என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராஜாஜி ஹால்"
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழியும், பொது மக்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.
கருணாநிதியின் உடலை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலர் தடுப்புகளை தகர்த்து விட்டு சென்றனர். ஒரு கட்டத்தில் முக்கிய பிரமுகர்களின் பாதையில் பொதுமக்கள் புகுந்தனர். இதில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் 26 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செண்பகம் (60), ஒரு ஆண் ஆகியோர் இறந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சரவணன் (37), துரை (56) ஆகியோர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
பலியான துரை மதுரை மதிசியம் பகுதியை சேர்ந்தவர். தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளரான இவர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஏற்கனவே 2 முறை சென்னை வந்துள்ளார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவர் ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.
காயமடைந்த மற்ற 22 பேரில் 15 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தை வேலு, அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த தங்கராஜ், சத்யா, கென்னடி, வேலூரை சேர்ந்த ஜெயராமன், காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு ஆகிய 7 பேர் தற்போது ஆஸ்பத்திரியில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பிய மயிலாப்பூரை சேர்ந்த ஜெகதீஷ் கார்த்திக் என்ற வாலிபரும் பலியானார்.
நேற்று காலை 11 மணி அளவில் கருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜெகதீஷ் கார்த்திக், மாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் மனைவி சுமித்ராவிடம் தண்ணீர் வாங்கி குடித்த அவர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.
இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த ஜெகதீஷ் கார்த்திக்குக்கு 13 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். ஜெகதீஷ் தனியார் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வந்தார்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்த வண்ணம் இருந்தனர். கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு மக்கள் அதிக அளவில் குவிய தொடங்கினார். அதேவேளையில் போலீசாரால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையே பொதுமக்கள் கருணாநிதி உடல் அருகே சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் ராஜாஜி ஹாலில் மக்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசான லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை சரிபடுத்தினார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையும் சொல் லொணாத் துயரமும் அடைந்தேன்.
நான் 1972-ம் ஆண்டில் கலைஞரை சந்தித்து அறிமுகமானேன். 15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருடன் நெருக்கமாகப் பழகியவன். சட்டமன்றத்தில் பா.ம.க சார்பில் நான் முன் வைத்து வாதாடியதை ஏற்றுக்கொண்டு நிறைய சட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும் கொண்டு வந்தவர். அவர் காலத்தில் பா.ம.க வால் சட்டமன்றத்தின் மூலம் நிறைய சாதனைகளை செய்ய முடிந்தது.
அவரது முதிர்ந்த வயதிலும் அனுபவத்திலும் என் மீது காட்டிய பாசம், அன்பு அளவிடற்கரியது. மருத்துவர் அய்யாவை பல்வேறு நிகழ்ச்சிகளின் மேடைகளில் கலைஞர் பேசும்போது மருத்துவர் அய்யா என்று பாராட்டி பலமுறை பேசியது மனதில் என்றும் மறக்க முடியாதது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #karunanidhi #dmk
4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.
மக்கள் வருகை அதிகரித்ததால் இந்த 3 சாலைகளிலும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் புளிசாதம், இட்லி, தயிர் சாதம் போன்றவை விற்பனை செய்யப்பட்டன. பொது மக்கள் அவற்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கேயே சுற்றியப்படி காணப்பட்டனர்.
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவு வெளியிட்டதும் அண்ணாசாலை, வாலாஜா சாலை, சிவானந்த சாலை ஆகியவற்றில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.
ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதனால் மதியம் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக திணற நேரிட்டது.
விழுப்புரம்:
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப் புரம்-புதுவை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந் தூர்பேட்டை, திருநாவலூர், மரக்காணம் உள்பட பல இடங்களிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடை மற்றும் பார்களும் அடைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பணி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள், பொதுமக்கள் தவித்தனர். பின்னர் அவர்கள் ஆட்டோ மூலம் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. விழுப்புரம் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.
புதுவையில் இருந்து இன்று காலை சென்னைக்கு சென்ற ரெயில் விழுப்புரத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்தது. அந்த ரெயிலில் சென்னைக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.
பஸ்கள் ஓடாததால் பல ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
இன்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. கடலூர் லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் சாலை, பாரதி சாலை உள்பட பல சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின.
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பின.
பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டதால் கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு கூடிய பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஆட்டோக்களை வரவழைத்து அதன் மூலம் அவர்களை பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி உள்பட பல இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல ஊர்களின் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.
புதுச்சேரி:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு புதுவை அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களுக்கும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.
நகரின் பிரதான சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தது. மார்க்கெட்டுகள் இயங்கவில்லை. சினிமா காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தொழிற்பேட்டைகள் இயங்க வில்லை.
சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டே இருந்தது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
புதுவை முழுவதும் ஆங் காங்கே தி.மு.க.வினரால் கருணாநிதியின் உருவப்படம் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு இருந்தது. #RIPKarunanidhi #Karunanidhideath #dmk
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்