search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி பைக் மோதல்"

    கிருஷ்ணகிரி அருகே நேற்று இரவு ஆடுகளை ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குமரேசன்(30), அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யர்(35), கோவிந்தராஜ்(45) ஆகியோர், ஒரு லாரியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஒரப்பம் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, ஒரப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சத்யராஜ்(27), அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பழனி(37) ஆகியோர் ஒரே பைக்கில் வந்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக, ஆடுகளை ஏற்றி வந்த லாரி மீது சத்யராஜ் மற்றும் பழனி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் சத்யராஜ் மறறும் பழனி பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

    மேலும் ஆடுகளை ஏற்றி வந்த லாரியும் நிலை தடுமாறி தலைகீழாக ரோட்டில் கவிழ்ந்தது. இதில், லாரி டிரைவர் குமரேசன், கிளினர் அய்யர், லாரியில் பயணம் செய்த கோவிந்தராஜ் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். லாரியில் இருந்த ஆடுகள் ரோட்டில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சுமார 50 ஆடுகள் உயிரிழந்தன.

    இந்த விபத்துக்குறித்து தகவலறிந்து வந்த கந்திகுப்பம் போலீஸார், உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேர்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சத்யராஜ் மற்றும் பழனி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி கிளினர் அய்யர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குமரேசன் மற்றும் கோவிந்தராஜ் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், ரோடுகளில் சிதறி கிடந்த ஆடுகளை, விபத்துக்குள்ளான லாரியுடன் பின்னால் ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரியில் வந்தவர்கள் அதில் ஏற்றி சென்றனர்.

    ×