search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகை அதிகரிப்பு"

    அமிர்தியில் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அடுக்கம்பாறை:

    வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே அமிர்தியில் சிறு வன உயிரின பூங்கா உள்ளது. ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் முதலை, மான், முள்ளம்பன்றி, நரி, பாம்பு வகைகள், மயில், வெள்ளை மயில் உள்ளிட்டவைகள் உள்ளன.

    இந்த பூங்காவை உரசியபடி பீமன் நீர்வீழ்ச்சி எனும் கொட்டாறு செல்கிறது. ஜவ்வாதுமலையில் இருந்து உருவாகும் இந்த மழைநீர் ஓடைக்கால்வாய்கள் மூலமாக அமிர்தி நீர்வீழ்ச்சி வழியாக நாகநதி ஆற்றுக்கு செல்கிறது. இயற்கை அழகுடன் அமைந்துள்ள இந்த அமிர்திக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.



    குறிப்பாக பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வந்து வன உயிரின பூங்காவை பார்வையிடுவதுடன், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் செய்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பசுமையுடன் அமைந்துள்ள அமிர்திக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அரிய வகை பறவைகள் வரத் தொடங்கியுள்ளது. மேலும் அமிர்தி காட்டில் அரியவகை பறவைகள் இடம் பெயர்ந்ததுடன், கூடும் கட்டியுள்ளது. இந்த கூடுகளில் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து உள்ளது.

    இதனை அறிந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களாக அமிர்திக்கு வரத்தொடங்கியுள்ளனர். உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த அமிர்தி வனக்காட்டில் பறவைகளை பார்வையிட்டு, ஆராய்ச்சி கட்டுரைகளும் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அமிர்திக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கவும், மேளம் அடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமிர்தி வனச்சரக அலுவலர் ராஜா தெரிவித்தார். 
    ×