search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் மாவட்டம்"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடி வைக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் மூட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    அண்டை மாநிலமான ஆந்திராவில் 11-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஆந்திர மாநிலத்தையொட்டிய தமிழக எல்லையில் 5 கிலோ மீட்டருக்குள் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் 11-ந் தேதி மாலை 6 மணிவரையில் மூடி வைக்க வேண்டும்.

    அதேபோன்று தமிழ்நாட்டில் வருகிற 18-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் 18-ந் தேதி இரவு 12 மணிவரையிலும், மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அன்றைய தினத்திலும் சில்லரை விற்பனை மதுபான கடைகள் மற்றும் மதுக்கூட்டங்களை மூடி வைக்க வேண்டும். ஆக மொத்தம் மாவட்டத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மேற்படி நாட்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அதேபோல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுக்கூடங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019
    வேலுர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மெகராஜ் இன்று வெளியிட்டார். #FinalVoterslist

    வேலூர், ஜன. 31-

    வேலுர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மெகராஜ் இன்று வெளியிட்டார்.

    கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.19-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், 2019-யின் கீழ் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அன்று முதல் கடந்த 31,10,2018 வரையில் சுருக்க திருத்தங்களுக்கான படிவங்கள் பெறப்பட்டது.

    சுருக்க திருத்தப்பணிகள் மேற்கொள்ளபட்டு வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடபட்டது.

    15 லட்சத்து 7187 ஆண்கள் 15 லட்சத்து 61 ஆயிரத்து 446 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 145 பேர் உள்பட 30லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    இறுதிவாக் காளர் பட்டியல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 1648 வாக்குச்சாவடி அமைவிடங் களிலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

    பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம் என வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். * * * சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-

    வேலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்க சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. #Thalikkuthangam
    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக கடந்த 22-ந் தேதி 707 பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் 690 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.

    பயனாளிகளிடம் சமூக நலத்துறை அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், எஸ்.விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர்.

    முதற்கட்டமாக அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் வெளியாட்கள் உள்ளேயும், அலுவலக ஊழியர்கள் வெளியேயும் செல்லாதபடி அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    இச்சோதனையில் பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், கழிவறை, மேசையின் அடியில் என பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.76,500 லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது.

    இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி, கணக்காளர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.



    நேற்று தாலிக்கு தங்கம் பெற்ற 690 பேரிடமும் இருந்து ரூ.500 முதல் ரூ.1,500 வரை சமூகநலத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்று தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் இந்த பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பண வசூல் செய்த சமூக நலத்துறை ஊழியர்கள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.  #Thalikkuthangam

    வேலூர் மாவட்டத்தில் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கேசி வீரமணி தெரிவித்துள்ளார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரி முத்தூர் ஊராட்சியில் கால் நடைத்துறையின் சார்பில் 240 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளையும், தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 208 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், கூட்டுறவுத் துறையின் மூலம் 25 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 3 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

    தமிழகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஏழைகளுக்கு பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், மகளிர் தன்னம்தனியாக பொருளாதாரத்தை பெற்றிட கடனுதவிகள், அனைத்து குக்கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம்பள்ளி பகுதிகள் மிகவும் வறட்சி மிகுந்த பகுதியாக கண்டறிப்பட்டு மாவட்டத்தில் கணியம் பாடியில் செயல்படுத்தப்பட்ட உறைகிணறு நமது பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்று மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்கள் கேட்காமலே செய்து கொடுத்து வருகிறது. இவற்றை எல்லாம் பெற்று பயன்படுத்திக் கொண்டு என்றென்றும் அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் முகமை பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மண்டல கால்நடை இணை இயக்குநர் சாந்தகுமாரி, துணைபதிவாளர் முனிராஜ், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், தாமலேரி முத்தூர் தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் ரமேஷ், உதவி இயக்குநர் கால்நடை ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சிவா, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    வேலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவத்தையடுத்து 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #swineflu
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆம்பூர் பெரியாங்குப்பத்தை சேர்ந்த வரதராஜ் மனைவி ருக்மணியம்மாள் (வயது 55). ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கபட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு அவரை சோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமி நகரில் வசிக்கும் சிவக்குமார் என்பவரது மகள் பிரியதர்ஷினி (வயது 4). இவள், கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். இதனையடுத்து அவள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட 30 பேரும், பெண்லெண்ட் ஆஸ்பத்திரியில் 40 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல வாலாஜா, அரக்கோணம், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கபட்ட 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது. காய்ச்சலை கட்டுபடுத்த 60 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தபட்டுள்ளன.

    இந்த குழுவினர் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு சிகிச்சை அளிக்கின்றனர்.

    மேலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிக்கபட்ட பகுதிகளில் 20 விரைவு மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்னர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 2 பேருக்கு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கபடுகிறது.

    மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட 50 பேர் காய்ச்சல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும், மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தண்டராம்பட்டு பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளனர். அங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ##swineflu
    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றச்செயல்களை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருட்டு, கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல், சாராயம், மதுவிற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைக்கின்றனர்.

    இவ்வாறாக ஜெயிலில் அடைக்கப்படும் நபர்கள் ஜாமீனில் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து, திருந்தி வாழாமல் தொடர்ந்து அதே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாராயம், மது விற்பனை செய்த 28 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும், திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 37 பேரும் என மொத்தம் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர், எனப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    வேலூர் மாவட்டத்தில் தினமும் 3 மணி நேரம் மின் தடை ஏற்படுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    சென்னை அனல் மின் நிலையில் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. வழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்க கூடிய காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலையில் 1 மணி முதல் மாலை 1 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்னூர், விண்ணமங்கலம், வடகரை, மாராபட்டு ஆகிய பகுதிகளில் கடந்த 3 வாரமாக பகலில் 2 மணி நேரமும் இரவில் 3 மணி நேரமும் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    வாணியம்பாடியில் பகலில் 2 மணி நேரமும் இரவில் 1 மணி நேரமும் மின் வெட்டு ஏற்படுகிறது. ஆலங்காயம், திம்மாம்பேட்டை, அம்பலூர் பகுதிகளில் தினமும் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுகிறது.

    அரக்கோணம் பகுதியில் கடந்த 1 மாதமாக 3 மணி நேரத்திற்கும் மேல் தொடர் மின் தடை ஏற்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரமும் முறையாக வழங்கபடுவதில்லை இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    வாலாஜா பகுதியில் கடந்த 2 வாராமாக 1 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, பெருந்துரைபட்டு, வாணாபுரம், அகரம்பள்ளிபட்டு சதாகுப்பம் பகுதிகளில் பகலில் 4 மணி நேரமும், இரவில் 2 மணி நேரமும் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் காலாண்டு தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அவதியடைந்துள்ளனர், பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மின் வெட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 9-ந்தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 681 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது.
    வேலூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 2019 ஜனவரியில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இதில், பெயர் சேர்த்தலுக்காக 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம் 6) பெயர் நீக்கம் செய்ய 56 ஆயிரம் விண்ணப்பங்கள் (படிவம்7), திருத்தம் செய்ய 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம்8ஏ) ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது.

    அத்துடன், ஒவ்வொரு விண்ணப்ப படிவத்தில் இருந்தும், எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை கணக்கீடு செய்வதற்கான அப்ஸ்ட்ராக்ட் படிவங்களையும் சேர்த்து மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்து 500 படிவங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் வரும் 9-ந்தேதி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 681 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கிறது.

    இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. ஒவ்வொரு தாலுகாவுக்கும் தலா 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை உரிய ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து கலர் போட்டோவுடன் அங்கேயே வழங்கலாம்.

    எந்த ஓட்டுச்சாவடி மையத்திலாவது படிவங்கள் இல்லை என்றால், அங்கிருக்கும் ஓட்டுச்சாவடி அதிகாரி, மண்டல அதிகாரியை தொடர்பு கொண்டால் உடனடியாக படிவங்கள் கொண்டு வந்து தரப்படும்.

    இவ்வாறுஅவர் கூறினார்.
    வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 86 ஆயிரத்து 758 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 37 ஆயிரத்து 103 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 118 பேரும் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

    வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக 1,681 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று சரிபார்க்கலாம்.

    பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் மேற்கொள்ள படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ ஆகிய விண்ணப்பங்களை பெற்று திருத்தங்களை சரி செய்து கொள்ளலாம்.

    இந்த விண்ணப்பங்களை பெறும் வாக்காளர்கள் சமீபத்தில் எடுத்த வண்ண புகைப்படத்தை மட்டுமே ஒட்ட வேண்டும். கருப்பு- வெள்ளை புகைப்படம் ஏற்று கொள்ளப்படாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

    அதேபோல் வேலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி வாக்காளர் பட்டியலை வாசித்து காண்பிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, அனைத்து கிராமங்களிலும் வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய நாளில் சுருக்க திருத்தம்-2019 வரைவு வாக்காளர் பட்டியலை பார்வைக்கு வைத்தல் என்ற பொருளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் 30 லட்சத்து 51 ஆயிரத்து 171 பேர் இடம் பிடித்திருந்தனர். அதையடுத்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 10 ஆயிரத்து 883 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். 38 ஆயிரத்து 75 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தேர்தல் தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    வேலூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 192 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 12 ஆயிரத்து 676 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 8 போலீஸ் உட்கோட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துப் போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல், ஜூலை மாதம் வரை 7 மாதங்களில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,119 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 35 ஆயிரத்து 665 பேர் மீதும், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டிய 725 பேர் மீதும், ‘ஷீட் பெல்ட்’ அணியாமல் கார் ஓட்டிய 8 ஆயிரத்து 324 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டிய 14 ஆயிரத்து 310 பேர் மீதும், அதிகபாரம் ஏற்றிய 1,109 வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள், அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 834 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 192 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    மேலும் கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றது, சாலையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 16 ஆயிரத்து 760 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

    அதன்பேரில் 12 ஆயிரத்து 676 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×