search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீராணம் ஏரி நீர் மட்டம் உயர்வு"

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து 476 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. அங்கிருந்து காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.

    பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்றும் அதே அளவு நீர் மட்டம் உள்ளது. தற்போது வீராணம் ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 476 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்றும் தொடர்ந்து 476 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #VeeranamLake
    ×