில் தேர்தல் நடை முரைகள் குறித்த நம்பிக்கை போய்விட்டது. நாட்டை நிலைநிறுத்தும் அடிப்படை அம்சங்களுக்காக நாம் போராட வேண்டும் என்றார். நேற்று பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற ராகுல்காந்தி, அதன்பிறகு டெல்லி சென்றார்.

    ஆனால் பிரியங்கா செல்லவில்லை. அவர் வயநாடு தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி, பல வழிகளில் இன்று நாம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்றது என்றார். மேலும் வயநாடு மக்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எனது குரல் தெரிவிக்கும் என்றார்.

    • கட்சியின் செயல்பாடு குறித்தும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு.
    • ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி அளிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) டெல்லியில் கூடுகிறது.

    பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், அதானி நிறுவனம் மீதான லஞ்ச புகாா், மணிப்பூா் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பாராளுமன்றத்தில் எழுப்பி ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி அளிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

    காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட பிற செயற்குழு உறுப்பினா்களும் பங்கேற்க உள்ளனா்.

    அண்மையில் நடந்து முடிந்த ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தோ்தல்களில் கட்சியின் செயல்பாடு குறித்தும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    அடுத்து வரவிருக்கும் டெல்லி சட்டசபை தோ்தலுக்கான கூட்டணி வாய்ப்புகள், அடுத்த ஆண்டு வரவிருக்கும் பீகாா் சட்டசபை தோ்தலுக்கான தயாா்நிலை குறித்தும் கட்சியின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த செயற்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மாநில அரசின் ஒருபக்க சார்பும் நடவடிக்கைகளும் துரதிர்ஷ்டவசமானது.
    • ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உத்தரபிரதேச மாநிலம் சம்பல் வன்முறை குறித்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தின் சம்பல் பகுதியில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், மாநில அரசின் ஒருபக்க சார்பும், அவசர நடவடிக்கைகளும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாவட்ட அல்லது மாநில நிர்வாகம், அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் பெறாமல் உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், நடவடிக்கையை மேற்கொண்டு, ஏற்கனவே இருக்கும் சூழலை மேலும் சீர்குலைத்து மோதலை உண்டாக்கி, மக்கள் உயிரிழக்க வழிவகுத்துள்ளது. இதற்கு பா.ஜ.க. அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

    இந்து-முஸ்லிம் சமூக மக்களுக்கு இடையே பிளவையும், பாகுபாட்டையும் உருவாக்கவே பா.ஜ.க. தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. மாநிலத்தின் அல்லது நாட்டின் நலனுக்கோ அல்ல. இந்த விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது. இதன்மூலம் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு முற்றிலும் பொய்துள்ளது.

    81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி படுதோல்வி அடைந்தாலும் ஜார்கண்டில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இந்தியா கூட்டணிக்கு அபார வெற்றியை பரிசளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜேஎம்எம் கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்துகள். இது அரசியல் சாசனத்துடன் நீர், காடுகள் மற்றும் நிலங்களின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    • வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
    • வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் ஓட்டலில் வாக்காளர்களை கவருவதற்காக வினோத் தாவ்டே ரூ.5 கோடி பணப்பட்டுவாடா செய்ததாக பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் ஹிதேந்திர தாக்கூர் குற்றம் சாட்டினார்.

    வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாருக்கெல்லாம் பணத்தை பிரித்து தர வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய டைரியும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து, வினோத் தாவ்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே மறுத்துள்ளார்.

    இதனிடையே பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "ரூ.5 கோடி பணம் எங்கிருந்து வந்தது?. பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து உங்களுக்கு டெம்போவில் அனுப்பியது யார்?" என்று பதிவிட்டுள்ளார்.

    • மோடி அவர்களே, சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும்?
    • ரெயில்வே துறையின் அலட்சியம், குறைந்த ஆள்சேர்ப்பு ஆகியவைதான் இந்த உயிரிழப்புக்கு காரணம்.

    புதுடெல்லி:

    லக்னோ-பரவுனி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில், பீகார் மாநிலம் பரவுனி ரெயில் நிலையத்தில் நேற்று வந்தடைந்தது. அப்போது ரெயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில், அருண்குமார் ராவத் என்ற ஊழியர் ஈடுபட்டு இருந்தார்.

    அந்த சமயத்தில் ரெயில் பெட்டிகளுக்கு இடையில் ஊழியர் இருப்பதைக் கவனிக்காத லோகோ பைலட், ரெயிலை இயக்கியுள்ளார். ரெயிலை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால், பெட்டிகளுக்கு இடையில் இருந்த அருண் குமார் உடல் நசுங்கி பலியானார்.

    இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, லோகோ பைலட் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இந்த நிலையில் ரெயில்வே துறையின் அலட்சியத்தால்தான் ஊழியர் பலியானதாக பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியதாவது:-

    மோடி அவர்களே, சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும்? அதானியை பாதுகாப்பதில் மட்டுமே நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள். ரெயில்வே துறையின் அலட்சியம், குறைந்த ஆள்சேர்ப்பு ஆகியவைதான் இந்த உயிரிழப்புக்கு காரணம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியாவில் சாதி அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது.
    • நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டுமானால் அதனை ஒழிக்க வேண்டும்.

    திருப்பதி:

    கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது.

    இதில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, அமைச்சர்கள் சாதி சங்கங்களின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

    இந்தியாவில் சாதி அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. சாதி கொடுமைகள் மேல் சாதியினருக்கு ஒருபோதும் தெரிவதில்லை.

    சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் மக்களுக்கு நீதி கிடைக்கும். சாதி அமைப்பு அனைத்து துறைகளிலும் உள்ளது. அரசியல் மற்றும் நீதித்துறையில் அது வலுவாக வேரூன்றியுள்ளது.

    சாதி அமைப்பு சிலரது தன்னம்பிக்கையை குலைக்கிறது. இதனால் இளைஞர்கள் கூட முன்னேற முடியாத சூழல் உருவாகி வருகிறது.

    உலகில் எங்கும் இல்லாத இந்த சாதி அமைப்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது. சாதி பாகுபாடுகளால் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டுமானால் அதனை ஒழிக்க வேண்டும்.

    "அதிகாரத்துவ சாதிக் கணக்கெடுப்பை நாங்கள் விரும்பவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கேட்கும் கேள்விகளை எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து முடிவெடுக்கும் சில அதிகாரிகளை நாங்கள் விரும்பவில்லை.

    "சாதிக் கணக்கெடுப்பில் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதை இந்திய மக்கள் கேட்டுத் தீர்மானிக்க வேண்டும்.

    இதுபற்றி தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பெண்கள் முடிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை உறுதி செய்வதில் முழு உறுதியுடன் இருக்கிறோம். காங்கிரஸ் சார்பில், தேசிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு என்ற செயற்கைத் தடையை தகர்க்கவும் பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்புகிறார்.
    • பிரியங்கா காந்தி வருகிற 7-ந்தேதி வரை வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார்.

    வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானது. அதேபோன்று செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்றதால் அந்த தொகுதிகளும் காலியாகின.

    இதனால் வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிந்தது.

    வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

    அவர்களுடன் சேர்த்து வயநாடு தொகுதியில் மொத்தம் 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதில் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ், சத்யன் மொகேரி உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.

    வேட்புமனு தாக்கல் செய்த கடந்த மாதம் 23-ந்தேதியே, பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக ராகுல்காந்தியும் பிரசாரம் செய்தார். அவர்கள் இருவரும் வாகனத்தில் ரோடு-ஷோ சென்றும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியும் ஆதரவு திரட்டினார்கள்.

    அதன் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் டெல்லிக்கு திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அவர்கள் இருவரும் மீண்டும் கேரளாவுக்கு நாளை(3-ந்தேதி) வருகின்றனர்.

    அவர்கள் நாளை காலை 11 மணிக்கு மானந்தவாடி காந்தி பூங்கா பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகின்றனர். மாலை 3 மணிக்கு அரிக்கோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.

    ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் 2-வது நாளாக நாளை மறுநாள் (4-ந்தேதி) கூட்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். காலை 10 மணிக்கு சுல்தான்பத்தேரி, 11 மணிக்கு புல்பள்ளி, 11.50 மணிக்கு முள்ளென்கொல்லி, மதியம் 2 மணிக்கு கல்பெட்டா, மாலை 3.50 மணிக்கு வைத்திரி ஆகிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

    2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்புகிறார். ஆனால் பிரியங்கா காந்தி வருகிற 7-ந்தேதி வரை வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் திறந்த வாகனத்தில் சென்ற படி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவார் எனவும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

    ×