search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1000 banana tree"

    கூடலூர் அருகே சூறாவளி காற்றில் 1,000 வாழைகள் முறிந்து சேதம் அடைந்தன. இதனால் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. காலையில் வெயிலும், மதியவேளைக்கு பிறகு மழையும் காணப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல் அருகே அரிகோடுவயல் பகுதியை சேர்ந்த உபேஷ், ரெதிஷ், ரவி, ரியாஷ் ஆகியோர் அதே பகுதியில் விவசாய நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குத்தகை எடுத்தனர்.

    பின்னர் 5 ஆயிரம் நேந்திர வாழைகளை பயிரிட்டு பராமரித்து வந்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் இரவு பகலாக கண்காணித்து வாழைகளை வளர்த்து வந்தனர். மேலும் உரமிட்டு பராமரித்ததால் வாழை மரங்கள் நன்கும் வளர்ந்து, வாழைத்தார்கள் காணப்பட்டன. இன்னும் சில வாரங்களில் வாழைத்தார்களை அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6½ மணிக்கு தேவர்சோலை பகுதியில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதில் உபேஷ், ரெதிஷ், ரவி, ரியாஷ் ஆகியோரின் வாழைகள் காற்றில் முறிந்து விழுந்தது. இதில் சுமார் 1,000 வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    5 ஆயிரம் வாழைகளை நட்டு பராமரித்து வந்த நிலையில் சூறாவளி காற்று வீசி ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்து விட்டது. வழக்கமாக காட்டு யானைகள் சேதப்படுத்தி விடும் என எதிர்பார்த்து இரவு பகலாக கண்காணித்து வந்தோம். ஆனால் காட்டு யானைகளுக்கு பதிலாக சூறாவளி காற்று எங்களது பொருளாதாரத்தை பாதித்து விட்டது. எனவே அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி விட்டோம். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×