search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதட்சணை புகார்"

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் அலாவுதீன் ஆசிப். இவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்காதர் மகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    அப்போது 140 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் தொழில் செய்து வந்த அலாவுதீன் ஆசிப் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் ஆபாச படத்தை வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டினாராம். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது குறித்து ஷேக் அப்துல்லாவின் உறவினர் முபாரக் அகமது, மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அலாவுதீன் ஆசிப், அவரது தந்தை அலாவுதீன், தாயார் ஜின்னா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    தடை நீங்கியதால் வரதட்சணை புகாரில் உடனே கைது செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. #supremecourt #dowrytorture

    புதுடெல்லி:

    திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதும் குற்றம், பெறுவதும் குற்றம் என்று மத்திய அரசு கடந்த 1961-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவர்கள் மீது இந்த சட்டத்தின் பிரிவு 498(ஏ)ன்படி நட வடிக்கை எடுக்க பல்வேறு தண்டனைகள் வரையறுக்கப்பட்டன.

    வரதட்சணை கேட்டு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்பட்டால், கணவர், மாமனார், மாமியாருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கவும், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவும் அந்த சட்டப் பிரிவில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. வரதட்சணை கொடுமையால் பெண் மரணம் அடைந்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கொடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

    நாளடைவில் இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. என்றாலும் வரதட்சணை கொடுமை விவகாரத்தில் சிக்கும் ஆண்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறையவில்லை.

    இந்த நிலையில் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. கணவனையும், கணவர் குடும்பத்தினரையும் பழிவாங்க இந்த சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்டது.

    எனவே வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், “வரதட்சணை தொடர்பான வழக்கில் யாரையும் உடனே கைது செய்யக்கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப நல அமைப்புகள் உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு இரு தரப்பினரிடமும் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அந்த விசாரணைக்கு பிறகே கைது செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு நடந்து வந்தது. இன்று இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது.

    அதில், “வரதட்சணை புகார்களில் உடனே கைது செய்யப்படக் கூடாது என்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்களை உடனே கைது செய்யலாம். புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.


    வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம் 498(ஏ) பிரிவின் கீழ் கைது செய்யப் படுபவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதில்லை. இந்த சட்ட பிரிவு தான் மிகவும் தவறாக பயன் படுத்தப்படுகிறது என்பதை சுப்ரீம்கோர்ட்டு இன்று ஏற்றுக்கொண்டது.

    எனவே 498(ஏ) சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப் படுவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. முன் ஜாமீன் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதோடு வரதட்சணை கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்தில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட மாற்றங்களில் பெரும்பாலனவற்றை இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

    குறிப்பாக வரதட்சணை கொடுமை பற்றி பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது விசாரணை நடத்த அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப நல குழுக்கள் உருவாக்க வேண்டும் என்ற சட்ட உட்பிரிவு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவுகள் காரணமாக வரதட்சணை குற்றச்சாட்டுக் குள்ளாபவர்கள் கைது செய்யப்பட்டாலும் உடனே ஜாமீனில் வெளியில் வர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. #supremecourt #dowrytorture

    ×