என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cricket World Cup 2023"
- இந்தியா தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- நியூசிலாந்து 5 வெற்றி, 4 தோல்விகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. நேற்று முன்தினத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன.
இதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய நாடுகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.
2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் 9 ஆட்டத்திலும் வென்று 18 புள்ளிகளுடன் நாக்அவுட் சுற்றான அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.
லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடிய இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா 8-வது முறையாக அரைஇறுதியில் விளையாடுகிறது. 2 முறை சாம்பியனான அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் வேட்கையில் உள்ளது. கடந்த உலகக் கோப்பை அரைஇறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்னில் இந்திய அணி தோற்று இருந்தது.
அதற்கு நாளைய அரை இறுதியில் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த 22-ந்தேதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்திசாயத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் சொந்த மண் என்பதால் கூடுதல் பலமாகும். இந்த தொடரில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான பேட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
அது நேரத்தில் நியூசிலாந்தும் அபாரமாக விளையாடக் கூடியது. அந்த அணி நாக்அவுட் சுற்றில் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தது. இதனால் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். அரைஇறுதி என்பதால் நெருக்கடி கூட ஏற்படும். இதனால் கவனமுடன் ஆடுவது அவசியமானது.
வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். முதல் 15 ஓவர் பேட்டிங் ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்யும்.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இடம் பெறு வார்கள்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
விராட் கோலி 594 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 2 சதமும், 5 அரை சதமும் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் அவர் டெண்டுல்கரின் 49 செஞ்சுரி சாதனையை முறியடிப்பார். விராட் கோலி சமீபத்தில்தான் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து இருந்தார்.
ரோகித் சர்மா ஒரு சதம், 3 அரை சதங்களுடன் 503 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். இது தவிர ஷ்ரோயாஸ் அய்யர் 421 ரன்னும் (1 சதம், 3 அரை சதம்), லோகேஷ் ராகுல் 347 ரன்னும் (1 சதம், 1 அரை சதம்), சுப்மன் கில் 258 ரன்னும் (3 அரைசதம்) எடுத்து நல்ல நிலையில் உள்ளனர்.
இந்திய அணி வேகப்பந்து மற்றும் சுழற்பந்தில் சிறப்பான நிலையில் இருக்கிறது. மிகவும் முக்கியமான அரைஇறுதியில் பந்துவீச்சு நன்றாக அமைய வேண்டும்.
பும்ரா 17 விக்கெட்டும், முகமது சமி, ஜடேஜா தலா 16 விக்கெட்டும், குல்தீப் யாதவ், 14 விக்கெட்டும், முகமது சிராஜ் 12 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். சமிக்கு முதல் 4 போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 ஆட்டத்தில்தான் அவர் 16 விக்கெட்டை எடுத்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக மட்டுமே விக்கெட் எடுக்கவில்லை.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 2015, 2019 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை இழந்தது. அந்த அணி 9-வது தடவையாக அரைஇறுதியில் விளையாடுகிறது.
நியூசிலாந்து அணி லீக் சுற்றில் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது 4 போட்டியில் தோற்றது.
இந்தியாவை போலவே நியூசிலாந்தும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா (566 ரன், 3 சதம், 2 அரை சதம்), மிச்சேல் (418 ரன் 1 சதம், 2 அரை சதம்), கான்வே (357 ரன்), பிலிப்ஸ் மற்றும் கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
சான்ட்னெர் (16 விக்கெட்), போல்ட் (13 விக்கெட்), பெர்குசன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.
இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவும், நியூசிலாந்தும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும்.
- வங்காளதேச அணிக்கு உலகக் கோப்பை மோசமாகவே அமைந்திருக்கிறது.
கொல்கத்தா:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை தோற்கடித்து நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் அதன் பிறகு அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் இமாலய வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே அரையிறுதி அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது.
1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும். எனவே இது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாகும்.
பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம், சாத் ஷகீல், இமாம் உல்-ஹக்கும், பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், உஸ்மா மிர் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அந்த அணியில் பந்து வீச்சு எடுபடும் ஆட்டத்தில், பேட்டிங் கைகொடுப்பதில்லை. பேட்டிங்கில் அசத்தும்போது, பந்து வீச்சு சொதப்புகிறது. இரண்டும் ஒருசேர நன்றாக அமையாததே அந்த அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது. கடந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி தோற்ற பாகிஸ்தான் அணி முந்தைய தோல்விகளை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்பி அரையிறுதி வாய்ப்பில் ஒட்டி கொண்டிருக்க ஆர்வம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
வங்காளதேச அணிக்கும் இந்த உலகக் கோப்பை மோசமாகவே அமைந்திருக்கிறது. தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த வங்காளதேச அணி அதன் பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய பலமான அணிகளிடம் அடுத்தடுத்து பணிந்தது. அத்துடன் முந்தைய லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் 87 ரன் வித்தியாசத்தில் தோற்று அரையிறுதி வாய்ப்பை அடியோடு இழந்தது. அந்த அணிக்கு எதிராக 230 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேம் 142 ரன்னில் அடங்கிப் போனது. டாப்-6 பேட்ஸ்மேன்களில் 4 பேர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
இந்த தோல்விக்கு பிறகு வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேசுகையில், 'இது எங்களுக்கு மோசமான உலகக் கோப்பை போட்டி என்று சந்தேகத்துக்கு இடமின்றி சொல்லலாம். இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினம். ஆனால் இதுபோன்று கிரிக்கெட்டில் நடக்கும்' என்று வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அடுத்த சுற்று வாய்ப்பை எற்கனவே பறிகொடுத்து விட்டதால் இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் வங்காளதேசம் வரும் ஆட்டங்களில் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டும். மேலும் புள்ளி பட்டியலில் டாப்-7 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 33 ஆட்டங்களில் பாகிஸ்தானும், 5 ஆட்டங்களில் வங்காளதேசமும் வென்று இருக்கின்றன. உலகக் கோப்பையில் இரண்டு முறை மோதியதில் தலா ஒரு வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, சாத் ஷகீல், ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவுப்.
வங்காளதேசம்: லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மஹிதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா அதிக ரன்ரேட்டை பெற்றுள்ளது
- நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் புள்ளிகள் பட்டியலில் மாறிமாறி முதல் இடத்தை பிடித்து வருகின்றன.
நேற்றைய இந்தியா- இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன் இந்தியா முதல் இடத்தில் இருந்தது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. எனினும், ரன்ரேட்டில் இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் 2.032 ஆகும். இந்தியாவின் நெட் ரன்ரேட் 1.405 ஆகும்.
நியூசிலாந்து 6 போட்டியில் 4-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6-ல் நான்கில் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. நெட் ரன்ரேட் குறைவால் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை விட பின் வரிசையை பெற்றுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.
- 6 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்டு மூலம் ஆட்டம் இழந்தனர்
- தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து ஏமாற்றம்
லக்னோவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா முதலில் 229 ரன்கள் சேர்த்தது. பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து பல்வேறு மோசமான சாதனைகளை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்களை பார்ப்போம்.
1. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதன்முறையாக இங்கிலாந்து அணி (நடப்பு சாம்பியன்) தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா 1992-ல் 4 முறை தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.
2. இங்கிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் 129, 156 மற்றும் 170 ஆகிய ரன்களில் ஆல்அவுட் ஆகியுள்ளது. இதற்கு முன் இதுபோன்று தொடர்ந்து மூன்று முறை இங்கிலாந்து 200 ரன்களுக்கு முன்னதாக ஆல்அவுட் ஆனது இல்லை.
3. 6 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்டானார்கள். இது ஒருநாள் போட்டியில் 3-வது சம்பவம் ஆகும். இதற்கு முன் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுபோன்ற சம்பவத்தை எதிர்கொண்டுள்ளன.
- இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் டேவிட் மலான், ஜோருட் தவிர மற்றவர்கள் சொதப்பி வருகிறார்கள்.
- ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
லக்னோ:
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 29-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் இந்தியா தனது முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக விளங்குகிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இருக்கும் இந்திய அணி எல்லா ஆட்டங்களிலும் சிரமமின்றி இலக்கை விரட்டிப்பிடித்தது.
இந்திய அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (354 ரன்கள்), ரோகித் சர்மா (311 ரன்கள்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லும், பந்து வீச்சில் பும்ரா (11 விக்கெட்), குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமியும் நல்ல நிலையில் உள்ளனர். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீளாததால் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த ஆட்டத்திலும் ஆடமுடியாது.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. தனது முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி (வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வி (நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளிடம்) கண்டுள்ள இங்கிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளுக்குரிய முடிவு ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே சிறிய வாய்ப்பு கிட்டும்.
இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் டேவிட் மலான், ஜோருட் தவிர மற்றவர்கள் சொதப்பி வருகிறார்கள். கேப்டன் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹாரி புரூக் ஆகியோரின் பேட்டிங் ஏமாற்றம் அளித்து வருகிறது. நட்சத்திர வீரர்களை அதிகம் கொண்ட இங்கிலாந்து ஒரு அணியாக ஒருங்கிணைந்து ஜொலிக்க முடியாததால் சறுக்கலை சந்தித்து வருகிறது.
இந்திய அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடர்ந்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்க எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி நெருக்கடியின்றி செயல்பட்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 57-ல் இந்தியாவும், 44-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 3 ஆட்டம் முடிவில்லாமல் போனது. உலகக் கோப்பையில் மோதிய 8 ஆட்டங்களில் 4-ல் இங்கிலாந்தும், 3-ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அட்கின்சன், அடில் ரஷித்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது.
- சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்று சிக்கலில் தவிக்கிறது. எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் நீடிக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா போராட்டம் என்பதில் சந்தேகமில்லை.
'அணி சரிவில் இருந்து மீள்வதற்காக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அனைவரும் ஆதரவாக நிற்கிறோம். ஊக்கப்படுத்துகிறோம். ஆனால் உலகக்கோப்பை முடிந்ததும் செயல்பாட்டை ஆராய்ந்து, அணியின் நலன் கருதி அதிரடி முடிவு எடுப்போம்' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது பாபர் அசாமின் கேப்டன் பதவிக்கு ஆபத்து என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. இதுவும் பாபர் அசாமுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்வி தான் பாகிஸ்தானை இப்படியொரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்துள்ளது. 282 ரன்கள் சேர்த்த போதிலும் அதை வைத்து ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த முடியாமல்போய் விட்டது.
சொதப்பலான சுழற்பந்து வீச்சும், மந்தமான பீல்டிங்கும் தான் தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் கேப்டன் பாபம் அசாம் புலம்பி தீர்த்தார். சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவானது. சுழலுக்கு உகந்தது. அதனால் ஷதப் கான், முகமது நவாஸ் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதே போல் பேட்ஸ்மேன்களும் ஒருசேர கைகொடுக்க வேண்டும். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (302 ரன்) நன்றாக ஆடுகிறார். கேப்டன் பாபர் அசாம், இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், இப்திகர் அகமது ஆகியோரும் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை அடையலாம்.
யாரும் எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி 4-ல் வெற்றி (இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வி (நெதர்லாந்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.
பேட்டிங்கில் எதிரணி பவுலர்களை திணறடிக்கும் தென்ஆப்பிரிக்க அணியினர் நடப்பு தொடரில் 4 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இதில் இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தது அடங்கும். குயின்டான் டி காக் (3 சதத்துடன் 407 ரன்), ஹென்ரிச் கிளாசென் (15 சிக்சருடன் 288 ரன்), எய்டன் மார்க்ரம் (265 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, கோட்ஜி, யான்சென் (தலா 10 விக்கெட்), கேஷவ் மகராஜ் (7 விக்கெட்) கலக்குகிறார்கள். சரியான நேரத்தில் தென்ஆப்பிரிக்க அணி சிறந்த நிலையை அடைந்திருக்கிறது.
ஆனால் சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் அதற்கு ஏற்ப வியூகத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது முக்கியம். மொத்தத்தில் தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் அந்த அணியினர் களத்தில் வரிந்து கட்டுவார்கள்.
ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 82 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 51-ல் தென்ஆப்பிரிக்காவும், 30-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக்கோப்பையில் மோதிய 5 ஆட்டங்களில் 3-ல் தென்ஆப்பிரிக்காவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், ஷதப் கான், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, உஸ்மா மிர், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது லிசாத் வில்லியம்ஸ்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (27-ந்தேதி) நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பயண போக்குவரத்து செலவின தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது.
எனவே, போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இதுவரை 25 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அனைத்து அணிகளும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளன
- இந்தியா மட்டும் தோல்வியை சந்திக்காக அணியாக இருந்து வருகிறது
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதுவரை 25 போட்டிகளில் முடிவடைந்துள்ளன. ஒவ்வொரு அணிகளும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளன.
இந்தியா ஐந்து போட்டிகளில் ஐந்திலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா நான்கு வெற்றிகள் பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்தையும், நியூசிலாந்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, அதன்பின் தொடர்ந்து வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 5 முதல் 7 இடங்களை பிடித்துள்ளன.
வங்காளதேசம் 8-வது இடத்தையும், இங்கிலாந்து 9-வது இடத்தையும், நெதர்லாந்து கடைசி இடத்தையும் பிடித்துள்ளன. இந்த மூன்று அணிகளும் தலா ஒரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
- நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா விளையாடவில்லை என ஏற்கனவே அறிவிப்பு
- சூர்யகுமாரின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால், விளையாடுவாரா? என்பது சந்தேகம்
உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ந்து நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. இன்று நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி தரம்சாலாவில் நடைபெற இருக்கிறது.
இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும். கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாற்றி எழுத இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்திய அணி நேற்று பயிற்சி மேற்கொண்டது. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த சூர்யகுமார் யாதவின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளாமல் வெளியேறினார்.
ஏற்கனவே, ஹர்திக் பாண்ட்யா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்திய அணி கவலை அடைந்துள்ளது.
மேலும், இஷான் கிஷன் பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென தேனீக்கள் படையெடுத்து வந்தன. அப்போது இஷான் கிஷனை சில தேனீக்கள் கொட்டின. இதனால் அவரும் பயிற்சியை கைவிட்டு வெளியேறினார். ஆனால், விளையாட முடியாத வகையில் அவருக்கு ஆபத்து இல்லை.
- சென்னை ரசிகர்கள் எப்போதும், நல்ல போட்டியை ரசித்துள்ளனர்.
- சென்னையில் ஐந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.
2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி, நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னணி வீரர்களும் தங்களின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே கிரிக்கெட் உலகக் கோப்பை உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 50 ஓவர் உலகக் கோப்பை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி கூறியதாவது..,
"சென்னை சேப்பாக்கம் மைதானம், உலகக் கோப்பை தொடருக்காக சிறப்பான முறையில் தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. இங்குள்ள புதிய பெவிலியன் தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஐ.பி.எல். தொடரின் போதே, இந்த பெவிலியனை பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர். மழை இல்லையெனில், சிறப்பான கிரிக்கெட்டை இந்த முறை ரசிக்க முடியும்."
"சென்னை ரசிகர்கள் எப்போதும், நல்ல போட்டியை ரசித்துள்ளனர். சென்னையில் ஐந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு எப்போதும் போல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது."
"பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சென்னையில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. சேப்பாக்கம் மைதானம் போட்டிக்கு தயார் நிலையில் உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் இல்லாதது வருத்தமாகவே உள்ளது," என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்