search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கைது"

    ஜெயங்கொண்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 45 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    தனியார் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும் செயல்படும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், நூறு நாள் வேலை, வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தியும், இல்லையென்றால் அதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை உரியவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஜெயங்கொண்டத்தில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, நேற்று அந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு ரோடு சந்திப்பு வந்து, பின்னர் தபால் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் உத்திராபதி, ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.  #tamilnews
    பசுமை சாலைக்கு நிலம் கொடுக்க மறுத்து ஆட்சேபனை தெரிவித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். #chennaisalemgreenexpressway

    செய்யாறு:

    சென்னை-சேலம் பசுமை சாலை திட்டத்திற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் விவசாய நிலங்கள் உள்பட சுமார் 700 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவிக்கும் விவசாயிகள் மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 639 விவசாயிகள் பசுமை சாலைக்கு ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆட்சேபம் தெரிவித்திருந்த மனுதாரர்கள் கருத்துக்களை பதிவு செய்யும் கூட்டத்தை நேற்று நடத்தினர்.

    இதில், செய்யாறு தாலுகாவில் ஆட்சேபனை தெரிவித்த 74 பேரில் 58 பேர் கலந்து கொண்டு எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பெரும் பாலானவர்கள் தங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை விட்டு கொடுக்க மாட்டோம் என்றனர்.

    இந்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்காக, செய்யாறு தாலுகா அலுவலகத்தில் 3 கட்ட போலீஸ் சோதனைக்கு பிறகே ஆட்சேபனை மனு அளித்த விவசாயிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் டி.எஸ்.பி.க்கள் குணசேகரன், செந்தில் உள்பட 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, கூட்டத்திற்கு வந்த எருமைவெட்டி கிராமத்தை சேர்ந்த தேவன் என்ற விவசாயி மற்றும் பசுமை வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தை சேர்ந்த அத்தியபாடி அருள், முத்துக்குமார், முறையாறு சிவா ஆகிய 4 பேரும் திடீரென கைது செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை போட்டோ எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்ய முயன்றதால் 4 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், எதிர்ப்பு கருத்துகளை பதிவுசெய்த 58 விவசாயிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #chennaisalemgreenexpressway

    செங்கம் அருகே பசுமை சாலைக்கு நிலம் தரமறுத்த 5 விவசாயிகளை போலீசார் அடித்து உதைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GreenwayRoad
    செங்கம்:

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக 5 மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கலசப்பாக்கம், செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து அளவீடு செய்து குறியீடு கற்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கம் அடுத்த கட்ட மடுவு ஊராட்சி அத்திப்பாடி கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த நில அளவிடும் பணியின்போது சில விவசாயிகள் தங்கள் நிலத்தை பசுமை சாலைக்காக தர மறுத்து அளவீடு பணியை தடுத்தனர். இதனால், தற்காலிகமாக அப்பகுதியில் நிலம் அளவிடும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர்.

    இந்த நிலையில், அத்திப்பாடி கிராமத்தில் விடுபட்ட அளவீடு பணியை தொடருவதற்காக தாசில்தார் ரேணுகா தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்றனர். விவசாயிகளின் எதிர்ப்பை முறியடிக்க டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    அப்போது அருள் என்ற விவசாயிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உள்ள மாந்தோப்பு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை தகர்த்து எறிந்து அதிகாரிகளை போலீசார் உள்ளே அழைத்து சென்றனர். 10 ஏக்கர் மாந்தோப்பு மற்றம் மணிலா பயிரிடப்பட்டிருந்த நிலத்தை அளந்து குறியீடு கற்களை நட்டனர்.

    இதற்கு, அருள் உள்ளிட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆவேசமடைந்த போலீசார் அருள் உள்ளிட்ட விவசாயிகளை அடித்து, உதைத்து தரதரவென இழுத்துச் சென்று மேல்செங்கம் போலீஸ் நிலையத்தில் சிறை வைத்தனர். பின்னர், அருள் மற்றும் மனோகரன், முத்துக்குமார், இந்திரா என்ற பெண், மற்றொரு மனோகரன் என மொத்தம் 5 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். மற்ற விவசாயிகளை இரவில் விடுவித்தனர்.

    பசுமை சாலைக்காக நிலம் தர மறுத்த விவசாயிகளை போலீசார் தாக்கி கைது செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #GreenwayRoad
    ×