என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"
- ஆடித்திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.
- பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.
தமிழ்நாட்டில் எந்த கோவிலிலும் இல்லாத வகையில், பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித் திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.
இந்த 3 மாத காலக்கட்டத்தில் 15 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. இந்த கிழமைகளில் ஒவ்வொரு வகை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.
இது தவிர பெரியபாளையம் கோவிலில் 15 ஞாயிற்றுக்கிழமையும் அம்மனின் ஜோதி தரிசனம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இது பெரியபாளையம் கோவிலில் மட்டுமே நடைபெறும் பிரத்தியேக ஆடி சிறப்பு வழிபாடாகும்.
பாளையத்தம்மனை ஜோதி ஒளியில் வழிபடுவதே இதன் முக்கிய அம்சமாகும். அந்த சமயங்களில் பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சிக் கொடுப்பதாக ஐதீகம்.
ஆடித் திருவிழாவின் சனிக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு இந்த ஜோதி தரிசன நிகழ்ச்சித் தொடங்கும். முதலில் பாளையத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும்.
அதன்பிறகு திரையிடப்பட்டு அம்மனை அலங்கரிப்பார்கள். வித, விதமான பூக்களால் புஷ்ப அலங்காரம் செய்வார்கள்.
இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு நைவேத்தியம் படைக்கப்படும். இவை அனைத்தும் முடிந்ததும் ஜோதி தரிசனம் தொடங்கும்.
அம்மனுக்கு மொத்தம் 16 வகை தீபாரதனைகள் காட்டப்படும். ஒவ்வொரு தீபராதனையின் போதும் பாளையத்தம்மன் ஒவ்வொரு விதமாக ஜொலித்து நமக்குக் காட்சி கொடுப்பாள். அந்த திருக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
16 வகை தீபாரதனை முடிந்ததும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மீண்டும் நைவேத்தியம் படைக்கப்படும்.
அத்துடன் ஜோதி தரிசன நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். இறுதியில் வந்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை இவை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜோதி தரிசனத்தின் சிறப்பு என்னவென்றால் இது பெரியபாளையம் கோவிலில் ஆடி பெருவிழா நடக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். மற்ற மாதங்களில் இத்தகைய தரிசனம் கிடையாது.
எனவே இந்த ஆண்டு ஜோதி தரிசனத்தை தவற விட்டு விட்டால், இனி அடுத்த ஆண்டு வரும் ஆடிப் பெருவிழாவில்தான் பாளையத்தம்மனை ஜோதியாக தரிசனம் செய்ய முடியும்.
சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கியமை அதிகாலை 3 மணி வரை ஜோதி தரிசன பூஜைகள் நடக்கும் என்பதால் வெளியூர்களில் இருந்து பெரியபாளையத்துக்கு வரும் பக்தர்கள் அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொண்டு வருவது நல்லது.
கோவில் நிர்வாகம் சார்பில் இந்த ஜோதி தரிசன வழிபாட்டுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இது தொடர்பான மேலும் தகவல்களை கோவில் அலுவலகத்தை 044-27927177 மற்றும் 9444487487 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
- தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள்.
- சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது.
வட தமிழ் நாட்டின் கடலோரத்தில் வாழும் மீனவ சமுதாய மக்கள் ஆண்டுக்கு ஒரு தடவை ஆடி மாத விழாவின் போது பெரிய பாளையம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் போது எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காகவும், நிறைய மீன் கிடைக்க வேண்டும் என்பதற் காகவும் இந்த சிறப்பு வழிபாட்டை மீனவர்கள் நடத்து கிறார்கள்.
இந்த வழிபாட்டுக்கு காசிமேடு உள்பட கடலோரப்பகுதி மீனவர்கள் குடும்பம், குடும்பமாக பெரியபாளையம் தலத்துக்கு செல்வார்கள் மற்ற பக்தர்கள் போல அவர்கள் ஒரு நேரம் மட்டும் தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து விட மாட்டார்கள்.
4 நாட்கள் பெரியபாளையத்தில் தங்கிருந்து,பவானி அம்மனின் அருள் பார்வை தங்கள் மீது படும் வகையில் வழிபாடுகளை செய்த பிறகே வீடு திரும்பி வருவார்கள்.
வீட்டில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு செல்லும் மீனவர்கள் வெள்ளி, சனி,ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்கள் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் குடில்கள் அமைத்து தங்குவார்கள். அங்கிருந்த படி பொங்கல் வைத்து சாப்பிட்டு பவானியம்மனை வணங்கி செல்வார்கள்.
மீனவ குடும்பத்து பெண்கள் தங்கள் தாலி சரடை கழற்றி உண்டியலில் போட்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். 4 நாள் மனம் குளிர வழிபட்ட பிறகு செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பவானி அம்மனை வணங்கி விடைபெற்று செல்வார்கள்.
பரசுராமர் பாவம் தீர வழிபட்ட தலம்
முனிவர் ஜமத்கனி உத்தரவை ஏற்று தன் தாய் ரேணுகாதேவியை பரசுராமர் வெட்டி கொன்ற தகவலை முன்பக்கங்களில் படித்து இருப்பீர்கள். தாயை கொன்றதால் பரசுராமருக்கு தோஷமும், பாவமும் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பரசுராமர் பல்வேறு தலங்களுக்கு சென்றார்.
இறுதியில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அருள்மிகு ஆலந் துறையார் (வடமூலநாதர்) என்ற தலத்தில் தான் பரசுராமரின் தோஷம் நீங்கியது. இத்தல சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அங்கு நீராட அவர் உருவாக்கிய குளம் `பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது.
சில சிவன் கோவில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி சிற்பகம் அமைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதை காணலாம்.
இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மகக்தி தோஷம் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
தோஷம் போக்கும் சென்னை ரேணுகா பரமேஸ்வரி ஆலயம்
சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக மாரியம்மன் ஆலயங்கள் ஆங்காங்கே உள்ளன.அதில் ஒன்று சின்னக்கடை மாரியம்மன் அல்லது ரேணுகாதேவி ஆலயம், மின்ட் சாலையும் என்.எஸ்.ஜி. போஸ் சாலையும் இணைக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம் 250 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள். அதற்கு காரணம் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும் ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டுமே பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும் அம்மன் காட்சி தருகிறார்.
அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ மாலையுடன் மிளகாயை சேர்த்துக் கட்டி தேவிகளை பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகள் இருந்தால் அவை அனைத்தும் ஓடி ஓளியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோல படைவீடு தலத்தில் உள்ள ரேணுகாதேவி ஆலயமும் மிகவும் புகழ் பெற்றதாகும்.
- கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார்.
- அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள்.
சுயம்பு மூர்த்தி யான பவானி அம்மன் கவசம் பெற்று முன்புறம் அமர்ந் திருக்கிறாள். பின்புறம் சிலை வடிவில் சுதையில் அவள் அழகான உருவம் வடிவமைக் கப்பட்டதைக் காணலாம்.
ஐந்து தலைநாகம் திருக்குடை கவிழ்க்க அன்னை சந்நிதி கொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.
பட்டுப்புடவை பளபளக்கும் மேனி, பரந்தமுக அழகில் எடுப்பான மூக்கு, அதில் மின்னித் துடிக்கும் மூக்குத்தி, எழிலார்ந்த சிரிப்பு நம் இதயத்தை அப்படியே கொள்ளை கொள்ளும். நம்மையெல்லாம் காக்கும் கருணைக் கடலாகிய அவளுக்கு நான்கு கரங்கள்.
வலது முன்புற கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம். இந்த கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.
பெரியபாளையத்தமன் உருவம் அமைந்திருக்கும் விதம் மிகவும் அலாதியானது. அரை உருவுடன் சங்கு சக்கர தாரிணியாக அமர்ந்து ஒரு கையில் வாளும், மறுகையில் அருள் பாலிக்கும் அமுத கலசமும் கொண்டு தோற்றமளிக்கும் அன்னையின் திருக்கோலத்தை வேறு எந்தக் கோவிலிலும் காண்பது அரிது.
கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார். அன்னையின் மடியருகே அமைந்து நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் சுயம்புவின் தோற்றம் காலத்தில் மிகமிகத் தொன்மை வாய்ந்ததாகும்.
அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள். வேத சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கால சக்தியாகவும், போக சக்தியாகவும், கோல சக்தியாகவும், கவி சக்தியாகவும், கருணா சக்தியாகவும், பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் நின்று பெரிய பாளையத்தில் அருளாட்சி செய்து வருகிறாள் பவானி என்னும் இந்த பெரிய பாளையத்தமன். இந்த சக்தியின் சக்தியை சக்தியால் உணர்ந்து சக்தியும் பெற்றோர் பலர்.
கவி காளிதாசனுக்கு அருட்கவி பாடிட அருளிய வளும், அலையும் மனத்தால் அமைதி இழந்து நின்ற ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், காளிதாசருக்கும் அமைதி வழிகாட்டி ஞானம் தந்தவளும் அன்னை பவானியே!
ஓங்கார வடிவம் கொண்ட அன்னை பவானி ஆங்காரம் கொண்டோரையும், முறை தவறி அறநெறி பிறழ்வோரையும் வதம் செய்து அடக்கி மோன நிலையில் இருக்கிறாள்.
நோயுற்று அல்லலுறுபவர்கள் வேப்பிலை ஆடை அணிந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்தால் அவர்கள் நோயும், பாவமும் நிச்சயம் அகலும். தீமையைப் போக்கி நன்மையை நிலைநாட்டும் அன்னை தன் அருட்பார்வையாலும், தான் அணிந் திருக்கும் மஞ்சளாலும், தன்மேல் பட்ட தண்ணீராலும், தீர்க்க முடியாத பல நோய்களை எல்லாம் தீர்த்து அருள்கிறாள்.
கோழி சுற்றி விடும் பிரார்த்தனை
பெரியபாளையத்தம்மன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனைகளில் "கோழி சுற்றி விடும் பிரார்த்தனை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது "இது உயிருக்கு உயிர் கொடுக்கும்'' பிரார்த்தனை ஆகும்.
வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால், அல்லது விபத்து போன்றவற்றில் சிக்கி உயிருக்குப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டால் உயிர் கொடுப்பதாக பெரியபாளையத்தம்மனிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். உடல்நலம் சரியானதும் மாடு, ஆடு, கோழி போன்ற ஏதாவது ஒன்றை கோவிலில் விட்டு விடுவார்கள்.
கோழி என்றால் தாயே இந்த உயிரை ஏற்றுக் கொள் என்று சுற்றி விடுவார் கள். ஆடு, கோழிகளை சுற்றி விடும் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கு என்றே பரசுராமர் சன்னதி அருகில் தனி இடம் உள்ளது. அங்கு விடப்படும் ஆடு, கோழிகள் பவானி அம்மனுக்கு சொந்தமானதாக மாறி விடும்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியபாளையம் கோவிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. ரத்தம் ஆறாக ஓடும் வகையில் கூட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. உயிர்ப்பலி தடுப்பு நடவடிக்கை மூலம் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.
அதற்கு பரிகாரமாக கோவில் சார்பில் ஒரு கோழியை உயிருடன் சுற்றி விட்டனர். அதைப் பார்த்து பக்தர்களும் ஆடு, கோழிகளை சுற்றி விடத் தொடங்கி விட்டனர். ஆடி மாத சிறப்பு நாட்களில் இங்கு ஏராளமானவர்கள் கோழி சுற்றி விடுவதை காணலாம்.
- ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.
- ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர ஜகத்பிதா ஹரிச்ரீசோ, கருடஸ்மய பஞ்ஜன
கிழக்கு முகம்-ஹனுமார்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.
தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.
மேற்கு முகம்-கருடர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.
வடக்கு முகம்- வராஹர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.
மேல்முகம்-ஹயக்ரீவர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.
நினைத்த காரியம் இனிதே நிறைவேற
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.
இதை பூஜையில் 108 முறை கூறவும்.
சகல கலைகளில் தேர்ச்சி, நினைவாற்றலுக்கு
ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரனாத் பவேத் இதை தினமும் 11 முறை கூறவும்.
நவக்கிரகங்களின் தோஷம் நீங்க
ஓம் வருணோ வாயுகதிமான்வாயு கௌபேர ஈஸ்வர ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ சனைச்வர: ராகு கேதுர், மருத்தோதா தாதா ஹர்தா ஸமீரஜா:
இதை தினமும் காலையில் 11 முறை கூறவும்.
எதிரிகளால் ஏற்படும் துன்பம் நீங்க
ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர ஜகத்பிதா ஹரிச்ரீசோ, கருடஸ்மய பஞ்ஜன
இதை தினமும் 12 முறை கூறவும்.
கடன் தொல்லையில் இருந்து விடுபட
ஓம் ருணதர்ய ஹரஸ் ஸ¨க்ஷ்ம ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந் அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர் காதா ஸ்ம்ருதிர் மனு:
இதை காலை, மாலை 51 முறை கூறவும்.
தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற
ஓம் காத்யாயனி மஹாமாயே மஹா யோஹீன் யதீச்வரி நந்தகோப ஸதம் தேவி பதிம் மே குரு தே நம:
இதை காலை 12 முறை கூறவும்.
வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது (இதை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் வெற்றியடையும்)
ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.
இதை வெளியில் புறப்படும் போது 3 முறை கூறவும்.
எல்லா விஷங்களும் நீங்க
ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வீர கருடாய பஞ்சமுகி வீர ஹனுமதே மம் மம் மம் மம் மம் ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.
சகல செல்வங்களும் பெற
ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ ஹனுமதே லம் லம் லம் லம் லம் ஸகல சம்பத்கராய ஸ்வாஹா.
பகைவர்களின் பயம் நீங்க
க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்மயி தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய
- சத்ரு சம்ஹார யாகம்.
- ஆஞ்சநேயருக்கு நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.
மண்ணுலகில் மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரை கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.
கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம். ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.
தோல்வி என்பதையே கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு திரும்புகிறான். ஆனால் அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.
தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.
எதற்கு? ராம லெட்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.
அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.
ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.
காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால் ராவணா... உன்னை வெல்ல எந்த சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.
ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது விபீஷணுக்கு தெரியும்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?
உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான். ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.
இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.
சத்ரு சம்ஹார யாகம் செய்ய, அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.
யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில் போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.
அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை அழைத்தார். வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன் சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.
ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.
தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.
மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.
இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.
காக்கும் தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.
சுதர்சனத்தின் வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.
சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.
அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.
ஆனால் மயில் ராவணன் யார்?
பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.
பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.
இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன். அவனை உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.
அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.
அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.
அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.
நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து தருகிறேன். இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.
அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.
மயில் ராவணனை வென்று சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.
பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.
- ஆஞ்சநேயர் ஒருமுகமாம் ஐந்தாவது திருமுகமாம் பஞ்சமுக ஆஞ்சநேயர் பதம் பணிய இதமாகும்
- வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம் பாலில் நைவேத்தியம் பழங்கள் படைத்திடுவோம்
பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பக்தியுடன் தொழுதிடவே
அஞ்சுவது ஏதுமின்றி அருள்தந்து காத்திடுவார்
வராகம் ஒருமுகம் வடக்குமுகம் பார்த்திருக்கும்
வராது இடரெல்லாம் வரந்தந்து காத்திருக்கும்
நரசிம்மம் ஒருமுகமாம் நல்லருள் புரிந்திருக்கும்
சிரமதிசை நீக்கிவிடும் தெற்குமுகம் பார்த்திருக்கும்
ஹயக்ரிவர் ஒருமுகமாம் மேல்முகம் பார்த்திருக்கும்
சகலகலா பாண்டித்யம் சந்தோஷம் தந்துவிடும்
கருடனும் ஒருமுகமாம் கடிய விஷம் நீக்கும்
உருவான மேற்குமுகம் உற்றுநோக்கும் திருமுகமாம்
ஆஞ்சநேயர் ஒருமுகமாம் ஐந்தாவது திருமுகமாம்
வஞ்சனை விரோதங்கள் வரட்டு குரோதங்கள்
பில்லி சூனியங்கள் பெரும்பகை அகற்றிவிடும்
உள்ளமெல்லாம் நிறைந்திருந்து உற்றதுணை ஆகிவிடும்
கிழக்கு முகம் பார்த்திருக்கும் கேடின்றிக் காத்திருக்கும்
வழக்குகள் வெற்றிதரும் வாழ்விலும் வெற்றிதரும்
கன்னிமார் கல்யாணக் காலங்கள் கைகூடும்
எண்ணம்போல் மழலைகள் எழிலாகத் தோற்றுவிக்கும்
பஞ்சமுக ஆஞ்சநேயர் பதம் பணிய இதமாகும்
கொஞ்சிவரும் செல்வங்கள் கோடி கோடி நலமாகும்
ஐந்துமுக ஆஞ்சநேயர் அனுதினமும் அருள்தரவே
சென்தூரப்பொட்டுமிட்டு' சிந்தனைகள் ஒன்றாக்கி
வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம்
பாலில் நைவேத்தியம் பழங்கள் படைத்திடுவோம்
வெற்றிலை சுருளோடு வடையில் மலைகளும் சுற்றியே
சாத்திடுவோம் பற்று நாம் கொண்டிடுவோம்
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம.
- வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.
- ராம நாமம் சொன்னால் பாவம் தீரும்.
ராமா, ராமா
அனைத்து கிரக தோஷங்களுக்கும் அனுமனை வழிபடுகிறோம். அவருக்கு ராம நாமம் பிடிக்கும். ராமா, ராமா என்று தினமும் சொல்லுங்கள், அனுமத் ஜெயந்தியன்று ஸ்ரீராம ஜெயத்தை நாவினிக்க சொல்லுங்கள். அவரருள் உடன் கிட்டும்.
எந்த கிழமையில் என்ன செய்வது?
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.
அனுமனும் ராமனும்
அனுமன் பிறர் நலமே தன்னலம் என நினைத்தவர். சுயநலமில்லாமல் ராமனுக்கு சேவை செய்தவர். அப்படிப்பட்டவர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதை உணர்த்தவே, ராமன் அனுமனை தன்னருகில் அமரச் செய்துள்ளார்.
சங்கு சக்கர ஆஞ்சநேயர்
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில், சுவாமி சந்நிதி எதிரே ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாறுபட்ட கோலமாகும்.
ராம பாராயண ஆஞ்சநேயர்
ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் அருகேஉள்ள நந்தவனத்தில் ராமநாமம் பாராயணம் செய்யும் கோலத்தில் அனுமன் வீற்றிருக்கிறார். அருகே ராமர், பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார்.
அனுமனை வணங்குவதன் பலன்
அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.
கிருஷ்ணனுக்கும் பிரியமானவர்
அனுமன் ராமனுக்கு மட்டுமல்ல! ராமாவதாரத்தை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்தில், அர்ஜுனனின் கொடியில் இருந்தவர் அவர். அவரது முன்னிலையிலேயே, கிருஷ்ணன் கீதையைப் போதித்தார்.
கண் கொடுக்கும் ஆஞ்சநேயர்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேரடியின் கீழ் கண்கொடுக்கும் ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். வெண்பாப்புலி வேலுசாமி பிள்ளை என்பவர் ஆஞ்சநேய புராணம் என்ற துதிபாடி இழந்தபார்வையை மீண்டும் பெற்றார்.
பெருமாள் அருகில் அனுமன்
ராமர் அருகில் மட்டுமில்லாமல், தேனி அருகிலுள்ள சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் மூலஸ்தானத்தில், பெருமாள் அருகிலும் அனுமனைத் தரிசிக்கலாம்.
கீதைக்கு உரை எழுதியவர்
கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர். "பைசாசம்' என்ற மொழியில், ஆஞ்சநேயர் கீதைக்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதியதாகச் சொல்வர்.
இலக்கண பட்டதாரி
சிறந்த கல்விமானான அனுமனை, "நவ வ்யாகரண வேத்தா' என்பர். அதாவது, அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தவர். புத்தி, சக்தி இரண்டும் அவரிடம் இருந்தது.
ஒரே சிலையில் மூன்று வடிவம்
உ.பி. கான்பூரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள பங்கிஆஞ்சநேயர் கோயிலில், காலையில்அனுமன் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞனாகவும், மாலையில் வீர புருஷராகவும் காட்சி தருகிறார்.
வீரமங்கள ஆஞ்சநேயர்
நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பொரவச்சேரி ராமபத்ர பெருமாள் கோயிலில் வீரமங்கள ஆஞ்சநேயர், வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை வடக்கு நோக்கி மடித்து வைத்த நிலையில் தரிசனம் தருகிறார்.
துஷ்ட நிக்ரஹ அனுமான்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிறு குன்றில் துஷ்ட நிக்ரஹ அனுமான் அருள்பாலிக்கிறார். வலது கைபக்தர்களின் துன்பங்களைஅறைந்து விரட்டுவது போல வடிக்கப்பட்டுள்ளது.
ஊருக்கு ஒரு பெயர்
அனுமனை கர்நாடகத்தில் ஹனுமந்தையா, ஆந்திராவில் ஆஞ்சநேயலு, மகாராஷ்டிராவில் மாருதி, சில வட மாநிலங்களில் மகாவீர் என்று அழைக்கின்றனர்.
கெடாத வடைமாலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள வீர அழகர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அணிவிக்கும் வடைமாலை நீண்டநாள் கெடுவதில்லை.
வாயைப் பொத்திய ஆஞ்சநேயர்
ராமனின் முன்பு தலையை குனிந்து, வாய் பொத்தி, மிகுந்த மரியாதையுடன் உள்ள அனுமன் சிலை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் உள்ளது.
ராமநாம மகிமை
ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான், கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம்.
- பத்துகைகளுடன் விளங்கும் ஆஞ்சநேயர் `தசபுஜ ஆஞ்சநேயர்’
- பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு முகம் கிழக்கு நோக்கி இருக்கும்.
ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு. இரண்டு கரங்களையும் இணைத்து கூப்பி தலைமேல் வைத்து வணங்கும் நிலையில் உள்ளவர் "பக்த அனுமான்'. கூப்பிய கையை மார்புக்கு நேராக வைத்திருந்தால், "அபயஹஸ்த அனுமான்'. ஓரு கையில் கதையும் மற்றொரு கையில் சஞ்சீவி மலையும் கொண்டிருந்தால் "வீர அனுமான்'. ராமனை தன்தோள் மேல் சுமந்தபடி ஐந்து முகங்கள் கொண்டிருந்தால் "பஞ்சமுக ஆஞ்சநேயர்'. பத்துகைகளுடன் விளங்கும் ஆஞ்சநேயர் "தசபுஜ ஆஞ்சநேயர்'.
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு என்ன படைப்பது
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அனுமன் முகம் கிழக்கு நோக்கி இருக்கும். இந்த முகத்திற்கு வாழைப்பழமும், கொண்டைக்கடலையும், தெற்கு நோக்கிய நரசிம்ம முகத்திற்கு பானகமும், நீர்மோரும், மேற்கு நோக்கிய கருட முகத்திற்கு தேன் படைக்க வேண்டும். வடக்கு பார்த்த வராக முகத்திற்கு சர்க்கரைப்பொங்கல், வடையும் படைக்க வேண்டும். மேல் நோக்கிய ஹயக்ரீவ முகத்துக்கு படையல் அவசியமில்லை.
பக்திக்கு தேவை மனம்
ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்."மாணவர்களே! அனுமன் இலங்கைக்குச் செல்ல கடலைத் தாண்ட வேண்டியிருந்தது. இவரால் இது முடியுமா என மற்ற குரங்குகள் சந்தேகப்பட்டன. அவர் என்ன செய்தார் தெரியுமா? ஆழ்ந்து கண்களை மூடி ஸ்ரீ ராமனைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டு, ""ஜெய் ஸ்ரீ ராம்' என்றார். ராமநாம மகிமையால், பெரிய உருவமெடுத்து இலங்கை போய் சேர்ந்தார்,'' என்றார்.
இதைக் கேட்ட ஒரு சிறுவன் மாலையில் வீடு திரும்பும் போது வழியில் குறுக்கிட்ட கால்வாயைத் தாண்ட நினைத்தான். ஆசிரியர் சொன்னபடியே, "ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்லியபடியே கால்வாயைத் தாண்டினான். கண்விழித்து பார்த்தால், தண்ணீருக்குள் கிடந்தான். மறுநாள் ஆசிரியரிடம் நடந்தைச் சொன்னான்.
""மாணவனே! பயந்தபடியே கால்வாயைத் தாண்டியிருப்பாய். ராமனின் நாமத்தை மனதார பயபக்தியுடன் சொல்லியிருக்க வேண்டும். அனுமன் அந்த மந்திரத்தைச் சொல்லும் போது அவருடைய ராம பக்தியை மதிப்பிட அளவுகோலே இல்லாமல் இருந்தது,'' என்றார். பக்திக்கு தேவை ஈடுபாடுள்ள மனம். அதை அனுமனிடம் கேட்டுப் பெறுவோம்.
- சிவாம்சம் பொருந்தியவர் அனுமன்.
- வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும்.
தசரத மகாராஜாவுக்கு குழந்தைகள் இல்லை. புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, பாயாசம் பெற்று தன் தேவியருக்கு கொடுத்தார். ராம சகோதரர்கள் பிறந்தனர்.
இதன் ஒரு பகுதியை, வாயுபகவான், அஞ்சனையிடம் கொடுத்தார். அவளும் கர்ப்பவதியாகி ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தாள். எனவே, சம வலிமையுள்ளவர்களாக ராமனும், ஆஞ்சநேயரும் உள்ளனர்.
இதனால் ராமனின் அளவுக்கு, ஆஞ்சநேயருக்கும் புகழ் ஏற்பட்டது என்று மராட்டிய மாவீரர் சிவாஜியின் குரு ராமதாசர் ஒரு கதையில் கூறியுள்ளார். சத்குரு தியாகப்பிரம்மம் தனது கீர்த்தனையில், அனுமனை ருத்ரனின் அம்சம் என்கிறார். அதாவது சிவாம்சம் பொருந்தியவர் அனுமன்.
ராமதூதர் அனுமனுக்கு என்ன மாலை அணிவிக்கப் போகிறீர்கள்! ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார்.
சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். "இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர்.
திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான். எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது.
நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர். வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.
ராமதாசர், ராமாயணம் எழுதிக் கொண்டிருந்த போது தனது சீடர்களுக்கு, அதைப் படித்துக் காட்டுவார். அப்போது யாரும் அறியாமல் அனுமன் அங்கு வந்து அமருவார். ஓரு முறை அசோகவனத்தில் வெள்ளை மலர்களை அனுமன் பார்த்ததாக ராமதாசர் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அனுமன், ""நான் வெள்ளை மலர்களை பார்க்கவில்லை, சிவப்பு மலர்களை தான் பார்த்தேன்'' என்றார்.
ராமதாசர் அதை மறுத்தார். ""பார்த்த நானே சொல்லும் போது திருத்திக் கொள்ள வேண்டியது தானே'' என அனுமான் வாதிட, வழக்கு ராமனிடம் சென்றது. அவர், ""ஆஞ்சநேயா! நீ பார்த்து வெள்ளை மலர்களைத் தான்'' என தீர்ப்பளித்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் சொன்னார்.
""அசோகவனத்தில் நீ இருந்த போது, உனது கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன. அதனால் அந்த மலர்களும் சிவப்பாக தோன்றின. நாம் உலகை எந்த நோக்கில் பார்க்கிறோமோ அதன்படி தான் நமக்கு அது தெரியும்' என்றார்.
சஞ்சீவி மலை
இலங்கையில் ராவணனுடன் போர் செய்த போது லட்சுமணன் மூர்ச்சையானான். அவனை எழுப்ப ஒரு மூலிகையைப் பறித்து வரும் படி அனுமனை அனுப்பினார் ராமன். எந்த மூலிகை எனத்தெரியாததால் ஒரு மலையையே பெயர்த்துக் கொண்டு வானவெளியில் பறந்து வந்தார் அனுமன்.
துவங்குவது ஆனைமுகனிடம் முடிவது அனுமனிடம்!
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார்.
ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.
- உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்ட பாராயணம்.
- அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான்.
இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம். அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது. ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன், மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம்.
"ராமா' என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன். "ராமா' என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.
ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன். அனுமன் மற்றும் சுந்தரகாண்டம் ஆகிய ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். தினமும் அனுமனை வணங்கி, சுந்தரகாண்டத்தின் ஒரு ஸர்க்கத்தைப் படியுங்கள். வாழ்வில் சிரமம் அணுகாது.
அனுமனின் குரு
அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான். அவருக்கு நன்றி கடன் பட்டிருந்த அனுமன், ""தங்களுக்கு குருதட்சணையாக என்ன தர வேண்டும்? என கேட்டார். சூரியன், தன் மகன் சுக்ரீவனுக்கு மந்திரியாக இருந்து அவனை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுடன் இருந்து, சூரியனுக்கு தன் நன்றியை செலுத்தினார்.
அனுமன் பெயர்க்காரணம்
ஒருமுறை குழந்தை அனுமன் வானில் சூரியன் உதயமாவதைப் பார்த்து அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும் அதை பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்ட ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்து கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை "ஹனு' என்பர். எனவே அவர் "ஹனுமான்' ஆனார். தமிழில் "அனுமன்' என்கிறோம்.
- அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம்.
- சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார்.
வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும்.
வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது.
இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம்.
ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார்.
இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார்.
இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை பிரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
- சுசீந்திரம் ஆஞ்சநேயர் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
- அபயவரத ஆஞ்சநேயர் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.
குபேர ஆஞ்சநேயர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர், ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.
இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்வலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.
பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில் உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர்.
ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.
அபயவரத ஆஞ்சநேயர்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.
ஜெயமங்கள ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.
இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.
வீரஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும் வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.
அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்: விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 36 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார்.
பக்த ஆஞ்சநேயர்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.
யோக நிலையில் ஆஞ்சநேயர்: மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.
பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்: தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அநுமேசுவரர்: சீதாப்பிராட்டியாரை எங்கு தேடியும் காணாமையால் மனம் நொந்து ஓரிடத்தில் ஈசனை ஸ்தாபித்து வேண்டினார் அனுமன். அதனால் அநுமேசுவரர் என்றும் அவ்வூர் அநுமன் பள்ளியாகவும், பூஜை பொருட்டு இறைவன் அனுமன் ஏற்படுத்திய நீர்க்குணி அநுமநதி என்றும் வழங்கலாயிற்று.
சத்திய ஆஞ்சநேயர்: செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.
வால் அறுபட்ட ஆஞ்சநேயர்: ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார்.
பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப் பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.
பாலரூப ஆஞ்சநேயர்: உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது. அதன் கீழ் குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.
யோக ஆஞ்சநேயர்: வேலூர் சோளிங்கரில் உள்ள ஒரு சிறிய குன்றில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை நேராக இருந்து தரிசிப்பவராய், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் இவர் இருக்கின்றார்.
யந்த்ரோத்தாரக அனுமன்: ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது.
அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில் உள்ளது.
ஜன்மபூமி ஆஞ்சநேயர்: பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர் ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.
பிரபத்யாஞ்சநேயர்: மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.
திரிநேத்ர சதுர்புஜ அனுமார்: நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலிலே தான் இந்தத் திரிநேத்ரதசபுஜ அனுமார் வீற்றிருக்கிறார். மூன்று கண்களுடனும் பத்துக் கைகளுடனும் காட்சி தருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்