search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்புத்துறை"

    பதிவுத்துறை அதிகாரியின் மாமனார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கும்பகோணம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் மேலாளராக உள்ளார்.

    ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விளாத்திகுளம் சப்- ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். அங்கு பத்திரப்பதிவின்போது பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி சோதனையிட்டதில் அவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

    தொடர்ந்து, அவர் கும்பகோணம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேலாளராக பணி இடமாற்றம் செய்யப்படார்.

    இதற்கிடையே கணக்கில் வராத பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ரவிச்சந்திரன், அவரது மனைவி சுதா மற்றும் மாமனார் சுந்தரராஜன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 6 வீடுகள் உள்ளது. இந்நிலையில் ரவிச்சந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா, ஜெயராணி ஆகியோர் தலைமையில் 2 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதே போல் அங்குள்ள அவரது மாமனார் சுந்தரராஜனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சாம்வின்சென்ட். சைதாப்பேட்டை சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சரவணன்.

    இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள காவல் ஆய்வாளர் குடியிருப்பிலும், இன்ஸ்பெக்டர் சரவணன் புழுதிவாக்கம் ஜெகலட்சுமி நகரிலும் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளிலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    லஞ்ச குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சாம்வின்சென்ட், சரவணன் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை காவல்துறையில் உள்ள விபசார தடுப்பு பிரிவில் பணிபுரிந்தனர். அப்போது இருவர் மீதும் விபசார புரோக்கர்கள் மற்றும் விபசார கும்பலிடம் லஞ்சமாக பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக இருவர் மீதும் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது 13(2), 13(1)(டி) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையிலேயே இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

    கீழ்ப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தியது அங்கு வசித்து வரும் மற்ற அதிகாரிகள் மத்தியிலும், அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    காவல்துறையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியிலும் இந்த சோதனை பரபரப்பான பேச்சாக மாறி இருந்தது.

    இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட், சரவணன் இருவரும் விபசார தடுப்பு பிரிவில் கடந்த 2018-ம் ஆண்டு பணிபுரிந்தபோது விபசார கும்பலிடம் பணபலன்களை பெற்றுக்கொண்டு பயன் அடைந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    இந்த காலகட்டத்தில் அவர்கள் தவறாக முறைகேடான வழியில் யார், யாரிடம் பணம் பெற்றுள்ளார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இருவரும் லஞ்ச புகாரில் சிக்கிய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சாம்வின்சென்ட், சரவணன் இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் வரை நீடித்தது. இன்று மாலையில் சோதனை முடிந்த பிறகு அதுதொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், இருவரும் விபசார புரோக்கர்களிடம் பலன் அடைந்ததாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார், யாரிடம் பணம் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை அவர்கள் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காலத்தில் புரோக்கர்களால் கொடுக்கப்பட்டுள்ளது? என்ற தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

    இன்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட வாய்ப்புள்ளது.


    லஞ்சம் ஊழலை தடுக்க அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHighCourt #VigilanceRaid
    சென்னை:

    லஞ்சம் பெற்றதால் கலெக்டரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வட்டாட்சியர் தர்மராஜ், பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டாட்சியர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, புற்றுநோய் போல் ஊழல் பரவி உள்ளதாக வேதனை தெரிவித்ததுடன், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    “லஞ்சம் ஊழலை தடுக்க அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்த வேண்டும்.  தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது. லஞ்சம் தொடர்பாக அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும்” என்றும் நீதிபதி கூறினார்.

    பின்னர், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக தர்மராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #MadrasHighCourt #VigilanceRaid

    சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்சப் பணம் கைமாறப்படுவதாக வந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். #Vigilancepoliceraid #ElectricityBoardoffice

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்சப் பணம் கைமாறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை மின் வாரிய அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    முக்கிய அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. தங்கம், வெள்ளி, நாணயங்களும் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதன் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மின் வாரிய தலைமை பொறியாளர் முத்துவின் அலுவலகத்தில் ரூ.1½ லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இந்த பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். நேற்று இரவு 9 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு முழுவதும் நீடித்தது. புத்தாண்டையொட்டி, மின் வாரிய ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் மின் வாரிய உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரும் லஞ்ச ஒழிப்பு சோதனையின் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Vigilancepoliceraid #ElectricityBoardoffice

    தீபாவளி பண்டிகையையொட்டி மாமூல் வசூல் செய்த போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது பட்டாசுகள், புதிய துணிமணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. #Diwali #Vigilancepolice

    விழுப்புரம்:

    தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி பண்டிகையையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 1-ந்தேதி சென்னை உள்பட 24 இடங்களில் நடந்த சோதனைகளில் ரூ.44 லட்சம் சிக்கியது. நேற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அதிரடி சோதனை நீடித்தது.

    உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீஸ்காரர்கள் பணியில் இருந்தனர். சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் தங்கி இருந்த வீட்டுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அங்கு குவியல் குவியலாக பட்டாசு பாக்ஸ் மற்றும் புதிய துணிமணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 120 பட்டாசு பெட்டிகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.


    அதனை தொடர்ந்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசை விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் இந்த நடவடிக்கையை வரவேற்று திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியில் உள்ள மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று இரவு சோதனை செய்தனர்.

    சோதனையின்போது அலுவலகத்தின் நாற்காலிகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.80,200 பணத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த பணம் கணக்கில் காட்டப்படாத பணம் என்று தெரியவந்தது.

    விசாரணை நடந்து கொண்டு இருந்த போது அலுவலக மஸ்தூர் பணியாளர் வெளியே சென்றார். அவரை மீண்டும் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்தனர். #Diwali #Vigilancepolice

    பழனி மற்றும் தேனியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.45 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். #Vigilance

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டு தோறும் தங்கள் அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பழனி கோவில் தங்கும் விடுதியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் ஆள் அறிதல் புதுப்பிப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் அங்கு வந்த போலீசார் கணக்கில் வராத ரூ.34 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஓய்வூதிய பலன்கள் வழங்குவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரிய வந்ததால் பணத்தை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.14 ஆயிரத்து 680-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தவர்களிடம் தீபாவளி இனாமாகவும், வேறு பெயர்களைச் சொல்லியும் வசூல் செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.  #Vigilance

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    புதுடெல்லி:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.


    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என மனுவில் கூறப்பட்டுள்ளது. #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    புதிய தலைமை செயலக வழக்கில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DMK #MKStalin #NewChiefSecretariatCase
    சென்னை:

    சென்னை அரசினர் தோட்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது.

    அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுபற்றி விசாரிக்க ரகுபதி ஆணையம் உருவாக்கப்பட்டது.

    இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்படி ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி புதிய தலைமை செயலக முறைகேடு பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பீல் செய்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் முன்பு எடுத்து கொள்ளப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர். அதோடு இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.   #DMK #MKStalin #NewChiefSecretariatCase
    வரியாக கொடுத்த பணம் வீணடிக்கப்படும்போது, அதுகுறித்து அரசிடம் கேள்வி கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருப்பதாக ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார். #ChennaiHighCourt
    சென்னை:

    புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐகோர்ட்டின் ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் கடந்த 2011-ம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த விசாரணை ஆணையம், மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கருணாநிதி உள்ளிட்ட 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி ஆர்.ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதி யாரையும் நியமிக்கவில்லை என்றும் தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விசாரணை ஆணையத்துக்கு எதிராக மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்டு புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று விசாரித்தார்.


    அப்போது, ‘அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளினால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதிலும், வரிப்பணம் வீணாகியுள்ளது. ஒரு அரசு கட்டிய சட்டப் பேரவையை மாற்றி அமைப்பதற்கும், அழகுபடுத்துவதற்கும் பணம் வீணடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு ஆணையம் அமைத்து, அதற்கு ரூ.5 கோடி வரை செலவும் செய்யப்பட்டுள்ளது.

    வரியாக கொடுத்த பணத்தை இவ்வாறு அரசு வீணடிக்கும்போது, அதுகுறித்து கேள்விக் கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர், வழக்கை வாபஸ் பெறுவதாக தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, வாபஸ் பெற அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighCourt #MKStalin #Karunanidhi
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான புதிய தலைமை செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #TNGovt #DMK #MKStalin #DVAC
    சென்னை:

    தமிழக அரசின் சட்டசபையும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்குள் செயல்பட்டு வருகின்றன.

    அங்குள்ள கட்டிடங்கள் பழமையாகி விட்டதாலும், கடும் இட நெருக்கடி உருவானதாலும் புதிய தலைமைச் செயலகம் கட்ட கடந்த தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    ஜெர்மனி நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்ததற்கு ஏற்ப புதிய தலைமைச் செயலகம் பசுமைக் கட்டிடங்களாகக் கட்டப்பட்டன. ரூ.425 கோடி செலவில் 80 ஆயிரம் சதுர அடி அலுவலக பரப்பளவில் இந்த தலைமைச் செயலகம் உருவானது. அந்த வளாகத்தின் மத்தியில் திராவிட கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் கோபுரம் ஒன்றையும் கருணாநிதி அமைத்தார்.

    2008-ல் தொடங்கப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டுமான பணிகள் இரண்டே ஆண்டுகளில் முடிந்தன. இதையடுத்து 2010-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் புதிய தலைமை செயலகத்தை திறந்து வைத்தார். மார்ச் 16-ந்தேதி அந்த கட்டிடத்தில் சட்டசபை கூட்டம் நடந்தது.

    இந்த நிலையில் 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். புதிய தலைமைச் செயலகத்தில் போதிய வசதிகள் இல்லை என்று கூறி அவர் மீண்டும் சட்டசபையையும் தலைமைச் செயலகத்தையும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார்.

    அதோடு புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளில் கூடுதல் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து 14.9.11 அன்று புதிய தலைமைச் செயலக கட்டிடங்களை மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது அங்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.


    இதற்கிடையே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் நடந்த ஊழல்கள் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரிடம் சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு ரகுபதி விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    மேலும் இது போன்ற விசாரணை ஆணையங்களால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்றும் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

    ரகுபதி ஆணையத்துக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்றும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “ரகுபதி ஆணையத்துக்கு ரூ.4 கோடியே 11 லட்சம் செலவிடப்பட்டிருப்பதாகவும் கோர்ட்டு தடை விதித்த 3 ஆண்டுகளில் ரூ.2 கோடி செலவிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து நீதிபதி ரகுபதி புதிய தலைமைச் செயலக விசாரணை ஆணைய பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது, “புதிய தலைமை செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு புதிய நீதிபதியை நியமனம் செய்வது தொடர்பாக 27-ந்தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக தெரிய வந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த தகவலை சென்னை ஐகோர்ட்டில் இன்று தமிழக அரசு தெரிவிக்க உள்ளது.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், “நீங்கள் (ஸ்டாலின்) செய்த தவறுகளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இதில் நாங்கள் விட்டாலும் மக்கள் விட மாட்டார்கள்” என்று பேசியிருந்தார். அடுத்த நாளே மு.க.ஸ்டாலினை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க தீவிரமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. #TNGovt #DMK #MKStalin  #DVAC
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் மீது இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, முறைகேடு எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. #ChennaiHC
    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    அதனால், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி முன்பு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு வழங்கியதாக முதல்-அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா?

    அந்த விசாரணை நிலை என்ன?. ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘1991ம் ஆண்டு முதல் எஸ்.பி.கே. நிறுவனம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியிலும் அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டச்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் 4 வழிச்சாலை ஒப்பந்த பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிப்படவில்லை. முதல்-அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாக தற்போது கூற முடியாது’ என்று கூறினார்.

    இதனையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் புலன் விசாரணை தொடர்பான விவரங்களை கொண்ட ரகசிய அறிக்கையை நீதிபதி முன்பு சமர்பித்தார்.


    பின்னர், ‘முதல்-அமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை. இந்த டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடு நடைபெறவில்லை’ என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்றார். இதற்கு அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டார். இதற்கு அனுமதித்த நீதிபதி, விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #ChennaiHC #EdappadiPalaniswami
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு தொடர்பாக பதில் அளிக்க செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. #EdappadiPalaniswami #RSBharathi #DMK
    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ரூ.4,800 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி திமுக குற்றம்சாட்டியது. முதலமைச்சரின் உறவினர்களுக்கு சட்ட விரோதமாக டெண்டர் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த வரைவு அறிக்கையை ஊழல் தடுப்புப்  பிரிவு இயக்குனருக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருடைய ஒப்புதலுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வருக்கு எதிரான வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவகாசம் அளித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார். #EdappadiPalaniswami #RSBharathi #DMK

    ×