search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "today news"

    • பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கும், உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
    • ஒரு கடைக்கு 2 கைக்குழந்தைகளுடன் பெண்கள் குடை பிடித்த படி வந்தனர்.

    மதுரை:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, விருதுநகரில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே சாலைகள் மோசமாக உள்ள நிலையில் திடீர் மலை காரணமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் மாறி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மழைநீர் தேங்கியிருக்கும் பள்ளங்களில் விழுந்து காயமடைவது நிகழ்ந்து வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் மிதமாகன மலை பெய்தது. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. நேற்று சாத்தூரில் உள்ள ஒரு கடைக்கு 2 கைக்குழந்தைகளுடன் பெண்கள் குடை பிடித்த படி வந்தனர்.

    கடை அருகே நெடுஞ்சா லைத்துறையால் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மழைநீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. இதை அறியாமல் கைக்குழந்தைகளுடன் வந்த 2 பெண்களும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர்கள் விரைந்து செயல்பட்டு 2 கைக்குழந்தைகள், பெண்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.

    பெண்கள் 2 குழந்தையுடன் பள்ளத்தில் விழும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதற்கு பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கும், உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.


    • அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் அரசியல் கலப்பது சரியல்ல.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்த நாளை காங்கிரசார் இன்று கொண்டாடினார்கள். இதையொட்டி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் சின்னமலையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    அதைத் தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் ராஜீவ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இலவச மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.

    செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதவாதத்துக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்தவர் கலைஞர். அவருக்கு நாணயம் வெளியிட்டது சிறப்பு. அதே நேரம் அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் அரசியல் கலப்பது சரியல்ல. இதை காரணமாக வைத்து பா.ஜகவுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்று ஹேஸ்யமாக சொல்வது தவறு. எங்கள் கூட்டணி உறவு கெட்டியாக உள்ளது.

    மதவாதத்தை எதிர்ப்பதில் காங்கிரஸ் எந்த அளவு தீவிரமாக உள்ளதோ அதே அளவுக்கு தீவிரமாக இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே அவர் அந்த பக்கம் போக மாட்டார். முத்தமிழறிஞர் கலைஞரை பற்றி தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்கு முன்பும் பாஜகவினர் எவ்வளவு வசைபாடினார்களோ அதையும் திரும்ப பெற வேண்டும்.

    ஒன்றிய அரசு தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கி உள்ளது. டீ செலவுக்குக் கூட போதாத இந்த தொகையால் தமிழகத்தில் எந்த ரெயில்வே திட்டத்துக்கும் பலனில்லை. எனவே மத்திய அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயுடன் ரூ.1 கூடுதலாக சேர்த்து ரூ.1001-ஐ மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், விஜய் வசந்த் எம்.பி. மாநில நிர்வாகிகள் டி.செல்வம், தணிகாசலம், தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர் முத்தழகன், தி.நகர் ஸ்ரீராம், இல.பாஸ்கரன், திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும்.
    • தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் இதை முழுமையாக செயல் படுத்த முடியவில்லை.

    இந்த நிலையில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஏற்கனவே ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்த போது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு முன்பு அபராதம் 50 ரூபாய் என இருந்த நிலையில் இப்போது ரூ.2000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


    இதன் பிறகு தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி கூறியதாவது:-

    அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும். அவர்கள் பிற மொழியை பயன்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அந்த பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும்.

    தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற வேண்டும்.

    எல்லா இடங்களிலும் தமிழ் பெயர் பலகைகள் வைக்கப்படுவதை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ் வளர்ச்சி செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் எங்கு சென்றாலும் தமிழில் பெயர் பலகை வைக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி இந்த இரு துறைகளின் சார்பில் கூட்டாக மாதம் இருமுறை ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அதையும் மீறி பிற மொழியில் மட்டும் பெயர்கள் இருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இப்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தியாகத்தின் திருஉருவமாய் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சுந்தரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு காங்கிரஸ் சார்பில் வீரவணக்கத்தை செலுத்தி உள்ளோம். பிரிட்டிஷ்காரர்களை விரட்டி அடித்த பெருமை தீரன் சின்னமலைக்கு உண்டு. ஆனாலும் பிரிட்டிஷ்காரர்களால் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வேங்கை, தீப்பொறி இந்த மண்ணிலிருந்து பிறந்தது. இது போன்ற தலைவர்கள் வாங்கி கொடுத்த இந்த சுதந்திரத்தை இன்று கேலிக்கூத்தாக்கியுள்ளது பாசிச சக்திகள். சுதந்திரத்துக்காகவும், இந்த மண்ணுக்காகவும் போராடியவர் தீரன் சின்னமலை. அவரை எப்படி பிரிட்டிஷ்காரர்கள் பலி வாங்கினார்களோ அதே போல் பிரிட்டிஷ் ஏகாதிபதியத்தை எதிர்த்தவர்களையும் அவர்கள் பலி வாங்கினர். அவரைப் போன்று இப்பவும் சுதந்திரத்துக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறார். அவர் மீது உண்மைக்கு புறம்பான பொய்யான வழக்குகள் போடப்படும் நிலை இந்த மண்ணில் நிகழ்ந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    சட்ட ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை. போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது. போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும். பா.ஜ.க அரசிடம் தான் ராணுவ அமைப்பு, விமானம், கடற்படை, பிரிவு என பல்வேறு அமைப்புகள் இருக்கு. அவர்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. குஜராத் தான் போதை பிறப்பிடம் என்று சொல்கிறார்கள். அங்கிருந்துதான் தமிழ்நாடு பல்வேறு இடங்களுக்கு செல்கிறது என்று சொல்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. போதைப் பொருள் கலாச்சாரம் எங்கு ஆரம்பிக்கிறது என்று பார்க்க வேண்டும். குஜராத்தில் ஒரு தொழிற்சாலையில் பிடித்திருக்கிறார்கள். அங்கு கட்டுப்படுத்தினாலே தமிழ்நாட்டுக்குள் போதைப் பொருட்கள் வராது என ஆய்வாளர்கள் கட்டுரை எழுதி உள்ளனர்.

    அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிபுணர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்து செல்வப்பெருத்தகை கூறும் போது, நாங்கள் எல்லாம் பாதுகாப்பாக தான் இருக்கிறோம். தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. கொலை வழக்கில் புலன் விசாரணை நடந்து வருகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகிறது. பத்தாண்டுகள் ஆகிறது யாரையும் கண்டுபிடிக்கவில்லை. அப்போது அவங்க ஆட்சி தானே நடந்தது.

    கொலை வழக்கில் கண்டபடி யாரையும் பிடித்து சிறையில் அடைக்க முடியாது. தீவிர புலன் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது எங்களது மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு ஆகட்டும் சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி அன்பு என்னிடம் எல்லா விவரத்தையும் கூறியுள்ளார். ஏறக்குறைய குற்றவாளி அருகே நெருங்கி விட்டார்கள். கொலை வழக்குகளை எடுத்தும் கவுத்தோம் என்று செய்துவிட முடியாது. புலன் விசாரணை அடிப்படையில் உண்மையான குற்றவாளியை வெளியே கொண்டு வர வேண்டும்.

    விசாரணை நடந்து வருகிறது. கண்டிப்பாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள். தி.மு.க.வுடன் இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது நாங்கள் யாரிடமும் செல்ல வேண்டியதில்லை. நாங்கள் நேர்மையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு பாரபட்சமும் கிடையாது. தி.மு.க. தலைமையில் இந்திய கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. கார்த்திக் சிதம்பரம் ஆகட்டும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகட்டும், நான் ஆகட்டும் கூட்டணி குறித்து நாங்கள் தீர்மானிக்க முடியாது அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×