என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"
- இரு கரங்களில் அங்குசமும் பாசமும் கொண்டுள்ளார்.
- பிரெங்சுக்காரர்களின் ஆதரவுடன் கோவில் அமைக்கப்பட்டது.
கோவில் முன்புறம் கோவில் நுழைவில் மண்டபம் சிறப்புற அமைக்கப்பட்டு அங்கே கோவில் யானை கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் மேல் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு அதன் இருபுறமும் காளை சிலைகள் மற்றும் பூதகணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ்புறம் மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
முந்நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் அமைக்க, பிரெஞ்சு ஆதிக்கத்தால், பாண்டிச்சேரி மக்கள் மிகுந்த தொல்லைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இறுதியில் பிரெங்சுக்காரர்களின் ஆதரவுடன் இக்கோவில் அமைக்கப்பட்டது.
ராஜகோபுர நுழைவாயிலுக்கு நேரரே தங்கமுலாம் பூசிய கொடி மரமும் மணக்குள விநயாகர் கருவறையும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தில் மூன்றடக்கில் சிலைகள் அமைந்துள்ளன. மல்புறத்தில் இருந்து முதல் வரிசையில் இடப்புறம் முருகப்பெருமான் தன் வாகனமாகிய மயிலுடன் நின்கிறார். வலதுபுறம் விநாயகர் நின்ற கோலத்தில் உள்ளார்.
முருகன் அருகிலும் ஒரு மூசிகம். விநாயகர் அருகிலும் ஒரு மூசிகம் மூன்றாவது அடுக்கில் இருபுறமும் காளையும் பூதகணங்களும் உள்ளன. நடுப்பகுதியில், நடுநாயகமாக, வட்டவடிவ பின்னணி அமைப்பில், நர்த்தன விநாயகர் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளார்.
ராஜகோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய வாயிலின் மேல்புறம், அமர்ந்த கோலத்தில் விநாயகரும் பூதகணங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
உள்ளே நுழைந்து வரிசையில் சென்று மூலவர் மணக்குள விநாயகரை தரிசிக்க வேண்டும். மூலவரை தரிசிக்க நுழையவும் வெளியில் வரவும் தனித்தனி வழிகள் உள்ளன.
மூலவர் இருக்கும் கருவறை சுமார் இருபது இருபந்தைந்து சதுர அடியில் அமைந்திருக்கிறது. விமானம் தங்கத்தால் ஆனது. மணக்குள விநாயகர் அமர்ந்த நிலையில் மேல்புறமுள்ள இரு கரங்களில் அங்குசமும் பாசமும் கொண்டுள்ளார்.
கீழே உள்ள இரு கரங்களில், வலது கரம் அபயமுத்திரையுடனும், இடது கையில் விரதன முத்திரையுடனும் விளங்குகிறார். கருவறையில் மற்றுமொரு சிறிய கணபதியையும் நாகர்களின் திருவுருவங்களையும் காணலாம்.
மூலவர் மணக்குள விநாயகருக்கு தங்க கவசமும், வெள்ளி கவசமும் சாத்தி முக்கிய விழா நாட்களில் வழிபாடு செய்யப்படுகிறது.
- பிரெஞ்சு கவர்னர் துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார்.
- 1400-களில் நெசவாளர்கள் கருவறை மட்டும் கட்டி இருந்தனர்.
புதுச்சேரியை ஆண்டு வந்த பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களை சமமாக நடத்தவில்லை. அடிமைகள் போலவே நடத்தினார்கள். அப்படிப்பட்டவர்கள் `சுவாமி வீதி உலா' என்ற பெயரில் மணக்குள விநாயகர் உற்சவர் சிலையை தெருத் தெருவாக எடுத்துச் சென்றதை பிரெஞ்சுக்காரர்கள் தொடர்ந்து எரிச்சலாகவே பார்த்து வந்தனர்.
எனவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஈஸ்டர் தின நாட்களிலும் விநாயகர் உற்சவர் வீதி உலா நடத்தக் கூடாது என்று சேசு அடியார்கள் கூறினார்கள். இதை ஏற்று 1701ல் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் புதுச்சேரி கவர்னர் ஒரு உத்தரவை வெளியிட்டார்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் மணக்குள விநாயகர் கோவிலை இடிக்க முயன்றனர். விநாயகர் சிலையை உடைக்கவும் சதி திட்டம் தீட்டப்பட்டது.
இதை அறிந்ததும் புதுச்சேரியில் உள்ள சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவில் முன்பு திரண்டனர். பிறகு அவர்கள் நாங்கள் எங்கள் விநாயகருடன் இந்த ஊரை விட்டே வெளியேறி சென்னைக்கு சென்று விடுவோம் என்று அறிவித்தனர்.
இதனால் தொழில்கள் முடங்கி, ஆட்சிக்கே ஆபத்து வந்து விடும் என்று பயந்த புதுச்சேரி கவர்னர் பிரான்ஸ்வா மர்த்தேன், யாரும் ஊரை விட்டு வெளியேற வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி தடுத்து நிறுத்தினார். பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்திய கவர்னர், விநாயகர் வீதி உலா செல்ல தடை இல்லை என்று அறிவித்தார்.
ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணக்குள விநாயகருக்கு திருவிழா நடத்தவும், வீதி உலா நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் 1706-ம் ஆண்டு மணக்குள விநாயகர் கோவிலில் முன்பு போல விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
மறுநாளே நெசவாளர்கள், விநாயகர் உற்சவரை மணல் குளத்துக்கு எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டி, திருமஞ்சனம் செய்தனர். என்றாலும் மணக்குள விநாயகர் கோவிலை சிதைப்பதில் சில பிரெஞ்சுக்காரர்கள் தீவிரம் காட்டினார்கள். ஆனால் மணக்குள விநாயகரை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இதையடுத்து வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் ஆராதனையை நடத்தக் கூடாது என்றனர். மேளதாள வாத்தியங்கள் முழங்கக் கூடாது. கொம்பு ஊதக் கூடாது. தேவதாசிகள் நடனம் இடம் பெறக்கூடாது என்று அடுக்கடுக்காக தடை உத்தரவிட்டனர்.
பக்தர்கள் நடத்திய பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கான தடை நீங்கியது. பிறகு நாட்கள் செல்ல, செல்ல பிரெஞ்சுக்காரர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டது. மணக்குள விநாயகரை அப்புறப்படுத்தும் முயற்சியை முழுமையாக கை விட்டனர். மணக்குள விநாயகர் கோவில் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கினார்கள்.
பிறகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் அவர்களது மனதிலும் மணக்குள விநாயகர் இடம் பிடித்தார். அர்த்த மண்டபத்துக்கு அடுத்தப்படியாக கோவில் முன்பு மகாமண்டபம் கட்டிக் கொள்ள அனுமதி கொடுத்தனர்.
மணக்குள விநாயகரின் மகிமைகளை ஒவ்வொன்றாக அறிந்து, கோவிலுக்கு வரத் தொடங்கினார்கள். விநாயகர் சிலையை உடைக்க உத்தரவிட்டவர்களே, அந்த விநாயகரை கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர்.
கோவிலை இடிக்க நினைத்தவர்களே, கோவில் திருப்பணிகளை முன்நின்று செய்தனர். பிரெஞ்சு கவர்னராக இருந்த துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார். துப்லெக்ஸ் கவர்னராக இருந்த ஆட்சிக்காலத்தில் மணக்குள விநாயகர் கோவில் மீது யாரும் எந்த ஒரு சிறு தாக்குதலும் நடத்தவில்லை. மணக்குள விநாயகரை வணங்கிய பிறகே எதையும் செய்யத் தொடங்கினார். மணக்குள விநாயகரின் மகிமைக்கு இது ஒரு சான்றாகும்.
ஆலயம் அன்றும் - இன்றும்
மணக்குள விநாயகர் எந்த காலக்கட்டத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார் என்ற குறிப்பு எங்குமே இல்லை. அது போல அரச மரத்தடியில் இருந்த விநாயகருக்கு 1400-களில் நெசவாளர்கள் சிறு கருவறை மட்டும் கட்டியது மட்டுமே தெரிகிறது.
15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகளில் மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரி கடலோரத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
16-ம் நூற்றாண்டில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் பலர் திருப்பணி செய்துள்ளனர். தொள்ளைக்காது சித்தர் ஜீவ சமாதி ஆன பிறகு மணக்குள விநாயகர் வழிபாடுகள் ஆகம விதிமுறைகளுக்கு மாறின.
1900-களின் தொடக்கத்தில் புதிய மூலவர் சிலை வைக்கப்பட்டது. மூல விநாயகர் இடது பக்கம் வைக்கப்பட்டார். 1930-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த காலக் கட்டத்தில்தான் பாரதியார் மணக்குள விநாயகரை 8 ஆண்டுகள் வழிபட்டார்.
பிரெஞ்சு ஆட்சியாளர்களிடம் இருந்து 1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்ற பிறகு மணக்குள விநாயகர் ஆலத் திருப்பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டது. மறு ஆண்டே 1955-ல் மரவாடி நடேச குப்புசாமி பிள்ளை அவர்களால் தேக்கு கொடி மரம் நிறுவப்பட்டது.
1957-ம் ஆண்டு முதல் ஆவணி மாதம் ஆண்டு பெரு விழாவான பிரம்மோற்சவம் நடத்துவது தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆவணி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவம் 58-வது பிரம்மோற்சவமாகும்.
1956-ம் ஆண்டு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு 1966-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
1986-ம் ஆண்டு புதிய உற்சவமூர்த்தி உருவாக்கப்பட்டது. 1980-ம் ஆண்டு வெள்ளித்தேர் ஓடியது. 1986-ம் ஆண்டு தங்கத்தேர் விடப்பட்டது.
1994-ம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டது. 1999-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
2004-ம் ஆண்டு ரூ.70 லட்சம் செலவில் புதிய தங்கத் தேர் அர்ப்பணிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் செய்து சார்த்தப்பட்டது.
2009-ம் ஆண்டு இத்தலத்துக்கு என இணையத்தளம் உருவாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஆலயம் முழுவதும் குளிரூட்டப்பட்டது.
2011-ம் ஆண்டு உற்சவருக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக திருப்பணி செய்து கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆலயம் தரை முழுவதும் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது. கருவறை தவிர ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி என்றதும் அடுத்த வினாடி நம் மனக்கண்ணில் தோன்றுபவர் மணக்குள விநாயகர்.
- 600 ஆண்டு கால குறிப்புகளை மணக்குள விநாயகர் பற்றிய வரலாறு கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் விநாயகர் கோவில் என்றதும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் எப்படி நினைவுக்கு வருகிறார்களே.... அது போல புதுச்சேரி என்றதும் அடுத்த வினாடி நம் மனக்கண்ணில் தோன்றுபவர் மணக்குள விநாயகர். புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் நகரின் நாயகனாக இவர் அருள்பாலித்து வருகிறார்.
இவர் இத்தலத்துக்கு எப்படி வந்தார்? இவரை பிரதிஷ்டை செய்தது யார்? என்பன போன்ற எந்த விவரங்களும் யாருக்கும் தெரியாது. பழமையான விநாயகர் தலங்களை ஆய்வு செய்தால், அந்த தலங்கள் புராண நிகழ்வுகளுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டிருப்பதை அறியலாம். சில தலங்களில் விநாயகரின் பெயரே அவர் அந்த தலத்தில் எழுந்தருளியதற்கான காரணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
நாடெங்கும் இப்படி விநாயகர் அவதார சிறப்பையும், அவரது வீர, தீர செயல்களை உணர்த்தும் பழமை சிறப்பையும் கொண்டுள்ள தலங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் இத்தகைய புராண பின்புலம் எதுவும் புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு இல்லை.
என்றாலும் மணக்குள விநாயகர் இன்று உலகம் முழுவதும் அறியப்படும் விநாயகராக இருப்பதற்கு அவரது அருளாற்றலே காரணமாகும்.
கடந்த 600 ஆண்டுகளில் மணக்குள விநாயகர் எப்படி இருந்தார் என்பதற்கு ஆதாரமான குறிப்புகள் ஏராளம் உள்ளன. அதற்கு முந்தைய கால கட்ட வரலாற்றில் இந்த விநாயகரை பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை.
எனவே இந்த விநாயகர் இத்தலத்துக்கு வந்த மூலக்கதை யாருக்குமே தெரியாது. ஆதிகாலத்தில் இந்த விநாயகரை மணல் குளம் கரையில் உள்ள அரச மரத்தடியில் மகரிஷி ஒருவர் பிரதிஷ்டை செய்திருக்கலாம் என்றும், அப்போது இந்த விநாயகருக்கு வேறு பெயர் இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
புதுச்சேரியில் வசித்து வந்த தொள்ளைக்காது சித்தர்தான்,இந்த விநாயகரை ஸ்தாபித்து இருப்பார் என்று சிலர் எழுதியுள்ளனர். எதையும் உறுதிபடுத்த இயலவில்லை. எனவே கடந்த 600 ஆண்டு கால குறிப்புகளை கொண்டே மணக்குள விநாயகர் பற்றிய வரலாறு பலராலும் எழுதப்பட்டுள்ளது. அந்த வரலாறுகளை சற்று ஆய்வு செய்தால் மணக்குள விநாயகரின் மகிமை நம்மை சிலிர்க்க வைக்கிறது.
புதுச்சேரியில் மிகச் சரியாக 349 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1666-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டவர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. அதற்கும் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1400-களில் புதுச்சேரியில் இந்த விநாயகர் பெரும்பாலான மக்களால் விரும்பி வழிப்படும் ஒருவராக இருந்தார்.
அந்த கால கட்டத்தில் தற்போது ஆலயம் உள்ள இடம் மிகப்பெரிய குளமாக இருந்தது. அந்த குளம் நல்ல மணல் உள்ள குளம். எனவே புதுச்சேரி மக்கள் அந்த குளத்தை மணல் குளம் என்று அழைத்து வந்தனர்.
அந்த குளக்கரையில்தான் நம்ம விநாயகர் வீற்றிருந்தார். அக்காலத்தில் புதுச்சேரி பணக்காரர்கள் மிகுந்த அழகான ஊராக இருந்தது.
மணல் குளம் பகுதியில் கைக்கோளர் என்ற செங்குந்த முதலியார்களும், சேட செட்டியார் என்ற தேவாங்கச் செட்டியார்களும் அதிக அளவில் வசித்து வந்தனர். நெசவுத் தொழிலே அவர்களது முக்கிய தொழிலாக இருந்தது. இதனால் விநாயகர் இருந்த தெரு நெசவாளர் தெரு என்றழைக்கப்பட்டது.
அவர்கள் தினமும் காலையில் மணல் குளத்தில் நீராடி, அரச மரத்தடியில் இருந்த விநாயகரை வணங்கி விட்டு, அதன் பிறகு நெசவுத் தொழிலை தொடங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். விநாயகர் சிலை இருந்த அரச மரத்தடியில் ஒரு நாகச் சிலையும் இருந்தது. அதையும் மணல்குளம் பகுதி மக்கள் வழிபட தவறுவது இல்லை.
விநாயகருக்கு மணல்குளம் தண்ணீரை எடுத்து வந்துதான் அபிஷேகம் செய்தனர். இதனால் அந்த விநாயகருக்கு இருந்த மூலப்பெயர் மறைந்து `மணல்குளத்து விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது.
பிறகு அது மணற்குளத்து விநாயகர் என்று மாறியது. கால ஓட்டத்தில் அந்த பெயரும் மருவி `மணக்குள விநாயகர்' என்ற பெயர் உருவெடுத்து அதுவே நிலைத்து விட்டது.
நாளடைவில் மணல் குளம் தூர்ந்து போனது. மெல்ல, மெல்ல குளம் மறைந்து நந்தவனமாக மாறியது. இதனால் நெசவாளர்கள் மணக்குள விநாயகருக்கு கருவறை, அர்த்த மண்டபம் கட்டி சிறிய கோவிலாக மாற்றி வழிபட்டு வந்தனர்.
பிரெஞ்சுக்காரர்கள் வருகைக்குப் பிறகு அந்த நந்தவனப் பகுதி கட்டிடங்களாக மாறியது.
அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்ப புதுச்சேரி மாறினாலும், நம்ம மணக்குள விநாயகர் மட்டும் மாறவே இல்லை. எத்தனையோ சோதனைகள் செய்யப்பட்டாலும் தான் அமர்ந்த இடத்தில் பிடிவாதமாக அவர் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்.
கடலில் வீசப்பட்டாலும் கரை திரும்பிய அற்புதம்
சென்னையில் கால் ஊன்றிய ஆங்கிலேயர்கள் தற்போது கோட்டை (தலைமை செயலகம்) உள்ள பகுதியை வெள்ளையர் பூமி என்றும் வடசென்னையை கருப்பர் பூமி என்றும் பிரித்து ஆட்சி செய்தனர். அது போலவே புதுச்சேரியில் கால் ஊன்றிய பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி நடுவே ஓடிய உப்பனாற்றுக் கால்வாய்க்கு கிழக்கே உள்ள பகுதியை வெள்ளை நகரம் என்றும், உப்பனாற்றுக் கால்வாய்க்கு மேற்கே இருந்த பகுதியை கறுப்பர் நகரம் என்றும் பிரித்து இருந்தனர்.
கிழக்குப் பகுதியில் கடற்கரையோரம் இருந்த தமிழர்கள், தெலுங்கர்கள், இஸ்லாமியர்களை அடித்து விரட்டி விட்டு தங்களுக்கென பெரிய, பெரிய பங்களாக்களை கட்டிக் கொண்டனர். பிறகு 1988-ல் அவர்கள் கோட்டை ஒன்றை உருவாக்கினார்கள்.
அந்த கோட்டைக்குட்பட்ட ஒரு பகுதியாக மணக்குள விநாயகர் ஆலயமும் இருந்தது. தினமும் காலையில் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக வந்து விநாயகரை வணங்கிச் சென்றது பிரெஞ்சுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
குறிப்பாக திருவிழா நாட்களில் மேள, தாளம் முழங்க விநாயகர் வழிபாடு நடந்ததை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தங்களிடம் அடிமையாக இருப்பவர்கள், தங்கள் பகுதிக்குள் வந்து கொண்டாட்டம் செய்வதா என்று ஆவேசமானார்கள்.
எல்லாவற்றுக்கும் இந்த விநாயகர்தானே காரணம்..... அவரை இல்லாமல் செய்து விட்டால், தமிழர்கள் யாரும் கொட்டு அடித்தப்படி இப்பகுதிக்கு வர மாட்டார்கள் அல்லவா என்று யோசித்தனர். அப்போது கவர்னரின் உதவியாளராக ஓர்லையான் என்பவர் இருந்தார்.
இவர் தமிழர்களுக்கு எதிராகவே எல்லாவற்றையும் செய்து வந்தார். விநாயகர் இருந்த நெசவாளர் தெரு பெயரை மாற்றி தன் பெயரை சூட்டி ஓர்லையான் தெரு என்று வைத்தவர். அப்படிப்பட்ட இவர் ஆட்களை வைத்து விநாயகர் சிலையை பெயர்த்து எறிந்து கடலில் தூக்கி வீசினார்.
மறுநாள் காலை ஓர்லையானுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடலில் வீசப்பட்ட மணக்குள விநாயகர் மீண்டும் கரை திரும்பி, அதே இடத்தில் `ஜம்' மென்று உட்கார்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
பிரெஞ்சுக்காரர்கள் விடவில்லை. மீண்டும் ஒரு தடவை மணக்குள விநாயகரை பெயர்த்து எடுத்துச் சென்று கடலில் வீசி எறிந்தனர். இந்த முறையும் நம்ம விநாயகர் கரை திரும்பி விட்டார்.
உடனே பிரெஞ்சுக்காரர்கள் இதில் ஏதோ சதி நடப்பதாக நினைத்தனர். மூன்றாவது தடவை பிரெஞ்சு உயர் அதிகாரி ஒருவர் முன்னிலையில் விநாயகர் சிலை பெயர்த்து எடுக்கப்பட்டு, யாருக்கும் தெரியாமல் மிக, மிக ரகசியமாக பிரெஞ்சுக்காரர்கள் மூலம், சிலை நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நடுக்கடலில் மணக்குள விநாயகரை வீசி விட்டு அப்பாடா..... என்று கரை திரும்பினார்கள். இனி பூஜை, கொண்டாட்டம் வழிபாடு எதுவும் இருக்காது என்று மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
விடிந்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். தமிழர்கள் ஆவேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று எண்ணி காவல் படைகளை தயாராக வைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
வழக்கம் போல மணக்குள விநாயகர் தன் இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார். அவருக்கு தினமும் காலையில் நடக்கும் அர்ச்சனை, ஆராதனை விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. முன்பை விட அதிகப்படியான பக்தர்கள் வந்து, விநாயகரை வழிபட்டு சென்று கொணடிருந்தனர்.
பிரெஞ்சுக்காரர்களுக்கு தாங்க முடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. எப்படி மணக்குள விநாயகர் கரை திரும்பினார் என்று யோசித்து, யோசித்து தவித்துப் போனார்கள்.
உண்மையில் மணக்குள விநாயகர் எப்படி கரை திரும்பினார்?
கடலில் வீசப்பட்ட பிறகு விநாயகர் சிலை மிதந்தபடி வந்து கரை ஒதுங்கியதாகவும், அதை பக்தர்கள் எடுத்து வந்து அதே இடத்தில் வைத்து வழிபட்டதாகவும் சொல்கிறார்கள்.
மற்றொரு சாரார், மணக்குள விநாயகர் கடலில் வீசப்பட்டதும் தன் ஆத்மார்த்த பக்தர் ஒருவர் கனவில் தோன்றி கடலோரத்தில் குறிப்பிட்ட இடத்தை கூறி, அங்கு தான் இருப்பதாகவும், தன்னை தனது மணல்குளம் கோவிலுக்கு எடுத்துச் செல்லும்படி கூறியதாகவும் அதன்படி அந்த பக்தர் மணக்குள விநாயகரை மீட்டு பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள்.
எப்படியோ.... மணக்குள விநாயகர் தான் ஒரு சக்தி வாய்ந்த கடவுள் என்பதை பிரெஞ்சுக்காரர்களுக்கு புத்தியில் நன்கு உறைக்கும்படி கரை மீண்டு வந்து உணர்த்தி விட்டார். அதன்பிறகு மணக்குள விநாயகர் மீது பிரெஞ்சுக்காரர்களுக்கு பயம் வந்து விட்டது. பணிவு வந்து விட்டது.
மணக்குள விநாயகர் அதே இடத்தில் இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டார்கள். என்றாலும் இடையிடையே மணக்குள விநாயகருக்கு தொந்தரவு கொடுக்கத்தான் செய்தனர்.
- ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
- வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடடும் ஈர மதிச்செஞ் சடக்களிநல் யானை இணைத்தான ஏத்துவாம்
அகரமென அறிவாகி உலக மெங்கும் அமர்ந்தகர உகரமக ரங்கள் தம்மால்
பகரு மொரு முதலாகி வேறு மாகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கினையும் இடர்தீர்ந் தெய்தப் போற்று நரக் கறக்கருணை புரிந்தல்லார்க்கு நிகரில் மறக் கருணை புரிந்து ஆண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்.
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
தெண்டுள தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திருவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவிற் பழுதகற்றித்
தண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
மார னெடுத்து வளைக்கு மொரு கரும்கை யடித்து மலர்சிதறி
நாரி யடுத்த அளிமாலை குலையத் துரந்து நயந்தோடி
வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடடும்
ஈர மதிச்செஞ் சடக்களிநல் யானை இணைத்தான ஏத்துவாம்.
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும் தறிநிறுவி உறுதி யாகத்
தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைத்துவரு வினைகள் தீர்ப்பாம்.
வஞ்சகக்தி லொன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கா உன்றே
அஞ்சரண மூன்றானை மறை சொலு நால் வாயானை அத்தனாகித்
துஞ்சவுணர்க் கஞ்சானைச் பென்னியணி ஆறானைத் துகளெ ழானைச்
செஞ்சொன்மறைக் கொட்டானைப் பரங்கிரிவாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வாம்.
வணக்குதலை மனத்தியற்றி வாழ்த்துமடி யவர்விரும்பும் வரங்கள் ஈத்து
பிணக்குடனே வேற்றுவர்கள் அகற்றிடவும் அகலாது பெட்பில் நின்று
நினைக்குமிடத் துன்புயிர் கட்(கு) ஒரித்தருளிப் புதுவையிடை நிலைபெற்றோங்கும்
மணக்குள நாயகன் மலரடியை எப்போதும் மனத்துள் வைப்பாம்.
மன்னியசீர்ப் புதுவை நகர் மணக்குள விநாயகன்றன் மாண்பு மேவும்
பொன்னடியை எந்நாளும் சிந்தித்து வணங்கிமிகப் புகழ்ந்து வாழ்வோர்
துன்னிரிய பெருஞ்செல்வம் இவ்வுலகில் எஞ்ஞான்றும் தோயப் பெற்றங்
குன்னிரிய பேரின்பம் ஒவாதே யெய்தியினி துவந்த வாழ்வார்.
- உலகின் பெரும்பாலான நாடுகளில் விநாயகர் வழிபாடு இன்றும் உள்ளது.
- விநாயகரின் உருவ அமைப்பு மற்ற கடவுள்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறது.
இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் உள்ள போதிலும் எல்லாரது மனதிலும் `பளிச்' என்று நிற்கும் சிறப்புக்குரியவர், விநாயகர். மற்ற இந்து கடவுள்களுக்கும் இவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
பொதுவாக கடவுள்களிடம் மக்கள் மிகுந்த பயபக்தியுடன் இருப்பார்கள். ஆனால் விநாயகரை மட்டும் பக்தர்கள் மிகுந்த செல்லமாகவும், பாசமாகவும் அணுகுவார்கள்.
விநாயகரின் உருவ அமைப்பும் மற்ற கடவுள்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறது. சூறைத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம் போடுவது, தலையில் குட்டிக் கொள்வது என்று விநாயகருக்கான வழிபாடுகளும் முற்றிலும் மாறுபட்டவை.
உலகின் பெரும்பாலான நாடுகளில் விநாயகர் வழிபாடு இன்றும் உள்ளது. எந்த மதத்தின் கடவுளும், விநாயகர் அளவுக்கு உலகம் முழுவதும் பரவி வியாபித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியாளர்களுக்கே இது விடை கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் விநாயகர் வழிபாடு அதிக அளவில் உள்ளது. அதுவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் விநாயகர் நீக்கமற முழுமையாக நிறைந்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் விநாயகர் சிலை இல்லாத ஊரே இல்லை என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் விநாயருக்குத்தான் அதிக தனி ஆலயங்கள் இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு சொல்கிறது.
தமிழக, புதுச்சேரி மக்கள் விநாயகருடன் இரண்டற கலந்து விட்டதையே இது காட்டுகிறது. தமிழர்கள் அளவுக்கு விநாயகருக்கு விதம், விதமாக பெயர் சூட்டியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
சந்தி பிள்ளையார், வேடிக்கை விநாயகர், தையல் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், கள்ள விநாயகர், மாடி விநாயகர், மருந்து விநாயகர்.... என்று என்ன பெயர் மனதில் தோன்றுகிறதோ, அதை விநாயகருக்கு சூட்டி விடுவார்கள். அது போல அந்தந்த சீசனுக்கு ஏற்பவும் விநாயகருக்கு பெயர் சூட்டப்படுவதுண்டு.
அது போல இந்த இடம் என்று இல்லாமல், எந்த இடத்தில் வேண்டுமானாலும் விநாயகரை பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். அரச மரம், ஆற்றங்கரை, முச்சந்திகளில் நிச்சயம் விநாயகர் இருப்பார்.
விநாயகரின் கருணை உள்ளம் எல்லாரையும் கவர்ந்து இழுத்து விடும். பக்தர்களின் குறைகளை தவறாமல் தீர்த்து வைக்கிறார்.
அவரை நினைக்காமல் எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க முடியாது. அவரை பூஜிக்காமல் தொடங்கப்படும் எந்த செயலுக்கும் இடையூறு வந்து விடும். அவரது வடிவங்கள் அளவிட முடியாதது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள்.
சானியாக இருந்தாலும், சந்தனமாக இருந்தாலும் ஒரு பிடி, பிடித்து வைத்து விட்டால் அவர் பிள்ளையாராகி விடுவார். அந்த அளவுக்கு `எடுப்பார் கைப்பிள்ளை' போன்று விநாயகர் உள்ளார். விநாயகரை வழிபாடு செய்வது என்பது மிக, மிக எளிதானது.
இதனால்தான் நாம் விநாயகரை `முதன்மை தெய்வம்' என்றும், `முழு முதற் கடவுள்' என்றும் சொல்கிறோம்.
நாம் மேற்கொள்ளும் ஒரு செயல் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் விநாயகர் அருள் வேண்டும். அந்த அருளை நாம் ஒவ்வொருவரும் எளிதாகப் பெற முடியும்.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் விநாயகர் வழிபாடு 6-ம் நூற்றாண்டுக்குப் பிறகே உருவானதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முந்தைய நாட்டுப்புறப்பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் உள்ளதால், விநாயகர் வழிபாடு காலம், காலமாக இருந்து வருவதை உணரலாம்.
பல ஊர்களில் விநாயகர் எப்படி அந்த தலத்தில் தோன்றினார் என்பதற்கான வரலாறு எதுவும் இருப்பதில்லை. மற்ற கடவுள் அவதாரம் போல விநாயகரை அத்தகைய எந்த தல வரலாறுகளுக்குள்ளும் அடக்க முடிவதில்லை.
அந்த அளவுக்கு ஆதியும், அந்தமும் இல்லாமல் விநாயகர் உள்ளார். அத்தகைய சிறப்பான தலங்களில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலும் ஒன்றாகும்.
மணக்குள விநாயகருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். இவர் அருள்பெற தினம், தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதுச்சேரி வந்து செல்கிறார்கள்.
மணக்குள விநாயகரை நேரில் தரிசனம் செய்து விட்டால் மனதில் உள்ள பாரம் எல்லாம் குறைந்து விட்டது போல உணர்கிறார்கள்.
மணக்குள நாயகனின் மலரடியை எப்போதும் மனதில் பதித்துக் கொண்டால், நம் வாழ்வு மேன்மை பெறும் என்பது நிதர்சனமான உண்மை.
- அர்த்த ஜாம தரிசனம் மனிதன் வாழ்வில் தெய்வீக பலன்களை தருவதாகும்.
- இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்
ஒரு காலம் என்பது, நடராஜருக்காக ஸ்படிகலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து, பிறகு நடராஜர், சிவகாமசுந்தரிக்கு, தீபாராதனை செய்வது வரையிலும் ஆகும். இந்த முழு அமைப்பும் சேர்ந்துதான் ஒரு கால பூஜை எனப்படும். இவை எல்லாம் ஒரு கால பூஜையில் அடங்கும்.
ஆறு காலங்கள்
1. காலை சந்தி (முதல் கால பூஜை, காலை 7 மணி)
2. இரண்டாங்காலம் (காலை 10 மணி)
3. உச்சி காலம் (மூன்றாம் காலை பகல் 12 மணி)
4. சாயங்காலம் (சாயரட்சை மாலை 6 மணி)
5. 8 மணி காலம் (2-ம் காலம் இரவு 8மணி)
6. அர்த்த ஜாமம் (6-ம் காலம் (இரவு 10 மணி)
பரமானந்த கூபம்
நடராஜர் அருள்பாலிக்கும் சிற்றம்பலத்துக்கும் கிழக்கு பாகத்தில் உள்ள பரமானந்த கூபம் என்னும் தீர்த்தமே (கிணறு) எப்போதும் அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஐப்பசி மாத வளர்பிறை நவமி திதியில் கங்கையே இத்தீர்த்தத்திற்க வருகின்றாள். இத்திருக்கோவிலினுள் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தம் பயன்படுத்தப்படுகிறது.
முதற்காலம் (கால சந்தி)
காலை 7 மணிக்கு பூஜாக்காரரால் கோபூஜை, கும்பம் வைத்து ஹோமம் செய்து, பஞ்சகவ்யம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து 9 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
இரண்டாங்காலம் (ரத்தின சபாபதி தரிசனம்)
காலை 10 மணிக்கு ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் கனக சபையில் செய்து, இச்சமயத்தில் ரத்தின சபாபதிக்கும் பால், தேன், சந்தன அபிஷேகம் செய்து, கற்பூர தீபாராதனைநடைபெறும். மாணிக்க நடராஜர் பின்புறம் தீபாராதனை காண்பிக்கும்போது ஜோதியாயும் (தங்கம் போல் ஜொலிக்கும்) தெரியும். இது மிக முக்கியமான தரிசனமாகும்.
வாழ்வில் நல்ல பல மாற்றங்களை தந்தருளும். இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்தான் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே. வேறு எந்த கால புஜையிலும் இத்தரிசனம் காண முடியாது. இத்தரிசனம் காலை 10 மணி முதல் 10 மணிக்குள் காணப்பட வேண்டும்.
உச்சிக்காலம் (மூன்றாம் காலம்)
ரத்தினசபாபதி தரிசன தீபாராதனை முடிந்ததும், மீண்டும் அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 1 மணிக்குத் தீபாராதனை உடனே நடைசாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
நான்காம் காலம் (சாயரட்சை)
மாலை நடை திறந்தவுடன் அபிஷேகம் செய்து 6 மணிக்கு சோடசோபசார தீபாராதனை நடக்கும்.
ஐந்தாம் காலம் (ரகசிய பூஜை காலம்)
இரவு 7 மணிக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெறும். இந்த நேரத்தில்தான் அருவமான ரகசியத்திற்கு பூஜை நடைபெறும். கதவுகள் சாத்தப்பட்ட பூஜை செய்பவர். செய்விக்கின்றவர் ஆகிய இருவர் மட்டும் இருந்து பூஜை செய்து நைவேத்தியம் செய்து 8 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
அர்த்த ஜாமம்
இரவு 9 மணிக்கு அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 10 மணிக்கு தீபாராதனை செய்து, நடராஜரின் பாதுகையை வெள்ளி, தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து பள்ளியறையில் கொண்டு போய் வைத்து அங்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெற்று, பின்னர் பிரம சண்டிகேஸ்வரர்க்கும், பைவரருக்கும், அர்த்த சாம அழகருக்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெறும். இவையனைத்தும் அர்த்த ஜாமபூஜைகள் ஆகும்.
பிரபஞ்சங்களில் உள்ள சிவகலைகள் அனைத்தும் இங்கு இருந்துதான் காலை 6 மணிக்கு புறப்பட்டு அங்கு நிகழ்த்தப்படுகின்ற பூஜைகளை ஏற்று இரவு அர்த்த ஜாம பூஜையில் மீண்டும் தில்லை திருக்கோவிலினுள் ஒடுங்குகிறது. அதாவது எல்லா கோவில் தெய்வங்களும் தில்லையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அர்த்த ஜாம பூஜையின்போது தில்லையிலேயே மீண்டும் ஒன்று சேர்ந்து ஐக்கியமாகிறது.
எனவே அர்த்த ஜாம பூஜை தரிசனம் என்பது அன்று முழுநாள் சிவபூஜை செய்த சிவபுண்ணிய பலனையும், எல்லா கோவில்களின் தெய்வங்களின் அருளாசியையும் பெற்றுத் தருகிறது.
அர்த்த ஜாம தரிசனம் மனிதனின் வாழ்வில் உன்னத தெய்வீக பலன்களை தருவதில் நிகரற்ற ஒன்றாகும். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் துதித்து வாழ்நாளில் ஒரே ஒருமுறை தில்லை திருக்கோவிலின் அர்த்தஜாம பூஜையை கண்டு தரிசிக்க வேண்டும். அர்த்தஜாம தரிசன பலன்கள் எண்ணிலடங்காதவை. வாழ்வில் எக்குறையும் நேராமல், இல்லாமல் வாழ விரும்புவோர் கண்டிப்பாக அர்த்தஜாம பூஜையை தரிசிக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம்.
அர்த்தஜாம பூஜையில் வேண்டும் வரங்களை அள்ளித் தருகிறார் ஆடல்வல்லான். பக்தர்கள் வேண்டும் வரங்களை தருமாறு சிவகாமசுந்தரியே சாமி நடராஜரிடம் வேண்டிக் கொள்கிறாள். இங்கு பிரார்த்தனை செய்யுமிடம் பள்ளியறையில் தீபாராதனை நடக்கும் நேரம் ஆகும். அப்போது எல்லா கோவில் தெய்வங்களும் ஒருவித குளிர்ந்த காற்று ரூபத்தில் பள்ளியறைக்குள் செல்வதை பக்தர்கள் உணர முடியும் (பிராணாயாமம், வாசியோகம் செய்வோர் நன்கு உணர முடியும்)
உதாரணமாக திருமணம் நடக்க வேண்டி திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இதையே தில்லையில் அர்த்தஜாம பூஜையில் பள்ளியறை தீபாராதனை வேளையில் அதே திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரனை தரிசித்த பலனால் திருமண பாக்கியம் கைகூடும்.
- தேன் - இனிய குரல்வளம் தரும் நெய் - வீடுபேறு அடைய உதவும்
- பன்னீர் - புகழ் சேர்க்கும் சந்தனம் - செல்வம் உண்டாகும்
சந்தனாதித் தைலம் - சுகம் தரும்
நல்எண்ணை - விஷசுரம் நிவர்த்தி
பால் - தீர்க்காயுள் தரும்
தயிர் - நன்மக்கட்பேறு
தேன் - இனிய குரல்வளம் தரும்
நெய் - வீடுபேறு அடைய உதவும்
சர்க்கரை - எதிரிகள் தொல்லை நீங்குதல்
பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்
மாம்பழம் - வெற்றியைத் தரும்
கரும்புசாறு - நல்ல உடல் நலம்
இளநீர் - போகம் அளிக்கும்
எலுமிச்சம் பழம் - சகல பகையை அழிக்கும்
அன்னம் - சகல பாக்கியங்களும் தரும்
பன்னீர் - புகழ் சேர்க்கும்
சந்தனம் - செல்வம் உண்டாகும்
நறுமணப்பொடி - கடன், நோய் தீரம்
ஆண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், பெண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், மஞ்சள்தூளும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
மஞ்சள் தூள் - மங்களம் அளித்திடும்
விபூதி - கர்மவினைகளை நீக்கி மோட்சம் அளிக்கும்
சொர்ணாபிஷேகம் - ஐஸ்வர்யம் வரும்
ஒவ்வொரு அபிஷேகத்தின் இடையிலும் சுத்தநீர் - சாந்தி தரும்.
தில்லை தீர்த்தங்கள் பத்து
1. சிவகங்கை
2. பரமானந்த கூபம் (சித்சபைக்கு கிழக்குப் பக்கத்தில் கிணறு வடிவில் சக்தி வடிவம் பொருந்தியது)
3. வியாக்கிரபாத தீர்த்தம் (இளமையாக்கினர் கோவில்)
4. அனந்த தீர்த்தம் (திருஅனந்தேஸ்சுரத்துக்கு முன்பு உள்ளது)
5. நாகச்சேரி (திருஅனந்தேஸ்சுரத்துக்கு மேற்பாங்கான உள்ள திருக்குளம்)
6. பிரமதீர்த்தம்
7. சிவப்பிரியை
8. புலிமடு
9. குய்ய தீர்த்தம்
10. திருப்பாற்கடல்
பிரபஞ்சத்தின் மையம்
பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோரால் பூஜிக்கப் பெற்ற சுயம்புலிங்கம்தான் ஆதிமூலநாதர். இதுதான் பிரபஞ்சங்களின் மையமாகும்.
ஆதியந்த மற்றது. ஆகாயத்தின் மையம் இதுவேயாகும். ஒரு காலத்தில் பெரும் வனமான தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் ஊடே வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சுயம்புலிங்கம் தில்லை மரங்கள் நிறைந்த வனம்தான் இன்றைய சிதம்பரம்.
எனவே சிதம்பரத்திற்கு தில்லை என்ற பெயரே பிரசித்தி பெற்று விளங்குகிறது.
ஆதிமூலநாதர் சன்னதி இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும் நடராஜர் சன்னதி இரவு 10 மணிக்கே அர்த்தஜாம பூஜை நடைபெறும் முதலாவது அர்த்தஜாம பூஜையும், கடைசியாக அர்த்தஜாம பூஜையும் நடக்கும் இடம் தில்லையில் மட்டுமே.
தில்லையம்பலவாணன் தினசரி பூஜைகள்
தில்லை திருத்தலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜ மூர்த்திக்கு நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை மூன்று, மாலையில் மூன்று பூஜைகள் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியறையில் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து சுவாமியின் பாதுகையை வெள்ளி, தங்க பல்லக்கில் எழுந்தருளச் செய்து கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து, நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்தும் வருகின்றனர். இது `திருவனந்தல்' என்றும், பால் நைவேத்தியம் என்றும் அழைக்கப்படும் இது ஆறு கால பூஜைகளில் சேர்ந்தல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
- மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ் பெற்றது.
- நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.
மணக்குள விநாயகர் ஆலயம் தொடர்பான 25 முக்கிய குறிப்புகள்...
1. புதுச்சேரி நகரின் பழமையான வரலாற்று சம்பவங்களோடு மணக்குள விநாயகர் பின்னி பிணைந்துள்ளார். எனவே புதுச்சேரி வரலாற்றோடு மணக்குள விநாயகருக்கு முக்கிய பங்கு உண்டு.
2. புதுச்சேரி நகரின் நம்பர்-ஒன் ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.
3. 1923-ம் ஆண்டு வாக்கில் புதுவையில் `அச்சுகாபி விருத்தினி' என்ற பத்திரிகையை ஒர்லையான்பேட்டையைச் சேர்ந்த வெங்கடாசல நாயக்கர் நடத்தி வந்தார். அந்த பத்திரிகையில் மணக்குள விநாயகர் பற்றி நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டன.
4. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தையாபிள்ளை 1936-ம் ஆண்டு புதுச்சேரி வந்து மணக்குள விநாயகர் மீது பல பாடல்கள் பாடினார்.
5. புதுச்சேரியைச் சேர்ந்த பெரியசாமி பிள்ளை, மாணிக்கப்பிள்ளை, ரத்தினப் பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க சுவாமிகள், சாமி பொன்னுப்பிள்ளை, பண்டிதர் சுப்புராய பக்தர், சோம சுந்தரம் பிள்ளை, கந்தசாமி உபாத்தியாயர், ராமானுஜ செட்டியார், பங்காரு பக்தர், நா.வேங்கடாசல நாயக்கர், வரதப்பிள்ளை உள்பட ஏராளமானவர்கள் மணக்குள விநாயகர் மீது பதிகங்களும், பாடல்களும் இயற்றியுள்ளனர்.
6. மணக்குள விநாயகரை நெசவாளர்கள் எப்படியெல்லாம் போற்றி பாதுகாத்தனர் என்பதை சிவமதி சேகர் தனது புதுவையும் மணக்குள விநாயகரும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
7. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது.
8. மணக்குள விநாயகர், டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டேனீஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என 5 வெளிநாட்டவர்களின் ஆட்சி முறைகளை கண்டவர் ஆவார்.
9. புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.
10. கோவில் கொடி மரத்துக்கு 1957-ம் ஆண்டு வடநாட்டு தொழில் அதிபர் ஒருவர் தங்க முலாம் பூசிய தகடு போர்த்தினார்.
11. நடேச குப்புசாமிபிள்ளை என்பவர் 1909-ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள் முதல் அபிஷேகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அவர் இந்த அபிஷேகத்தை தொடர்ந்து நடத்தினார். 100 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் அவர் மகன் நடேச.கு.அர்த்தநாதன் பிள்ளை இந்த அபிஷேக ஆராதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
12. மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது செங்குந்த மரபினர், ஆரிய வைசிய மரபினர், வேளாளர்கள், பிராமணர்கள், வன்னியர்கள், கவரா நாயுடுகள், விஸ்வகர்ம மரபினர், யாதவர்கள், சேனைத் தலைவர் மரபினர், சான்றோர் குல மரபினர், ரெட்டியார் மரபினர், நாட்டுக்கோட்டை நகரத்தார், வணிக வைசிய மரபினர் என அனைத்து இனத்தவர்களும் சுவாமி வாகன ஏற்பாடுகளை செய்கிறார்கள்.
13. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.
14. கருவறையில் உள்ள தொள்ளைக்காது சித்தருக்கு அரூப முறையில் பூஜைகள் செய்யப்படுகிறது.
15. மணக்குள விநாயகரின் அருள் பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
16. மணக்குள விநாயகருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பழம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யலாம்.
17. மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ் பெற்றிருந்தாலும் அதன் ராஜகோபுரம் இன்னமும் இரு நிலைகளிலேயே உள்ளது.
18.மணக்குள விநாயகர் மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே தோன்றி விட்ட போதும், எந்த மன்னரும் பெரிய அளவில் திருப்பணி செய்யவில்லை. மக்களால் மட்டுமே இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
19. கடந்த ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தன்று காலையில் சுமார் 50 ஆயிரம் பேர் மணக்குள விநாயகரை வழிபட்டனர். இது அந்த ஆலய வரலாற்றில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.
20. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.
21. மணக்குள விநாயகர் ஆலய கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.
22. கோவில் உள்ளே இருக்கும் சுதை சிற்பங்களில் ஒன்றில் மயிலில் பறக்கும் முருகருடன் விநாயகரும் இருக்கிறார். இது போன்ற சிற்பம் அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் ஆலயத்திலும் உள்ளது.
23. மணக்குள விநாயகர் ஆலயம் கானாபத்திய ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.
24. மணக்குள விநாயகரின் உற்சவ மூர்த்திக்கு தயாரிக்கப்பட்டுள்ள தங்க கவசத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும். 5 கிலோ எடையில் 91.66 தரத்தில் ஹால்மார்க் சான்றிதழுடன் இந்த கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.
25. இத்தலத்தில் பக்தர்களுக்கு தினமும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
26. கடற்கரையை ஒட்டிய பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோவில் விநாயகரை `புவனேச கணபதி' என்றும் சொல்கிறார்கள்.
27. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.
28.விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழவகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணா அபிசேகம், 108 கலசாபிசேகம், சங்காபிசேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.
29.உலகில் உள்ள எல்லா விதமான விநாயகர் ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பான அம்சம்.
30. விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
31. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தில் பிரம்மாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள். புதுவருடம் பிறக்கும் அந்த நாளில் மணக்குள விநாயகரின் திருமுகத்தை தரிசிக்க அவரின் ஆசியோடு அந்த புது வருடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆவலில் இத்திருத்தலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருக்கிறது.
32. பிரம்மோற்சவம் ஆவணி 25 நாட்கள் திருவிழாவாக நடக்கிறது.
33. பவித்திர உற்சவம் 10 நாட்கள் திருவிழா விழாவாக கொண்டாடப்படுகிறது.
34. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிசேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.
35. வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேஷ அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.
36. சென்னையில் இருந்து 160 கி.மீ. விழுப்புரத்தில் இருந்து 40 கி.மீ கடலூரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் புதுச்சேரி உள்ளது.
37. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பாண்டிச்சேரி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வசதி உள்ளது.
38. பாண்டிச்சேரி நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர வசதி உள்ளது.
39. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.
40. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்ததி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.
- `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி
- இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.
விநாயகருக்கான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இது தவிர மாதம் தோறும் தேய்பிறை சதுர்த்தி திதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் வரும் கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை திதி வரையில் 21 நாட்கள் விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.
`ஓம்' என்பதின் அர்த்தம்
`ஓம்'-என்பதற்கு நூறுக்கு அதிகமான அர்த்தங்கள் இருக்கின்றன. `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி பிற மந்திரங்களின் முன்னோடியாக வரும் பீஜமந்திரம் இந்த சொல்லில் இருந்து தான் மற்ற மந்திரங்கள் பிறந்தன. இது படைப்புக்கடவுள் பிரம்மனின் நாத வடிவம். ஓம் என்பது முழுமையை குறிக்கிறது.
இது பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் பொதுவானது.
`ஓம்' என்பது சுற்றிக் கொண்டேயிருக்கும் பூமி கடவுளின் சங்கீத சுருதியுடன் சேர்ந்த ஒலி. இந்த `ஓம்' என்ற சொல் மனதை ஒருமுகப்படுத்தும் வித்தையைச் செய்கிறது. `ஓம்' என்ற நாதத்தில் கணபதி முழுமையாக இருக்கிறார். `ஓம்' என்பது ஆத்மாவின் இருப்பிடமான இதயத்தில் இருந்து 108 நாடிகளை இயக்குகிறது. இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.
விநாயகரை துதிக்க மந்திரம்
ஓம் சுமுகாய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய சசாய நம
ஓம் பால சந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
மேலே உள்ள மந்திரத்தைச் சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு மலர்ந்து மணம் வீசும்.
- ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது.
- வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும்.
பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் இரண்டுபேர், தாம்பெற்ற வைகுண்ட சுகத்தை உலகில் இருக்கும் அனைவரும் பெறவேண்டும் என விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்குவாசல் வழியாக தாங்கள்அர்ச்சாவதாரத்தில் வெளியே வரும்போது தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின் தொடர்ந்து வருபவர் களுக்கும் அவர்கள் எத்தகைய பாவங்களை செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி தந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பெருமாள் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். எனவே தான் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கபட்டு சாமி பவனிவரும் நிகழ்ச்சி உருவானது.
பகல்பத்து - இராபத்து
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் தலங் களில் 21 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் பகல் பத்து என்றும், பிந்தைய 10 நாட்கள் இராபத்து என்றும் அழைக்கப்படுகிறது.
ஏகாதசி அன்று செய்யக்கூடாதது
ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்கு செல்வான்.
ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
கோவிலில் வழிபடுவது எப்படி?
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை. திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும். அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.
வீட்டில் வழிபடுவது எப்படி?
திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் திருமாலின் படத்தின் முன் அமர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும். பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.
அன்று, பசுக்களுக்கு அகத்திக்கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கி செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
- அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
- தர்ம தேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.
`முரன்' என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.
அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான். முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார். அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார்.
அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார். தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.
பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.
பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.
அவரை பின்தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலை கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான். அப்போது, திருமாலின் உடலில் இருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.
முரன் ஆயுதங்களை எடுத்து போருக்கு தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்து சாம்பலாக்கினாள். பிறகு தர்ம தேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.
தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு `ஏகாதசி' என்று பெயரிட்டார். மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு `உற்பத்தி ஏகாதசி' என்று அருளினார்.
இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.
- ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.
- சரணாகதி மனோபாவத்தோடு, ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாக கருதப்படுகிறது.
விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும். ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.
வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.
பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக விளையாட்டு இது!
ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆக இந்த பதினொன்றையும் பகவானோடு ஒன்றச் செய்ய வேண்டும்.
இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பது தான் இந்த ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்!
எனவே சரணாகதி மனோபாவத்தோடு, ஏகாதசி விரதத்தை மேற்கொள்வோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்