search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2000 saplings"

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 2,000 மரக்கன்றுகளை நடும் பணி அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்று வழிபடுவர்.

    இந்த கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். பக்தர்கள் கிரிவலம் செல்லும்போது நெருக்கடி ஏற்படாமல் இருக்க கிரிவலப்பாதை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    மேலும் இந்த பாதையை பசுமையாக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலம் 2 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் 62 மரங்கள் வாடியுள்ளதாக தெரியவந்தது. இவற்றில் 6 மரங்கள் தொடர்ந்து வளரச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக கூடுதலாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன. அண்ணா நுழைவு வாயில் முதல் காஞ்சி சாலை அபய மண்டபம் வரை இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மரங்கள் நடுவதற்கான இடங்கள் தகுதியாக உள்ளதா, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இந்த மரக்கன்றுகள் நடும் பணி அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும். மேலும், தற்போது கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, அபயமண்டபம் அருகில் முற்றிலும் பட்டுப்போன மரம் நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு உயிர் பெற்று மீண்டும் அந்த மரத்தில் கிளைகள் வளர்ந்துள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
    ×