search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை பழங்கள்"

    சேலத்தில் இன்று பழ குடோன்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2¾ டன் மாம்பழங்கள், வாழை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலத்தில் மாம்பழ சீசன் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

    இதனால் கடை வீதி, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ஜங்சன், ஏற்காடு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாம்பழ குடோன்களில் இயற்கைக்கு மாறான வகையில் உடலுக்கு கேடு ஏற்படும் வகையில் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனுக்கு புகார்கள் சென்றது.

    இந்தநிலையில் இன்று காலை 5 மணியளவில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலு, சரவணன், இளங்கோ உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் சேலம் சின்ன கடை வீதி பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் அனுமதிக்கப்படாத எத்திலின் கரைசல் மற்றும் சோடா உப்பு கொண்டு செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 1 டன்னும், வாழைப்பழம் 1.75 டன்னும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. பின்னர் செயற்கையான முறையில் பழங்களை இது போல பழுக்க வைத்தால் வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். இதனால் சேலத்தில் மாம்பழ வியாபாரிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பன் கூறியதாவது:-

    பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும், சிலர் அனுமதிக்கப்படாத சோடா உப்பினை, மாம்பழங்கள் மீது தெளித்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கின்றனர். இதனை சாப்பிடும் நபர்களுக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு ஏற்படும்.

    பழங்களை இயற்கையான முறையிலும், எத்திலின் கியாஸ் சேம்பரிலும் பழுக்க வைக்க வேண்டும். இன்று நடத்தப்பட்ட ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும் பாதுகாப்பற்ற முறையில் பழங்களை பழுக்க வைத்தது உணவு பாதுகாப்பு வணிக சான்றிதழ் இல்லாமல் இயங்கியது ஆகிய குற்றத்திற்காக உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மருந்து தெளிப்பான் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு, நடவடிக்கைகள் தொடரும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×