search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darpanam"

    • முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.
    • அமாவாசை விரதமிருப்பவர் காலையில் சாப்பிடக் கூடாது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். அமாவாசை விரதங்களில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகிய மூன்றும் விசேஷமானவை.

    மகாளய அமாவாசையன்று, காலையில் எழுந்து குளித்து விட்டு இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்ப ணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரை யோரங்களில் இருப்பார்கள்.

    அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற்றிருக்கும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும். தரையிலோ, எட்டும் இடங்களிலோ வைத்தால் நாய்கள், பன்றிகள் தின்றுவிடும்.

    முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும்.

    காக்கைகள் உண்டபிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவுமுறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் பயன்படுத்த வேண்டுமேயொழிய, பிறருக்கு தானமாகத் தரக்கூடாது.

    அமாவாசை விரதமிருப்பவர் காலையில் சாப்பிடக் கூடாது. பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
    • முன்னோர்கள் ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர்.

    மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.

    புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.

    திலம் என்றார் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.

    இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

    விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன் களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர் களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.

    பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள்.

    உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.

    இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.

    மகாளய பட்சம் என்னும் முன்னோர் வழிபாட்டுக்கான 15 நாட்கள் நாளை (18-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதியில் முடிகிறது. இந்த நாட்களில் முன்னோரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

    மகாளயபட்சத்தில் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து உள்ளம், உடல் தூய்மையுடன் நாம் காத்திருக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வது கூடாது.


    இந்த காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவது இல்லை. ஏனெனில் முன்னோருக்கான திதி, தர்ப்பணம், சிரார்த்தம், தானம், தர்மம் செய்வதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. கன்னியாகுமரி, ராமேசுவரம், வேதாரண்யம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை கோவில்களுக்கு செல்லலாம்.

    முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு கீரை, பழம் கொடுக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முன்னோர்களின் பெயரை உச்சரித்து 'காசி காசி' என்று சொல்லியபடியே, கால் மிதிபடாமல் வீட்டு வாசலில் எள், தண்ணீர் விட்டாலும் பலன் கிடைக்கும்.

    மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    பூலோகத்தில் தங்கி இருக்கும் 15 நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

    மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

    ஆக நாம் செய்யும் பித்ரு தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.

    உங்கள் குல வழக்கப்படி தர்ப்பண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும்.

    எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெற தவறாதீர்கள்.

    மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்றிலும் அதிக புண்ணியத்தை தருவது மகாளய அமாவாசை ஆகும்.

    இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு வகை பித்ருக்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்த திதி சிறப்பு நாட்களை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்டவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முழுமையான பலன்களை பெற முடியும்.

    அன்று நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும், அவர்களை மனம் குளிரச் செய்யும். அவர்களை மேலும் சாந்தி அடையச் செய்யும். தர்ப்பணத்தை வீட்டில் வைத்தும் கொடுக்கலாம். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீருங்கள்.


    மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி பித்ரு பூஜை செய்து, தமது மூதாதையர்களை வழிபடுவார்கள்.

    மகாளய பட்ச நாட்களில் தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம், விஷ்ணு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முடியாதவர்கள் காகத்திற்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு அகத்தி கீரை வாங்கிக் கொடுக்கலாம்.

    தர்ப்பணம் கொடுக்காவிட்டால் பித்ருக்கள் மனம் வருந்த நேரிடும். ஏனெனில் எந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அந்த பித்ருக்களுக்குத்தான் தாகம் தீர்ந்து, ஆத்ம சக்தி அதிகமாக கிடைக்கும்.

    வாழும் காலத்தில் நாம் நம் முன்னோர்களிடம் அன்புடன் இருந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். சிலர் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்க விட்டிருக்கலாம்.

    அந்த பாவத்துக்கு பரிகாரமாக, மகாளயபட்ச 15 நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. எனவே மகாளய பட்ச 15 நாட்களும் மூதாதையர்களை ஆராதியுங்கள். யார் ஒருவர், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு பித்ருக்கள் தெய்வ சக்திகளை பரிசாக தந்து விட்டுச்செல்வார்கள். முன்னேற்றம் தானாக வரும்!

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
    • பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது.

    ஆண்டு தோறும் ஆடி அமாவாசை மற்றும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் மகாளய அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் கோவில் குளக் கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.

    இன்று ஆடி அமாவாசை நாள் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    பக்தர்கள் தங்கும் இடம், விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால் ஏராளமா னோர் கோவில் நுழைவு வாயில், வெளியே உள்ள சிமெண்ட் சாலை, பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெட்ரோல் பங்க் மற்றும் நடைபாதைகளிலும் தூங்கினர். இரவில் திடீரென சிறிது நேரம் மழை பெய்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    ஆடிஅமாவாசையை முன்னிட்டு இன்று அதி காலை வீரராகவர் கோயில் அருகில் உள்ள ஹிருத்தா பநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அவர்கள் அங்கு தயாராக இருந்த புரோகிதர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் வீரராகவப் பெருமாளை வழி பட வந்தனர். ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பெரு மாளை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் காரண மாக திருவள்ளூர் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
    • ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    திருச்சி:

    தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    இதற்காக 500-க்கும் மே ற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். மேலும் காவிரியில் தற்போது தண்ணீர் இருகரைகளையும் தொட்டு கரைபுரண்டு செல்வதால் ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

     தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும் மண்டப கரைகளில் அமரவைக்கப் பட்டனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்ட னர்.

    திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    காவிரி கரைகளில் திதி கொடுக்கும் இடங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இதனால், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் நள்ளிரவு முதலே தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வருகை தந்ததால், அப்பகுதியில் எந்த விதமான அசம்பா விதமும் ஏற்படாமல் இருக்க, போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு இருந்தது.

    மேலும், இருசக்கர வாகனம் மட்டுமே அம்மா மண்டபம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. கார், வேன், ஆட்டோ போன்ற எந்த வாகனங்களையும் அம்மா மண்டபம் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பாக, சாலையில் முழுவதும் காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமரா அமைத்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக, ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பொதும க்களுக்கு அறிவு ரைகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தபட்டு வருகிறது.

    காவிரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பக்தர்கள் அம்மா மண்டபத்தில் அமைக் கப்பட் டிருந்த தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரில் புனித நீராடினர். மற்றொரு புறம் தடுப்புக்கட்டைகள் கட்டி அதில் நீராட அனுமதிக்க ப்பட்டனர்.

    தர்ப்பணம் கொடுத்தவர் கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலா ண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    கரூர் மாவட்ட காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் நெரூர், மாயனூர், வாங்கல் உள்ளிட்ட ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலை முறை முன்னோ ர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர்.

    அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு முன்னோர்களை வணங்கி சென்றனர். பின்னர் அவர்களின் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையல் இட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

    • ஒகேனக்கல் பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
    • கரையோரங்களில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

    ஒகேனக்கல்:

    ஆடி, புரட்டாசி, தை ஆகிய தமிழ் மாதங்களில் வரும் மகளாய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஐதீகம். மேலும் நாம் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் நம்பிக்கையும் உண்டு .

    அதன்படி ஆடி அமாவாசை இன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விடுவர்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக உள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் வாகனம் மடம் சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்படுகிறது.

    மேலும் பஸ்சில் தர்ப்பணம் கொடுக்க வரும் மக்களை கரையோர பகுதிகளான சத்திரம், நாகர்கோவில், முதலைப்பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

    இதன் காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே கரையோரங்களில் பூஜை செய்து வழிபட்டனர். இதனால் ஒகேனக்கல் ஆடி அமாவாசை என்று வெறிச்சோடி காணப்பட்டது. 

    • பக்தர்கள் அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
    • அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் இந்து சமயத்தை பொறுத் தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத் துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆடி அமா வாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முதலே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப் பாட்டனார் உள்ளிட்டோ ரின் பெயர்களை கூறியும், நினைவில் இருந்த முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழி பட்டனர். முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது. வழக் கமாக பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். ஆடி அமாவாசையான இன்று நடை சாத்தப்படாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், இன்று அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தற்போது ராமேசுவரம் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 7-வது நாளான இன்று (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப்பல்லக்கிலும், பகல் 11 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந் தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    • 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
    • ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம்.

    ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (4-ந்தேதி) ஆடி அமாவாசை தினம்.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே வருகிற ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.


    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை....

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    இந்த மூன்றையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்றுபடுத்தியதன் மூலம் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டுமொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே 4-ந்தேதி நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.


    அடுத்து, தானம்...

    உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை வருகிற ஞாயிற்றுக்கிழமை செய்யுங்கள். நாட்டில் எத்தனையோபேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.

    ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை - எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.


    இதையடுத்து தர்ப்பணம்...

    நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4.56 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை 5.32 மணி வரை அமாவாசை திதி நேரம் தான். எனவே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே தர்ப்பணம் செய்து கடமைகளை நிறைவேற்றலாம்.

    நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும் தான் அவர்களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினி போடலாமா? அது எவ்வளவு பெரிய பாவம்? இந்த பாவ மூட்டைகளை நீக்க 4-ந்தேதி மறக்காமல் தர்ப்பணம் கொடுங்கள்.

    சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆத்ம தர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.

    முக்கியமாக தாய் தந்தையர்களை இழந்தவர்கள் இதில் பெரும் பங்கெடுத்து கடமைகளை செய்ய வேண்டும் மற்றும் தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார் சுற்றத்தவர்கள் என நம்மை விட்டு அமரர்களாகிய அனைவருக்கும் இதுபோற்றி வணங்கத்தக்க நாளாகும்.

    அப்பா, அம்மா, உறவு என அனைவருக்கும் நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்ய முடியாதவர்கள் இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில் தீட்டு துடக்கு முடிந்த பின் பிதுர் கடன் செய்ய முடியாதவர்கள் இந்த ஆடி அமாவாசை நாளில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.

    • பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள்.
    • கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள். தர்ப்பணம் என்பது அவர்களை திருப்தி செய்வதற்காக செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். பித்ருக்கள் என்பவர்கள் இறந்துபோன நமது அப்பா மற்றும் அம்மாவை சேர்ந்தவர்களை குறிக்கும்.

    நம் குலம் நன்றாக விளங்கவும், வம்ச விருத்திக்காகவும், தோஷங்கள் இல்லாமல் இருக்கவும் நம் முன்னோர்களை நினைத்து இந்த கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும். தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம், பித்ருக்களுக்கான தர்ப்பணம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் (எஜமானர்கள்) ஆவார்கள். (தேவதர்ப்பணம், ருஷி தர்ப்பணம் போன்றவை அனைவரும் செய்யலாம்).

    பித்ருக்கள் தர்ப்பணம், தகப்பனார் வழியில் ஆறு பேர், தாய் வழி பாட்டனார் ((மாதா மகர்) வழியில் ஆறு பேர் ஆக 12 பேருக்கு செய்ய வேண்டும். மாதா மகர் (தாய் வழி பாட்டனார்) உயிருடன் இருந்தால், அந்த வர்க்கத்திற்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. அவருக்கு பதிலாக முன்னோர் ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம்.

    • ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
    • பித்ரு கடனை அடைக்காவிட்டால் பித்ரு தோஷம் உண்டாகும்.

    ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரக்கூடிய `அமாவாசை திதி' மிக முக்கியமானதாகும். சூரிய பகவான் `பித்ரு காரகன்' என்றும், சந்திர பகவான் `மாத்ரு காரகன்' என்றும் போற்றப்படுகின்றனர்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கக்கூடிய அமாவாசை நாளில் மரணம் அடைந்த பெற்றோருக்கு தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை கூடுதல் சிறப்புக்குரியவை. மனிதராக பிறந்த ஒவ்வொருவரும், தேவ கடன், பித்ரு கடன் ஆகியவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

    பித்ரு கடனை அடைக்காவிட்டால் `பித்ரு தோஷம்' உண்டாகும். நம்மில் பலரும் `எனக்கு தர்ப்பணம் செய்ய நேரம் இல்லை. அதனால் அன்னதானம் செய்கிறேன்' என்று சொல்வார்கள். அன்னதானம் செய்வதும் பெரிய புண்ணியம்தான். ஆனால் தர்ப்பணத்தை விட்டு விட்டு செய்யும் அன்னதானத்திற்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே கட்டாயமாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    எள்ளு சேர்த்த நீரை, பித்ருக்களுக்காக விட வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். பித்ரு லோகத்தில் உள்ள தேவர்களின் ஆசியும் சேர்த்து கிடைக்கும்.

    ஒரு சமயம் சிவபெருமானின் திருவடியை கண்டடைவதற்காக வராக (பன்றி) அவதாரம் எடுத்தார், விஷ்ணு பகவான். அவர் வராக தோற்றத்தில் பூமியை குடைந்து சென்றபோது, அவரது உடம்பில் இருந்து வியர்வை துளிகள் அரும்பியது. அந்த வியர்வை துளிகள் பூமியில் விழுந்ததும், கருப்பு எள்ளாக மாறியதாக புராணங்கள் சொல்கின்றன.

    தாய்-தந்தையருக்கு அளிக்கும் தர்ப்பணத்தில் இந்த கருப்பு எள்ளை சேர்த்துக் கொள்வது மிகவும் புண்ணியம் தரக்கூடியது.

    ஒரு மனிதன் இறந்த பின்பு, அவனது ஆன்மாவானது, ஐந்து வகை உடல்களை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. பார்த்திவம், ஜலியம், ஆக்னேயம், வாயவ்யம், தைஜசம் என்பவை அந்த ஐந்து வகை உடல்கள். இவற்றில் உத்தமம், அதம், மத்திமம் என்று உண்டு.

    இப்படி பிரிவதில் 15 விதமான உடல்கள் இருக்கும். இதில் இறந்த நம் முன்னோர்கள், 'ஜலியம்' என்ற சரீரத்தை எடுத்துக்கொள்கின்றனர். நம் முன்னோர்கள் ஜலிய சரீரம் எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு அளிக்கும் உணவானது, ஜல (நீர்) சம்பந்தமாக இருப்பது சிறப்பானதாக சொல்கிறார்கள்.

    எனவே தான், நாம் நம்முடைய பித்ருக்களுக்கு, கங்கை, காவிரி, கோதாவரி, யமுனை உள்ளிட்ட பல புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று, நீர் கொண்டு தர்ப்பணம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    இங்கே பலருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சந்தேகம் உண்டு. 'நம் முன்னோர்களில் தாயோ, தந்தையோ அல்லது பாட்டியோ, பாட்டனோ மறுபடியும் பிறவி எடுத்திருந்தால், அவர்களது திருப்திக்காக நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றால் என்ன பலன்?' என்ற கேள்வி எழும்.

    இறந்தவர்கள் பித்ரு லோகத்தில் இருந்தால், நாம் தர்ப்பணம் கொடுப்பதில் பலன் உண்டு. நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை பித்ரு தேவதைகள் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) சேர்க்கின்றனர்.

    அதே சமயம் அவர்கள் அவரவர் செய்த கர்ம வினைப்படி மனிதராகவோ அல்லது பறவையாகவோ, மிருகங்களாகவோ பிறந்திருந்தால், பித்ரு தேவதைகள் அவர்களுக்கு அடுத்த ஜென்மாவிலும் பசி இல்லாமல் இருக்க அந்தந்த சிரார்த்தத்திற்கு ஏற்ப உணவை வழங்குகின்றனர். அந்த வகையில் பித்ரு தேவதைகளின் ஆசி எப்போதும் நமக்கு கிடைக்கப்பெறும்.

    ஆயு: புத்ராந் யஸ: ஸ்வர்கம் கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரியம்

    பாந் ஸுகம் த நம் தா'ன்யம் ப்ராப்நுயாத் பித்ரு பூஜநாத்

    என்ற வாக்கியபடி பித்துருக்களுக்கு முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு, நீண்ட ஆயுளும், குழந்தை செல்வமும், புகழும், சுகமும் உண்டாகும்.

    அமாவாசை தினத்தன்று செய்யும் தர்ப்பணத்திற்கு `தர்ச சிரார்த்தம்' என்று பெயர். தந்தை இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம் செய்ய வேண்டும். தலைமுறையில் யாராவது உயிருடன் இருந்தால் (தாத்தா), அவர்களை விட்டுவிட்டு மற்ற மூன்று தலைமுறைகளுக்கு திலதர்ப்பணம் செய்ய வேண்டும்.

    தர்ப்பணம் செய்யும் நாளில் தர்ப்பணம் செய்பவர்கள் கட்டாயம் நீராட வேண்டும். பின்னர் ஏற்கனவே துவைத்து வைத்திருந்த வஸ்திரங்களை அணிந்து கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கருப்பு எள், தர்ப்பை அவசியம்.

    தெற்கு திசை எமனுக்கு உரியதாக கருதப்படுவதால், முன்னோர்கள் சம்பந்தமான கர்மாக்களை தெற்கு திசையை நோக்கிதான் செய்ய வேண்டும். தர்ப்பையின் நுனியும் தெற்கு நோக்கி இருத்தல் வேண்டும்.

    பொதுவாக ஏதாவது ஒரு ஆசனத்தில், மனையில் அமர்ந்து கொண்டு இதனை செய்ய வேண்டும். கோவில் குளக்கரை போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது, ஏதாவது துண்டு விரித்து அதன் மீது அமரலாம்.

    சுப காரியங்களுக்கு இரட்டை படையிலும், பித்ரு காரியங்களுக்கு ஒற்றைப் படையிலும் கையில் அணியும் பவித்திரம் செய்வார்கள். இந்த பவித்திரமானது, பெரும்பாலும் தற்போது கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும், அன்றைய தினம் மட்டுமாவது கட்டாயம் பூணூல் அணிய வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள், குறைந்த பட்சம் ஆடி அமாவாசை மற்றும் அதற்கு முன் தினம், பின்தினம் என்று மூன்று நாட்களாவது அசைவத்தை தவிர்க்க வேண்டும்.

    • முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
    • கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • ராமேசுவரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது.
    • திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது. இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சுவாமி வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் தை அமாவாசை, மஹாளய அமாவாசை, ஆடி அமா வாசை மற்றும் மாதந்திர அமாவாசை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வழிபாடு செய்கின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று பங்குனி மாத சர்வ அமா வாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசு வரம் வருகை தந்தனர்.

    தம்மோடு வாழ்த்து மறைந்து முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் நீராடி திதி கொடுத்து வழிபட்டனர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ஏற்கனவே தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்தது. அசம்பாவி தங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலிலும் பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
    • இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் புகழ் பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகு திகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்ப ணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.

    இந்த நிலையில் தற்போது அக்னி தீர்த்தகடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் 400 வரை வசூலிக்கப்படும் எனவும். அதில் இருந்து ரூ.80, 160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னோர்களுக்காக திதி கொடுக்க கட்ட ணம் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேசுவரம் அக்னி தீர்த்தத்ததில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்ட பூஜை செய்யக்கூட கோவில் நிர்வாகத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

    நம் முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற தி.மு.க. அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இந்த முறையற்ற உத்தரவை உடனடியாக திரும்பப்பெற்று இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களை தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் எனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் அதற்கான விலையை தி.மு.க. அரசு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சட்ட விதிகளின்படி கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயிக்கலாம். ஆனால் கடற்கரையில் தனிமனித பூஜைக்கு எப்படி கட்டணம் வசூலிக்க முடியும். இது பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் அதிக கட்டண வசூலிக்கும் வழிவகுக்கும். எனவே அரசின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.

    ×