search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை"

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள்.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்தபோது தற்காலிகமாக டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

    மாத சம்பளம் ரூ.70 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

    கொரோனா பணியில் ஒருவாரம் தொடர்ச்சியாக ஈடுபடும் டாக்டர்கள் தனியார் ஓட்டல்களில் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அரசின் சார்பில் அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு போன்றவை வழங்கப்பட்டது.

    அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்த 2 பெண் மருத்துவர்கள் தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். அவர்களை உடன் பணிபுரிந்த டாக்டர்கள் வெற்றிச்செல்வன் (35), மோகன்ராஜ் (28) ஆகியோர் பாலியல் சீண்டல் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

    2 டாக்டர்கள் டிஸ்மிஸ்

    அதில் ஒரு பெண் மருத்துவரை கற்பழிப்பு செய்ததாகவும், மற்றொருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவத்துறை மூலமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பெண் மருத்துவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர்கள் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, பெண் மருத்துவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை அடுத்து துறை ரீதியான டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பெண் மருத்துவர்களும் திருமணம் ஆகாதவர்கள். அவர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படியுங்கள்...விவசாயிகள் பட்ட கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பது? -மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

    ×