search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai University"

    • பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை.
    • தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற தமிழக ஆளுநர் முன்வர வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்களில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.

    இந்நிலையில் சென்னை பல்கலைக் கழகத்திற்கு கடந்த ஓராண்டு காலமாக துணை வேந்தர் பதவி நியமிக்க முடியாமல் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

    இதனால், 55,000 கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கடந்த ஏப்ரல் 2023 இல் தேர்வான பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் காத்துக் கொண்டிருக்கிற அவல நிலை உள்ளது.

    சென்னை பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க மூன்று உறுப்பினர் தேடுதல் குழுவை மாநில அரசு நியமித்தது. அதற்கு போட்டியாக தமிழக ஆளுநர் நான்கு உறுப்பினர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்திருக்கிறார்.

    இந்நிலையில் தமிழக ஆளுநரின் சட்டவிரோத போக்கு காரணமாக சென்னை பல்கலைக் கழக நிர்வாகம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள், பொருளாதார பிரச்சினைகள், ஆராய்ச்சி குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை.

    இந்நிலையில் பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு அறிவிப்பாணைகளை வெளியிட்டது.

    இதற்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என். ரவி இதற்காக தனி தேடுதல் குழுவை அமைத்து அறிவிப்பாணைகளை வெளியிட்டுள்ளார்.

    இத்தகைய மோதல் போக்கு காரணமாக துணை வேந்தர் நியமனம், பல்கலைக் கழக நிர்வாகம் ஆகிய விவகாரங்களில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    எனவே, சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்குலைக்கிற ஆளுநர், மேற்கு வங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி துணை வேந்தர்கள் நியமனத்தில் தலையிடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டு பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனத்திற்கு தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற தமிழக ஆளுநர் முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில் அதற்கான விளைவுகளை மேற்கு வங்க ஆளுநர் சந்தித்ததைப் போல தமிழக கவர்னரும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
    • பட்டதாரிகள் பட்டய சான்றிதழுக்காக காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டாக துணைவேந்தர் பதவி நிரப்பப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    கவர்னருக்கும் அரசுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக துணை வேந்தரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரச்சினை கோர்ட்டு வரை சென்றது. இதில் இன்னும் முடிவு காணப்படவில்லை.

    துணைவேந்தரை நியமித்தால்தான் பட்டமளிப்பு விழாவுக்கு முறைப்படி அழைப்பு விடுத்து பட்டங்கள் வழங்க முடியும். இந்த தாமதத்தின் காரணமாக 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை அறிவியல் பட்டதாரிகள் பட்டய சான்றிதழுக்காக காத்திருக்கிறார்கள்.

    துணைவேந்தர் இல்லாத நிலையில் உயர்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையிலான 3 பேர் கொண்ட கன்வீனர் குழு தற்போது பல்கலைக் கழகத்தை நடததி வருகிறது.

    இந்த கமிட்டியில் பல் கலைக் கழகத்தில் இருந்து பிரதிநிதித்துவம் இல்லாத தும் ஒரு குறையாக உள்ள தாக பேராசிரியர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

    இதன் காரணமாக பல் கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, கல்வி விஷயங்கள் மற்றும் மாணவர்களின் பிற நட வடிக்கைகள் பாதிக்கப்படுவ தாகவும் பேராசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டுவிட்டன.
    • சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

    இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாத மத்தியில் வெளியிடப்பட வேண்டும். அப்போது தான் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்க முடியும். தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டு விட்டன. அதனடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கையும் நிறைவடைந்து விட்டது.

    சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத 108 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அக்கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு எழுதிய மாணவர்களால், பிற கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் படித்த கல்லூரிகளில் மட்டுமே இனி சேர முடியும். அந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் பிற கல்லூரி மாணவர்கள் போட்டியிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு கடும் போட்டி ஏற்படும். இதனால் பல மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழப்பார்கள். இதுவா திராவிட மாடல்?

    தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடாததை மன்னிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி, பல மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். இந்த சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அவற்றில் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னைப் பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமித்தல், நிதி நெருக்கடியைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • மாணவர்கள், விழா நடைபெற்ற இடத்தில் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.
    • யாருக்காவது விடுபட்டிருப்பின் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டால் பதக்கம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முதன்மை முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும், தர வரிசையில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 100 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இன்றைய விழாவில் மொத்தம் 762 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 565 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    இன்றைய விழாவின்போது, பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு பதக்கங்கள் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. இதுபற்றி கேட்டபோது போதிய நிதி இல்லை என்பதால் பதக்கம் வழங்கப்படவில்லை என நிர்வாகம் சார்பில் தெரிவித்ததால் மாணவர்கள், விழா நடைபெற்ற இடத்தல் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் இந்த தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி மறுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    தங்கப்பதக்கம் வழங்க நிதி பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல் தவறானது. தகுதியான நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாருக்காவது விடுபட்டிருப்பின் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டால் பதக்கம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    விழா ஏற்பாடுகளில் சில சில குளறுபடிகள் இருந்திருக்கலாம். சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்த வேண்டிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிய அரங்கத்தில் நடத்தப்பட்டதால் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களால் பட்டம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. நிகழ்வில் எந்தவித குளறுபடிகளும் நடைபெறவில்லை. குடியரசு தலைவர் வருகையால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    தொலைதூர கல்வி நிலைய முறைகேடு புகார் என்பது பழைய புகார்; அது விசாரணையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் வீராங்கனைகள் காருண்யா, ஸ்ரீஜா ஆகியோர் புதிய சாதனை படைத்தனர்.
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    2-வது நாளான நேற்றும் 2 புதிய போட்டி சாதனைகள் படைக்கப்பட்டன. பெண்களுக்கான வட்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங் கனை காருண்யா 43.50 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதில் கடந்த ஆண்டு (2017) எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை நித்யா 40.88 மீட்டர் எறிந்ததே சாதனையாக இருந்தது. இதேபோல் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஓ.பி. வைஷ்ணவா வீராங்கனை ஸ்ரீஜா 11.7 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 2001-ம் ஆண்டில் ஜே.பி.ஏ.எஸ். வீராங்கனை கே.என்.பிரியா 11.9 வினாடியில் கடந்து படைத்து இருந்த சாதனையை ஸ்ரீஜா நேற்று தகர்த்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிதின் (ஆர்.கே.எம்.விவேகானந்தா) 10.4 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து, 2008-ம் ஆண்டில் எம்.சி.சி. வீரர் பிரசாத் (10.4 வினாடி) படைத்து இருந்த சாதனையை சமன் செய்தார்.

    ஆண்களுக்கான குண்டு எறிதலில் அஜித் குமார், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ராஜேஷ் (இருவரும் டி.ஜி.வைஷ்ணவா), ஈட்டி எறிதலில் அருண்குமார், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரி கிருஷ்ணன் (இருவரும் எம்.சி.சி.) ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

    பெண்களுக்கான குண்டு எறிதலில் மீனாட்சி, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழி (இருவரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எக்னேஷ், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மரிய ராசாத்தி (இருவரும் எத்திராஜ்), ஈட்டி எறிதலில் ஹேமமாலினி (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) ஆகியோர் தங்கப்பதக்கத்தை பெற்றனர். நேற்றைய பந்தயங்கள் முடிவில் ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியும் பதக்க வேட்டையில் முன்னிலை வகிக்கின்றன. இன்று கடைசி நாள் பந்தயம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. 
    ×