search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "410 Person"

    • ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • திருச்செந்தூர் முருகன் கோவிலை புதுப்பிக்க ரூ.300 கோடியும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ரூ. 30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய அவைத்தலைவர் கோவில் ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருபா, காந்தி இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 410 பேருக்கு இலவச தையல் மிஷின்கள் மற்றும் கிரைண்டர்கள், வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    காமராஜர் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏழை- எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். தி.மு.க.வை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. சாதி, திராவிட கொள்கை கொண்ட தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார்.

    மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலை புதுப்பிக்க ரூ.300 கோடியும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ரூ. 30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பவுர்ணமி தோறும் 12 கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால் மக்களுக்காக உழைக்கின்ற தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் மண்ணை இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் பேசினர்.

    முன்னதாக மாவட்ட பிரதிநிதி ரகுபதி வரவேற்று பேசினார். மாநில மாணவரணி அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், சாத்தான்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலமுருகன், ஜோசப், நகர செயலாளர் மகா இளங்கோ, ஆழ்வை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர், மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், கருங்குளம் ஒன்றிய முன்னாள் செயலாளர் நல்லமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் மணி, முருகன், சரவணன், பாஸ்கர், ஒன்றிய பொருளாளர்கள் வடிவேலு, செல்வராஜ், ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் சுந்தர்ராஜ் உள்பட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பார்த்திபன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கிளைச் செயலாளர் ஞான ஜேம்ஸ் நன்றி கூறினார்.

    ×