search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karisalanganni"

    • கரிசலாங்கண்ணியை கொண்டு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது.
    • வயல் வரப்புகளில் அதிகமாக வளரும்.

    கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக வளரும். இதில் இரு வகை உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று வெள்ளை நிறத்திலும் பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

    இந்த கீரையில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் இது பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு காயகல்ப மூலிகை.


    மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி

    இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சுரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும், ஏராளமான தாதுசத்துகளும் இந்த கீரையில் உள்ளன. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

    சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.

    மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.


    வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி

    கண், முகம் வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி, நல்லெண்ணெய் 100 மி.லி, அதிமதுரம் 10 கிராம் போன்ற வைகளை சேர்த்து காய்ச்சி, 5 மி.லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்..

    இதனை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும். இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிற மடையும்.

    ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.

    இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந் தால் வாந்தியாக வெறியேறி விடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.

    சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீர கத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்பப்படுகிறவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.

    மேற்கண்டவாறு தினமும் கீரையை மென்று பல்துலக்குவது தந்த சுத்தி என்றழைக்கப்படுகிறது. பச்சையாக கீரை கிடைக்காத வர்கள் ஒருதேக்கரண்டி கீரை பொடியை கொண்டும் தந்த சுத்தி செய்யலாம்.

    கரிசலாங்கண்ணியை கொண்டு பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. கூந்தல் தைலங்களிலும் இதன் சாறு சேர்க்கப்படுகிறது. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்தால் என்றும் இளமையுடன் திகழலாம்.

    • மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என்று 2 வகை உண்டு.
    • ராமலிங்க அடிகளார் கரிசலாங்கண்ணியை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

    கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.

    மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை

    சித்தர்களில் ஒருவரான ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் அருட்பிரகாச வள்ளலார் மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

    கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் ரத்த புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும். இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை, கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள்.

    `கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்' என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம். இம்மஞ்சள் கரிசலாங்கண்ணி உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் போன்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசலாங்கண்ணி பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்து காணப்படும்.

    வெள்ளை கரிசலாங்கன்னி

    வெள்ளை கரிசாலாங்கன்னி சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. அத்துடன் ரத்தசோகை அல்லது உடலின் மற்றும் பாண்டு பூரணமாக குணமடையும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.

    ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலாங்கன்னி சாறு கலந்து கொடுத்துவந்தால் தட்டணுக்கள் எண்ணிக்கை உயரும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் புற்றுநோய், கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களை முழுக்க குணமாக்க கூடிய ஆற்றல் இந்த கரிசலாங்கன்னிக்கு உண்டு.

    கரிசாலை, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை என அனைத்தையும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் உடம்பில் பித்தம் மற்றும் தலை சார்ந்த அனைத்துபிரச்சினைகளும், இளநரையையும் சரி செய்யலாம்.

    ×