search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilankan navy"

    • மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது.
    • மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காண செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்திருக்கின்றனர்.

    தற்போது 134 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 187 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

    மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காண செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தயாராக எழுதி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கையை மட்டும் மாற்றி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்புவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டு மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது.
    • 7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மண்டபம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஜூன் மாதம் 22ந்தேதி அன்று மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அடித்து விரட்டினர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

    ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஈசாக் ராபின், செல்வகுமார் ஆகியோரின் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்திருந்த சகாய ராபர்ட்(வயது49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோபு (24), ஹரிகிருஷ் ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எல்லை தாண்டி வந்ததாக கூறி ராதா (44), முத்துராம லிங்கம் (51), யாக்கோபு (24), இவரது மகன்கள் பொன் ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீண்டும் இதேபோல் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து சகாய ராபர்ட்டுக்கு 1 வருட சிறை தண்டனையும், ஹரிகிருஷ்ணனுக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்கு தகுந்த தீர்வு காண கோரி மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடி மீனவர்கள் கைது குறித்து தகவல் அறிந்த மீனவர்கள், கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது.
    • மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு இலங்கை தூதரர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடற்படையால் ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நேற்று 359 மீன்பிடிக் கப்பல்கள் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குள் சென்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அவர்களது படகு மீன்பிடிக் கப்பல் ஒன்றின் மீது (IND-TN-10-MM-73) மோதியது.

    இந்த சம்பவத்தின் போது கப்பலில் இருந்த 4 மீனவர்களில் 1 மீனவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார், 1 மீனவர் தற்போது காணாமல் போயுள்ளார், மேலும் இரு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    சமீபகாலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. நேற்று நடந்த சோகமான சம்பவம், நமது மீனவர்களில் ஒருவரின் மரணம் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டது, உங்கள் தலையீட்டின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    காணாமல் போன தமிழக மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வெளியுறவு அமைச்சகம் தலையீடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    முன்னதாக, இச்சம்பவம் குறித்து அறிந்த மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு இலங்கை தூதரர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


    • எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.
    • பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 1-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதிகாலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

    இதையடுத்து பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

    கடந்த இரு வாரங்களில் மட்டும் 40க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    எனவே, ஒவ்வொருமுறை மீனவர்கள் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை இனியும் தொடராமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    • இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் இன்று 22 மீனவர்களும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 23-ந்தேதி அதிகாலை கச்சத்தீவு, நெடுந்தீவுக்குக்கு இடையே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் ரெஸ்மன், ஜஸ்டின், கெரின் ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். படகில் இருந்த சகாயம் (61), சந்தியா கிரிம்ஷன் (24), ஜெகன் (29), கருப்பையா (47), சுரேஷ் பாபு (40), காளிதாஸ் (30), ரூபின் (38), கண்ணன் (30), நாகராஜ் (34), ராஜேந்திரன் (39), புரூஸ்லீன், காளீஸ்வரன், ராஜ், முருகானந்தம், முத்துக்குமார், சீமோன் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்தனர்.

    இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் இன்று 22 மீனவர்களும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது ராமேசுவரம் மீனவர்களின் காவலை வருகிற 18-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது. விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் காவலை இரண்டாவது முறையாக இலங்கை கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டது மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

    கடந்த வாரம் ராமேசுவரத்திலிருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே இலங்கை கடற்படையை கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

    இதனிடையே, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    • தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.
    • தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், கடலூர் மாவட்ட மீனவர் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் என மொத்தம் 10 பேர் கடந்த ஜூன் 23-ம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர், தங்களின் சுற்றுக்காவல் படகை தமிழக மீனவர்களின் படகு மீது மோதியுள்ளனர்.

    அதில் சுற்றுக்காவல் படகில் இருந்த ரத்னாயகா என்ற வீரர் கடலில் விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழக மீனவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாளே கடலில் விழுந்து மீட்கப்பட்ட கடற்படை வீரர் ரத்னாயகா உயிரிழந்து விட்டதால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகாவின் உயிரிழப்புக்கு தமிழக மீனவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அவர்கள் அப்பாவிகள். வங்கக்கடலில் பிழைப்புக்காக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கைது செய்யும் நோக்குடனும், தாக்கும் நோக்குடனும் அவர்களின் படகுகள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள், தங்களின் ரோந்து படகுகளை அதிவேகமாக ஓட்டி வந்து மோதினார்கள்.

    அதனால் ஏற்பட்ட நிலைகுலைவில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா முதுகுத் தண்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார். இது முழுக்க முழுக்க விபத்து. அதுவும் இலங்கைக் கடற்படையினரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து. அதற்கு எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழக மீனவர்களை பொறுப்பாக்குவதும், தண்டிக்கத் துடிப்பதும் நியாயமல்ல.

    இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொலை வழக்கில் தமிழக மீனவர்களை தொடர்புப்படுத்தி இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் என்ன பதில் கூறினார்கள்? என்பது தெரியவில்லை. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது.

    அதற்காக தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அவற்றை மத்திய அரசு ஏற்கக் கூடாது. இன்னும் கேட்டால் இதுவரை 800-க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு காரணமான சிங்கள வீரர்களை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி தான் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

    இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்திற்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழக மீனவர்கள் 25 பேரையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
    • கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    மீனவர்கள் கைது நடவடிக்கையால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
    • ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    நாகை:

    நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. மேலும் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    முன்னதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை நேற்று எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை கடற்படையின் அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது.
    • தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிப்பது அவர்களின் உரிமை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான இரு மாத தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதி தான் முடிவுக்கு வந்தது. அதன்பின் மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற இரண்டாவது நாளிலேயே தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்களை கைது செய்வதையே சிங்களக் கடற்படை தொழிலாக வைத்திருக்கிறது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.

    தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிப்பது அவர்களின் உரிமை. அதற்காக அவர்களை கைது செய்ய இலங்கை அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதையும் மீறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை மறுநாள் (ஜூன் 20) அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபருடனான சந்திப்பின் போது, தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டுவது குறித்தும், இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை அவர்களின் படகுடன் விடுதலை செய்வது குறித்தும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ×