search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "140 Pound Jewelry Robbery"

    • கொள்ளையர்கள் தம்பதியை தாக்கி விட்டு மேஜையில் இருந்த சாவிகளை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.
    • எனவே பீரோ சாவியை தம்பதியினர் மேஜையில் வைத்திருப்பதை பல நாட்களாக நோட்டமிட்டு, அவர்களுக்கு அறிமுகமானவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 88). இவரது மனைவி ஜாய் சொர்ண தேவி (83). இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆவர்.

    இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் அரசு துறையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அருணாசலம், ஜாய் சொர்ண தேவி ஆகிய இருவர் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த 4 பேர் இருவரையும் கட்டிப்போட்டு விட்டு பீரோவில் இருந்த 140 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    வள்ளியூரில் பணிபுரிந்து வரும் அவர்களது மகள் ராணி இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய போது தான் கொள்ளை சம்பவம் வெளியே தெரிந்தது.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.

    வீட்டில் சி.சி.டி.வி. கேமிரா இல்லாத நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் ஒரு தனிப்படை, ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு தலைமையில் 2 தனிப்படை என மொத்தம் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்கள் தம்பதியை தாக்கி விட்டு மேஜையில் இருந்த சாவிகளை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளனர். எனவே பீரோ சாவியை தம்பதியினர் மேஜையில் வைத்திருப்பதை பல நாட்களாக நோட்டமிட்டு, அவர்களுக்கு அறிமுகமானவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள ஆஸ்பத்திரி ஒன்றின் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நடமாடுவது தெரிய வந்தது.

    இதுகுறித்து நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்களுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும், இதில் ஈடுபட்ட மேலும் 2 பேர் பற்றிய தகவல்களும் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கொள்ளையடித்த நகை, பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்கள்? இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு ஜாய் சொர்ணதேவி வீட்டின் நுழைவு வாயிலில் பேப்பர் படித்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் காம்பவுண்டு சுவர் வழியாக 3 மர்ம நபர்கள் ஏறி குதித்து உள்ளனர்.
    • அவர்கள் குல்லா அணிந்து கொண்டு உள்ளே நுழைந்து வாசலில் இருந்த ஜாய் சொர்ண தேவியின் வாயில் துணியை வைத்து கயிறால் கட்டி உள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனூர் சிதம்பரநாடார் தெருவில் வசித்து வருபவர் அருணாசலம்(வயது 88). இவரது மனைவி ஜாய் சொர்ண தேவி(83).

    இவர்கள் 2 பேரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    இதில் மகன் என்.எல்.சி.யில் வேலை பார்த்து வருகிறார். மூத்த மகள் ராணி வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் வெளியூரில் வசித்து வருகிறார். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    அருணாசலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோர் ராணியின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். தினமும் பணிமுடிந்து இரவு 8 மணிக்கு ராணி ஆவுடையானூர் சென்றடைவார். அதுவரை அவரது பெற்றோர் தனியாகவே வீட்டில் இருப்பார்கள்.

    இந்நிலையில் நேற்று ராணி பணிபுரியும் அலுவலகத்தில் ஒருவர் பணி ஓய்வு பெற்றதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அப்போது வீட்டின் காம்பவுண்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி உள்ளே சென்று பார்த்தபோது அருணாசலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோர் வாயில் துணி வைக்கப்பட்டு இருக்கைகளில் அமர வைக்கப்பட்ட நிலையில் கயிறால் கட்டப்பட்டு இருந்தனர்.

    உடனே ராணி, 2 பேரின் கட்டுகளையும் அவிழ்த்து விட்டார். தொடர்ந்து அவர்களிடம் கேட்டபோது மர்மநபர்கள் 2 பேரையும் கட்டி போட்டுவிட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக ராணி பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அங்கு சென்று ஆய்வு செய்தார்.

    நேற்று இரவு ஜாய் சொர்ணதேவி வீட்டின் நுழைவு வாயிலில் பேப்பர் படித்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் காம்பவுண்டு சுவர் வழியாக 3 மர்ம நபர்கள் ஏறி குதித்து உள்ளனர்.

    அவர்கள் குல்லா அணிந்து கொண்டு உள்ளே நுழைந்து வாசலில் இருந்த ஜாய் சொர்ண தேவியின் வாயில் துணியை வைத்து கயிறால் கட்டி உள்ளனர். பின்னர் உள்ளே சென்று அங்கிருந்த அருணாசலத்தை வாயில் துணியை வைத்து கயிறால் கட்டிவிட்டு பீரோ சாவியை எடுத்துள்ளனர்.

    பீரோ இருந்த அறைக்கு சென்ற அந்த கும்பல் அதில் இருந்த 140 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது.

    இதற்கிடையே இரவு 10 மணிக்கு ராணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது தான் கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மோப்பநாய் மூலமாக அந்த பகுதியில் சோதனை செய்தனர்.

    மோப்பநாய் அங்கிருந்து 2 தெருக்களுக்கு ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×