search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 times Puja"

    • கன்னியாகுமரியில் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும்.
    • 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். காவி துண்டு, காவி வேஷ்டி, கையில் விபூதி, பனையோலை விசிறி உடன் பக்தர்கள் ஓடத் தொடங்கினார்கள்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்தி ரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல் குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகா தேவர் கோவில், திருவி தாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

     நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து அனைத்து சிவன் கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இருசக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஓடி சென்றும் தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு வழிநெடுகிலும் குளிர்பானங்கள், உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.

    அனைத்து சிவாலயங்களிலும் இன்று இரவு விடிய விடிய பூஜைகளும் நடை பெறும். சிவராத்திரியை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    சிவாலய ஓட்ட பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலை மையில் 12 சிவாலயங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிவராத்திரியை யொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் விழாகோலம் பூண்டிருந்தது. நாகர்கோவில் கோதை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா இன்று நடக்கிறது. இன்று பிரதோஷம் என்பதாலும், மாலை 5 மணிக்கு கொன்றையடி நாதருக்கு அபிஷேகம் தொடர்ந்து மூலவராகிய தாணுமாலயன் சாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. மேலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சிவன், விஷ்ணு சாமிகள் திருவீதி உலா நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு தாணுமாலயன் சாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், தண்ணீர், விபூதி, பஞ்சாமிர் தம் ஆகிய 8 விதமான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு 2-வது கால பூஜையும், அதிகாலை 1.30 மணிக்கு 3-ம் கால பூஜையும், 2.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது. சிவராத்திரியை யொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருக்கும்.

    ×