search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1495 குழந்தைகள் மீட்பு"

    தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 9 மாதத்தில் காணாமல்போன 1,495 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
    கோவை:

    தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 9 மாதத்தில் காணாமல்போன 1,495 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

    சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீசாருக்கு புலனாய்வு திறன் மேம்பாட்டு பயிற்சி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் முன்னிலை வகித்தார். பயிற்சியில் ரெயில்வே இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த போலீசார் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழக ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    அவர் பேசும்போது, ‘தமிழகத்தில் ரெயில் மூலம் தினமும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நமது கடமை ஆகும். பயிற்சிதான் காவல்துறையின் அடித்தளம் ஆகும். பல்வேறு பயிற்சிகள் மூலம் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக எப்படி புலனாய்வு செய்வது? பிடிபட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி தகவல் களை பெறுவது? என்பது மிகவும் முக்கியமானது’ என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் ரெயிலில் நடக்கும்போது அந்த வழக்குகளை கையாளுவது, பாதிக்கப்பட்ட பெண் களிடம் எப்படி நடந்து கொள்வது, குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    ரெயில்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் காணாமல்போன 1,960 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். கடந்த 9 மாதத்தில் மட்டும் காணாமல்போன 1,495 குழந்தைகளை மீட்டு, அவர்களின் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து உள்ளோம். 7 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பாக குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் கடந்த 9 மாதத்தில் ரெயிலில் 22 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடித்து உள்ளோம். அதில் 2 பேருக்கு கோர்ட்டு மூலம் தண்டனையும் பெற்று கொடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ரெயிலில் போலீசார் கண்காணித்து வருவதால், குற்ற சம்பவங்கள் நடப்பது குறைந்து உள்ளது.

    மேலும் ரெயிலில் பயணம் செய்யும்போது, ஒரு இடத்தில் திருட்டு, கொள்ளை சம்பவம் நடந்தாலும், அந்த பயணிகள் இறங்கும் இடத்தில் அதுதொடர்பாக புகார் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். முதலில் இங்கு வழக்குப்பதிவு செய்து, பின்னர் அது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பவம் நடந்தது உண்மை என்று தெரியவந்தால், அந்த வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்படும்.

    ஓடும் ரெயிலில் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த உத்தம்பட்டேல் என்பவரை கைது செய்து உள்ளோம். இதன் காரணமாக தற்போது ரெயிலில் குற்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் குறைந்து உள்ளது. குற்றங்கள் நடப்பது குறைய வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம் ஆகும்.

    அதுபோன்று ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்வது, தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 9 மாதத்தில் மட்டும் 1,600 பேர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து உள்ளனர். அதில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். எனவே மாநில குற்ற ஆவண பதிவறை மூலம் காணாமல் போனவர்களின் பட்டியலை தேர்வு செய்து, அதன் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர்களில் அடையாளம் கண்டு பிடிக்க முடியாதவர்களின் எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக இருக்கிறது. அதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ரெயில்வேயில் கூடுதலாக 200 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் 90 பேர் பெண்கள். அவர்கள் பெண்கள் அதிகமாக செல்லும் ரெயிலில் சென்று கண்காணித்து வருகிறார்கள். இதன் காரணமாக ரெயிலில் நடக்கும் குற்றங்கள் குறைந்து உள்ளன. ரெயிலில் கல் வீசிய 4 பேர் சிக்கி உள்ளனர். பொதுவாக சிறுவர்கள் விளையாட்டாக கல்லை எடுத்து ரெயிலில் வீசி விடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங் கள் நடப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×