search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"

    • சீதையை தேடிவந்த ராமர் போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார்.
    • ராமர் சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார்.

    சென்னை போரூரில் குரு பகவானுக்கு என்று ஒரு ஆலயம் உள்ளது. இத்தலத்து மூலவர் பெயர் ஸ்ரீராமநாதஸ்வரர்.

    இத்தலத்தின் வரலாறு வருமாறு:-

    சீதையை தேடிவந்த ராமர் போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார். ஞான திருஸ்டியால் பூமிக்கடியில் லிங்கம் இருப்பதையும், அதன் சிரசில் தன் கால்பட்டு தோசம் பெற்றதையும் உணர்ந்து, ஒரு மண்டலம் தவம் செய்தார். அத்தவத்தால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு வெளிவந்தார். ராமர் அச்சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார்.

    ராமநாத ஈசுவரர் எனவும் பெயரிட்டார். பின்னர் சிவனிடம் சீதை இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இவ்வூருக்கு 'போரூர் 'எனப் பெயர் வந்தது.

    ராமருக்கு குருவாக விளங்கியதால் இங்குள்ள சிவன், குரு அம்சமாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பு. எனவே இத்தலம் குரு-தட்சிணா மூர்த்தி தலமாக விளங்குகிறது. தட்சிணா மூர்த்திக்கு செய்ய வேண்டிய பரிகார பூஜை அனைத்தும் சிவனுக்கே நடைபெறுகிறது. தலவிருட்சம் 'நெல்லி மரம்' விசேசமான ஒன்றாகும்.

    • குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு.
    • இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம்.

    நவக்கிரக தலங்களில் குரு தலமாக குடந்தை வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98-வது தலம்.

    இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி, குருதட்சணாமூர்த்தி, ஆதலின் இதை தட்சிணாமூர்த்தி தலம் என்பர். விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூஜித்த தலம்.

    அம்பிகை இத்தலத்தில் தோன்றி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம். இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம்.

    உள்பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர், முருகன், லட்சுமி, நால்வர், சூரியேசர், சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணு நாதர், பிர்மேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் முதலியவரும் உள்ளனர்.

    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள்.

    குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு. குருபெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

    இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது. தட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர்.

    இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்வித தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாக கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த பெருமானுக்குரிய தலமாதலாலும் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலத்தை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவன் வீற்றிருப்பதாலும் ஆலங்குடி என்று பெயர் பெற்றது.

    தட்சிணாமூர்த்தி இத்தலத்தின் சிறப்புக் கடவுளாக விளங்குகிறார். வியாழக்கிழமையில் இம்மூர்த்தியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர்.

    நாகதோஷ முடையவர்கள் இத்தலத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறுகின்றன. தெட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.

    ஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்?

    குரு 1 -ம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள்.

    குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.

    குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நன்றாக பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

    குரு 3 -ம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.

    குரு 4 -ம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாயம் சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.

    குரு 5 -ம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.

    குரு 6 -ம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம்.

    சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.

    குரு 7 -ம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு.

    குரு 8 -ம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர்வதை இல்லாமல் போகும்.

    குரு 9 -ம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார்.

    வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.

    குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.

    குரு 11 -ம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.

    குரு 12 -ம் வீட்டில் இருந்தால் ஒழுகத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார்.

    • குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது.
    • தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும்.

    1. இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 கி.மீ. தூரத்திற்க்கு அப்பால் உள்ளது.

    2. இது தன்னைத்தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது.

    3. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது.

    4. மந்திரம், ஞாபகசக்தி, வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து, பணம், அனைத்திற்கும் காரகன் ஆகிறார்.

    5. குரு பார்வை கோடி புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.

    6. குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும்.

    7. குரு தோஷங்கள் விலகிட ஆலங்குடி சென்று வழிபடலாம்.

    8. 24 நெய் தீபங்கள் ஏற்றி 24 முறை மவுன வலம் வரவேண்டும்.

    9. குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள்நிற வஸ்திரம் வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து எலுமிச்சம் பழம் அன்னம் நிவேதிக்க வேண்டும்.

    10. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச்ச வீடு மகரம்.

    11. குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இணைந்து 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம் கிடைக்கும். கோடிஸ்வர யோகம் அமையும்.

    12. மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.

    13. பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

    14. குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும்.

    15. ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார்.

    16. அறிவு வாய்ந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.

    17. பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார்.

    18. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும்.

    19. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.

    20. வடக்குத் திசை குருவிற்கு உரியது.

    21. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை.

    22. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.

    23. ஒரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்ளும் குரு பகவான் பன்னிரெண்டு ராசிகளையும் கடக்க பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.

    24. குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் உலவும் போது சந்திரன் மக நட்சத்திரத்தில் வந்து குருவை தொட்டுவிட்டால் அன்று தான் மகாமகம். இது மருவி மாமாங்கமாகி விட்டது. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும். வடநாட்டில் கும்பமேளா என்று நடப்பது போல தமிழ்நாட்டில் மகாமக விழா நடத்தப்படுகிறது.

    25. குரு பகவான் ஆங்கிரச முனிவருக்கும், சிரத்தா தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு தாரை என்ற மனைவி உண்டு.

    26. ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் பெற்ற குருவிற்கு பரத்வாஜர் என்ற மகனும் இருந்தார். குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன.

    28. காசிக்கு சென்று ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாறாயிரம் ஆண்டுகள் சிவபெருமானை நோக்கி குரு தவம் செய்தார். இவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு.

    29. குருவிற்கு பிரஹஸ்பதி என்றும், வியாழன் என்றும், மந்திரி என்றும், அரசன் என்றும் பல பெயர்கள் உண்டு.

    30. குரு பகவான் தமிழகத்தில் திருச்செந்தூர், பாடி, தென்குடி திட்டை ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று ஈஸ்வரனை பூஜித்து பேறு பெற்றதாக கூறப்படுகிறது.

    • ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
    • குருவுக்கு பிரகஸ்பதி என்றும் ஒரு பெயர் உண்டு.

    ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுபகிரகம் என்ற அமைப்பையும் பெருமையையும் பெற்ற ஒரே கிரகம் குருபகவான் ஆவார். இவர் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று கருதப்படுகிறார். இதனால் இவருக்கு பிரகஸ்பதி என்றும் ஒரு பெயர் உண்டு.

    நம் வாழ்வில் இரண்டு விஷயங்கள் முக்கியமானது. அதாவது பணம், இரண்டாவது குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக்கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.

    குருவிற்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. மதிநுட்பம், பதவி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால்தான் இந்த துறைகளில் பிரகாசிக்க முடியும்.

    குருபலம்

    திருமணம் முடிவாவதற்கு மிக முக்கிய கிரகமாக குருபகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்திற்கு முக்கியமாக தேவைப்படுகிறது. குரு பலம் வந்துவிட்டதா என்று பார்த்தபிறகே பலரும் திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.

    குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

    குரு இட தோஷம்

    குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்ந்து இருக்க வேண்டும். குறிப்பாக லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு ஆகிய வீடுகளில் தனித்து இருக்கக்கூடாது. தனியாக இருப்பது சிறப்பானது அல்ல. ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் நல்ல ஸ்தான, ஆதிபத்தியம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு அந்த ஒரு பலமே போதுமானது.

    குரு இருக்கும் இடத்தை பொறுத்து கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள், தானாக தேடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஒருவரை ஈடுபட வைப்பதிலும் குருவுக்கு முக்கிய பங்கு உண்டு. மதபோதகர், மத பிரசாரகர், சொற்பொழிவாளர், கதாகாலட்சேபம் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். கோயில் கட்டுதல், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தல். அறங்காவலர் பதவி, தர்மஸ்தாபனம் அமைத்தல் போன்ற பாக்கியத்தை அருள்வார்.

    தலை சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் குருவின் பரிபூரண அருள் பெற்றவர்களாக இருப்பார்கள். கல்வித்துறை, நிதி, வங்கி, பைனான்ஸ், நீதித்துறை போன்றவற்றில் பணி செய்யக்கூடிய பாக்கியத்தை அருள்பவரும் குருபகவானே.

    பரிகாரம் என்ன?

    குருபகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் அனைத்து முருகன் தலங்களுக்கும் சென்று வணங்கலாம். குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் முருகப்பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார்.

    கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருவிற்குரிய சிறப்பு பரிகார தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி குரு தலமாகும். எல்லா சிவன் கோயில்களிலும் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் ஆடை அணிவித்து கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்யம் செய்து வணங்கி வழிபடலாம்.

    'ஓம் பிம் சிவய வசி குரு தேவாய நம' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லிவர தடை, தடங்கல்கள் நீங்கும்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
    • திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமி நாதசாமி கோவில் உள்ளது.

    இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    தந்தையாகிய சிவபெருமானுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் 'குரு உபதேச தலம்' என்ற சிறப்பும் பெற்றுள்ளது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், முருகனுக்கு மஞ்சள், பால், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, மாலை 7 மணிக்கு நேத்திர புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி ஆகியோர் ஆலோசனைப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • அகோபில மடம் 610 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது.

    1. தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி

    வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி

    அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி

    விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

    2. பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி

    நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி

    தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி

    வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

    3. மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி

    கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி

    ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி

    வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.

    4. இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே

    களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி

    துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி

    விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

    5. அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி

    பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி

    வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி

    வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

    புரட்டாசி சாற்று முறை உற்சவம்

    ஸ்ரீபெரும்புதூர், வடபுஷ்கரணி தெருவில், சீனிவாச பெருமாள் மற்றும் வேதாந்த தேசிகன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தின் சாற்று முறை தினத்தன்று, திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் வருவது வழக்கம். இதற்காக இரவு 10 மணிக்கு வீரராகவப் பெருமாள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்படுவார். அவரை வரவேற்க, ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்கு உட்பட்ட, செங்காடு அருகே, வேதாந்த தேசிகன் காத்திருந்து, மேள தாளங்களுடன் வாண வேடிக்கையுடன் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன்பிறகு மறுநாள் கோவிலில் நடைபெறும் சாற்று முறை உற்சவத்தில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, இரவு, வேதாந்த தேசிகரும், வீரராகவப் பெருமாளும் இணைந்து, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பர். மூன்றாவது நாள் அதிகாலை வீரராகவ பெருமாள் விடைபெற்று, திருவள்ளூர் திரும்புவார். இவ்விழாவில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை வழிபடுவார்கள்.

    அழகிய சிங்கர்

    வைணவ மடங்களில் பிரதானமாகத் திகழும் அகோபில மடம் 610 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. செந்தமிழும் வட மொழியும் கலந்து திருமாலைப் பணியும் தொன்மையான மரபு சார்ந்த வைணவ மடங்களில் முதன்மையானது அகோபில மடம்.

    அகோபிலம் ஆந்திராவில் ஒரு மலைப் பிரதேசம். அங்கு எழுந்தருளியுள்ள நரசிம்மர் 600 ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1398) காஞ்சியில் இருந்த கிடம்பி ஸ்ரீநிவாசாச்சாரியார் கனவில் வந்து அவரை அகோபிலம் வருமாறு அழைத்தார். அகோபில மலையில் அவரது கையில் மாலோல நரசிம்ஹர் விக்ரஹமாக வந்து சேர்ந்தார்.

    அத்துடன் ஒரு வயோதிகர் உருவில் வந்து அவரை கிராமம் கிராமமாகச் சென்று மக்களை ஆற்றுப்படுத்த ஆணையிட்டார்.

    அதன்படியே அகோபில மடம் உருவானது. அவர் ஆதிவண் சடகோபன் என்ற ஒரு திருநாமத்தை ஏற்று வைணவ சம்பிரதாயம் தழைக்க ராமானுசர் வழியில் விசிட்டாத்வைத மரபைப் பரப்பினார்.

    இந்த மடம் வடகலை சம்பிரதாயத்தை சார்ந்தது. ஆதிவண் சடகோப ஜீயர் தென்கலை சம்பிரதாயத்தின் ஆதி குருவான மணவாள மாமுனிகளுக்கு சந்நியாசம் அளித்தார் என்றும் வரலாறு கூறுகிறது. அவரது நாட்களில் வடகலை-தென்கலை வேறுபாடுகள் இல்லை.

    ஆந்திராவைச் சேர்ந்த அன்னமாச்சாரியார் திருவேங்கடவன் மேல் பல பாடல்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிவண் சடகோப ஜீயரின் சீடர் ஆவார்.

    ஆதிவண் சடகோப ஜீயர் வழியில் வந்தவர்கள் அழகிய சிங்கர்கள் என்றும் சடகோப ஜீயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (அழகிய சிங்கம் என்பது நரசிம்மப் பெருமானைக் குறிக்கும்).

    இம்மடத்தின் ஆளுமையில் சில திருமால் கோவில்கள் உள்ளன. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், ஆதனூர் புள்ளபூதங்குடி கோவில்கள், அஹோபில நரசிம்ஹர் கோவில் முதலியன சில. அவை தவிர மடத்தின் மூலம் பல வேத ஆகம பிரபந்த பாட சாலைகளும் நடத்தப்படுகின்றன. இதில் சேர்ந்து படிக்கக் கட்டணம் தேவை இல்லை.

    கடந்த அறுநூறு ஆண்டுகளாக தொடர்ந்த குரு பரம்பரை வழியில் பல ஆயிரக்கணக்கான சீடர்கள் கொண்ட ஒரு வைணவ மடமாக அகோபில மடம் செயல்பட்டு வருகிறது. இதன் 44-வது ஜீயர் திருவரங்கம் ராஜகோபுரம் ஆசியாவிலேயே உயர்ந்ததாகக் கட்டினார்.

    அவரால் பல வருடம் தேர்வு செய்யப்பட்ட வில்லிவலம் கிருஷணமாச்சாரியார் 45- வது ஜீயராக 1991 ம் ஆண்டு பொறுப்பேற்று நாராயண யதீந்திர மஹா தேசிகன் என்ற சந்நியாசப் பெயர் பெற்றார். அதற்கு முன் இவர் தமிழ்ப் பண்டிதராகவும் பாடசாலை ஆசிரியராகவும் பணியாற்றி வைணவம் சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    மடத்தின் பொறுப்பேற்றபின் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அஹோபிலம், புள்ளபூதங்குடி, திருவள்ளூர் கோவில்களைச் செப்பனிட்டார். தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தினார்.

    "தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றம்" என்றும், "சென்று காண்டற்கு அரிய கோவில்" என்று ஆழ்வார்கள் அகோபில மலையில் காட்டின் நடுவே உள்ள மாலோல நரசிம்மர் கோவிலைப் பற்றிப் பாடி இருந்தனர்.

    எல்லாரும் சென்று பெருமாளைச் சேவிக்க வேண்டும், இறைஅருள் பெறவேண்டும் என்று கருதி அகோபிலத்தில் பக்தர்கள் எளிதில் சென்று சேவிக்கவும் தங்கி அருள் பெறவும் பெரும் பொருட்செலவில் பல வசதிகளைச் செய்தார் 45 ம் பட்டம் அழகியசிங்கர்.

    எளிதில் அணுகக்கூடியவராகவும், வெளிப்படையாகப்பேசக்கூடியவராகவும், கடினமான வடமொழி காவியங்களையும் பக்தி இலக்கியங்களையும் பாமரர் அறியும் வண்ணம் எளிய தமிழில் உபன்யாசம் செய்யும் ஆற்றல் கொண்டதால் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

    இந்த அழகியசிங்கர் தனது 87 வது வயதில் அதிகாலை பரமபதம் அடைந்தார். ஸ்ரீரங்கத்தில் தனது ஆச்சாரியாரின் பிருந்தாவனத்தருகில் தானும் பிருந்தாவனம் கொண்டார்.

    இவரைத் தொடர்ந்து 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கராக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மகாதேசிகன் 7.5.2009 அன்று பொறுப்பேற்றோர். இவர் தலைமையில் திருவள்ளூர் தலம் முழுமையாக திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    கோவில் அமைப்பு

    நாராயணன் விரும்பிப் படுத்த பர்ணசாலையே கர்ப்பக்கிரகமாய் .உருவெடுக்க பல்லவர் - சோழர்கள் காலத்தில் அங்கே ஆகம விதிப்படி ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. கோயிலின் நுழைவாயிலின் மேல் ஐந்தடுக்கில் கோபுரம் அமைந்தது. அங்கே குடி கொண்ட பெருமாள் ஆழ்வார்கள் காலத்திலிருந்த 'வீரராகவப் பெருமாள்' என்று அழைக்கப்படலானார். தன்னை தரிசிக்கும் பக்தர்களின் பிணிகளைப் போக்கும் சக்தி படைத்தவராக விளங்கவதால் 'பிணிதீர்த்த பெருமாள்' என்றும் 'வைத்திய வீரராகவப் பெருமாள்' என்றும் வழங்கலாயின.

    பெருமாள் 'எங்கே படுப்பது?' என்று கேட்கும் விதமாக 'எவ்வுள்?' என்று வினவியதால் 'திருஎவ்வுளூர்' என்று பெயர் பெற்று, அந்த ஊர் இன்று 'திருவள்ளூர்' என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஆலயத்தில் நுழைந்தவுடன் விஸ்தாரமான ஒரு முற்றம், மையத்தில் பலி பீடம், கொடிமரம்.

    அதை கடந்து உட்சென்றால் கோயில் கொண்ட பெருமாளின் கூடம். இரு பதினாறு கால் மண்டபங்களுக்கிடையில் அழகாய் அமைந்த கருடன் சன்னதி. கணமும் கண்ணிமைக்காமல் பெருமாளை தரிசித்தபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் கருடாழ்வார். கருடாழ்வாருக்கு நேரெதிரே கிழக்கு திசை நோக்கி வீரராகவப் பெருமாளின் கர்ப்பக்கிரகம்.

    அரவணையில் கிடந்த கோலத்தில் பெருமாள் தென்திசையில் தலையும், வடதிசையில் திருவடியும் வைத்து, இடக்கரம் அவர் நாபியில் உதித்த நான்முனுக்கு பிரவண மந்திரத்தை உபதேசிக்க, வலக்கரம் சாலி ஹோத்ரரின் தலை மீது வலக்கரம் வைத்து சயனித்த திருககலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாள் சன்னதியில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் லக்ஷ்மி நரசிம்மரின் சன்னதி. வடமேற்கு மூலையில் உள்ள சன்னதியில் மார்பில் விஜயவல்லி துலங்க, பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

    வெளிப்பிரகாரத்தில் ஆழ்வார்களுக்கான இரண்டு மணி மண்டபங்கள். அதையடுத்து வசுமதித் தாயார் என்றும் கனகவல்லித் தாயார் என்றும் போற்றப்படும் தாயார் சன்னதி.

    கனகவல்லித் தாயார் அமைதியும், கருணையும் துலங்கும் முகத்துடன் காட்சி தருகிறாள். ஸ்ரீ வேதாந்த தேசிகர் இந்தத் தாயாரின் பேரில் 30 ஸ்லோகங்கள் கொண்ட 'ஸ்ரீ ஸ்துதி' பாடியிருக்கிறார். தாயார் சன்னதிக்கு நேர் பின்புறம் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் சன்னதியில் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இளையபெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோருடன் காட்சியளிக்கிறார். அடுத்தது ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி. பாமா, ருக்மணி சகிதம் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறான் புருஷோத்தமன்.

    பிரகாரத்தின் வடக்கு திசையில் ஒரு சிறு மண்டபம். அதில் சுவாமியின் கல் பாதங்கள். 'உடல் உபாதைகள் நீங்க வேண்டும்' என்ற பிரார்த்தனை யுடன் வருபவர்கள் இந்த கல் பாதத்தில் மிளகு கலந்த உப்பு சமர்ப்பிக்கிறார்கள். அவர்களின் பிணி நீக்கி அருள்கிறார் வைத்திய வீரராகவப் பெருமாள்.

    ஆலய தரிசனம் முடித்து வெளிவந்தால் ஆலயத்தின் வலதுபுறம் ஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கரைத்து பாலை ஊற்றினால் பண்ணிய பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.

    • மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
    • குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.

    1. ராவணனை அம்பெய்து கொன்ற ராமனைப் பள்ளி கொண்ட கோலத்தில் காண விரும்புபவர்கள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

    2. எவ்வளவு கொடிய பிணியையும் தீர்க்க வீரராகவனைச் சிந்தையில் வைத்துப் பொய்கையில் நீராடி வணங்கினால் எத்தகைய நோயும் தீரும்.

    3. இப்பெருமாளை உண்மையான அன்போடும், பக்தியோடும் வணங்குபர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள தொழிலில் மேன்மை அடைவார்கள். உலகை ஆளும் தகுதியும் பெறுவார்கள்.

    4. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும், குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது.

    5. தை அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

    6. கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.

    7. ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் ஈக்காடு வேட்டைக்குச் சென்ற பெருமாள் தாயாரை மணமுடித்ததாகத் தலவரலாறு.

    8. வீரராகவப் பெருமானை போற்றிப் பாடும் பாட்டுக்கள் வீரராகவர் போற்றி பஞ்சகம் எனப்படும். இப்பாட்டுக்கள் ஐந்தும் வீரராகவப் பெருமானை அருச்சிப்பதற்கு ஏற்றவை.

    நேர்த்திக் கடன்கள்

    இத்தலத்தில் இந்த நேர்த்திக்கடன் மிகவும் விசேஷமானது. உருவத் தகடுகளை (வெள்ளி, தங்கம்) செய்து போடுதல், தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப்புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.

    உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோவில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

    அபிஷேகம் இல்லை

    மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை கார்த்திகை மாதம் மட்டும் சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    தலபெருமை:

    தொண்டை மண்டலத்தில் உள்ள வைணவத் தலங்களில் இத்தலம் மிக முக்கிய திவ்ய தேசமாகும். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.

    ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது.

    மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

    • திருவதிகை திருத்தலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.
    • தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.

    திருவதிகை திருத்தலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகப் போகிறது. இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கடைபிடிக்கப்படும் பல செயல்களுக்கு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, திருவதிகை தலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    அசுரர்களை அழிக்க சிவ பெருமான் தேரில் ஏறி வந்தார் என்பது வரலாறு. அதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் தேர் செய்து முதல் தேரோட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகே தமிழகத்தில் மற்ற கோவில்களில் தேரோட்டம் நடத்தும் பழக்கம் உருவானது.

    தேவாரம், திருவாசகம் பாடல்களை மனம் ஊன்றி படித்தால், நிச்சயம் மனம் உருகும். தேவார பாடல்களை பாடிய திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.

    ஆனால் அவர் தேவாரப்பாடல்களை முதன் முதலில் பாடத் தொடங்கியது திருவதிகை தலத்தில்தான். தனக்கு ஏற்பட்ட சூலை நோய் நீங்கியதும் திருநாவுக்கரசர் இத்தலம் ஈசன் மீது முதல் தேவாரப்பாடலைப் பாடினார். இத்தலத்தில் அவர் மொத்தம் 16 பதிகங்கள் பாடினார்.

    தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சிவாலயங்கள் ஏராளமாக உள்ளன. பல ஆலயங்கள் கவனிப்பாரின்றி சிதிலமடைந்து விட்டன. தற்போது அந்த நிலை மாறி வருகிறது.

    பக்தர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக நமது பழமையான ஆலயங்கள் சீரமைக்கப்பட்டு, நித்திய பூஜைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. புண்ணியம் தரும் இந்த சீரிய பணியை செய்வதற்காக தமிழகத்தின் பல ஊர்களில் `உழவாரக் குழு'க்கள் உள்ளன.

    இந்த உழ வார பழக்கத்தை மக்கள் மத்தியில் தோற்று வித்தவர் திருநாவுக்கரசர் ஆவார். அவர் திருவதிகை கோவிலில் முதல் உழவார சேவையை செய்தார். அதன் பிறகே மக்கள் சிவாலயங்களைத் தேடிச் சென்று உழவார பணிகளை செய்யத் தொடங்கினார்கள்.

    இப்படி தமிழ்நாட்டில் முக்கியமான மூன்று ஆலய சேவை பழக்கத்துக்கு திருவதிகை தலமே வித்திட்டது. இத்தகையை சிறப்பான தலத்தை தமிழ்நாட்டில் பலரும் அறியாமல் இருப்பது உண்மையிலேயே வேதனைக்குரியது.

    புண்ணியங்களை குவித்து, முக்தியை தரும் அரியத்தலமாக இந்த தலம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தடவை அங்கு காலடி எடுத்து வைத்தாலே உன்னதமான மாற்றம் ஏற்படும். அதை பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்தாததும் நமது மனதில்தான் இருக்கிறது.

    சுவாதி நட்சத்திர தினத்தன்று வழிபட்டால் சுகம் அதிகரிக்கும் திருவதிகை கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் நட்சத்திர அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன. குறிப்பாக சுவாதி நட்சத்திர தினத்தன்று இத்தலத்தில் வழிபாடுகள் செய்வது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

    வைகாசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று தான் சிவபெருமான் தேரில் அமர்ந்து இத்தலம் அமைந்துள்ள பகுதிக்கு வந்து மூன்று அசுரர்களை தன் புன்னகையால் சம்ஹாரம் செய்தார். எனவேதான் சுவாதி நட்சத்திர நாட்களில் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் அனைத்து சுகமும் கிடைக்கும் என்கிறார்கள்.

    அது போல ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் நட்சத்திர அடிப்படையில் நடக்கும் திருவிழாக்கள் விபரம் வருமாறு:-

    சித்திரையில் அப்பர் பெருமானுக்கு சதய பெரு விழா பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும்.

    சித்திரை திருவோணம் நட்சத்திரத்தில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் மற்றும் சோடச உபசார மகா தீபாராதனையை அப்பர் தரிசனம் செய்கிறார்.

    வைகாசி மூலம் அன்று திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் உற்சவம் நடைபெறும்.

    ஆனி மகம் நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகர் மோட்சம் நிகழ்ச்சி நடைபெறும்..

    ஆடி மாதம் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு பூரம் நட்சத்திரத்தில் தேர் உற்சவம் நடைபெறும்.

    ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு மோட்சம் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஆவணி: விநாயகர் சதுர்த்தி பூஜை மற்றும் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    புரட்டாசி: நவராத்திரியில் 9 நாட்களும் மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் துர்க்கை மற்றும் வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    ஐப்பசி: ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னா பிஷேகம் நடைபெறும்.

    ஐப்பசி அமாவாசையில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு 108 திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

    கார்த்திகை மாதம்: ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

    மார்கழி: மாணிக்கவாசகருக்கு 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று திருவாதிரை அன்று ஸ்ரீ நடராஜர் பெருமான் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

    தை உத்திரம் அன்று திலகவதியார் மோட்சம், மாணிக்கவாசகர் ஜென்ம நட்சத்திரம் சிறப்பு பூஜை நடைபெறும்.

    பங்குனி உத்திரம் நட்சத்திரத்தில் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அன்னை பெரியநாயகி திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

    கோவில் தோற்றம்

    திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயத்தில் ஆரம்பத்தில் கொன்றை மரத்தடியில் லிங்கம் மட்டுமே இருந்துள்ளது. இந்த லிங்கம் தோன்றியதற்குப் பல விதமான புராணக் காரணங்கள் கூறப்படுகின்றன. ஆதியில் இவ்விடம் கொன்றை வனமாக இருந்துள்ளது.

    `தேவர்களும், அசுரர்களும், பார் கடலை கடைந்து அமிர்தம் எடுத்த போது திருமால் அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்காக மோகினி வடிவம் எடுத்தார். தேவர்களுக்கு கொடுத்து விட்டு தானும் உண்டு ஆனந்த பரவசமாய் இந்த கொன்றை வனத்தை வந்து அடைந்தார்.

    மோகினி வடிவில் திருமால் கொன்றை வனத்தில் இருப்பதைக் கண்ட பரமேஸ்வரன் அவர் மீது மோகம்கொண்டு அம்மோகினியைக் கூடி மறைந்தார்.

    பின் மோகினி வடிவம் நீங்க திருமால் கெடில நதியில் நீராடி சிவபூஜை மேற் கொண்டார். பூஜையில் மனம் நெகிழ்ந்த பரமேஸ்வரன் பூமியை பிளந்து சுயம்பாக லிங்க வடிவாகத் தோன்றி பெண்ணே உன் தவத்தில் மனம் மகிழ்ந்தோம். உனக்கு வேண்டிய வரத்தை கேள் என்று அருளினார்.

    அப்போது மோகினி வடிவில் இருந்த திருமால் பரவசம் அடைந்து சுவாமி இப்பெண் உருவம் நீங்கி என் உண்மை உருவம் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினார். திருமாலுக்கு அவரது உண்மை திருஉருவம் கிடைக்கப்பெற்றது.

    இது வீரட்டலிங்கம் தோன்றியதற்காக கூறப்படும் புராண கதையாகும். இவ் ஆலயத்தில் உள்ள மூல லிங்கத்தின் தோற்றம் வரலாற்று சான்றாகவோ, கல்வெட்டுச்சான்றாகவோ இன்றளவும் காண முடியாததாக உள்ளது.

    • கல்வெட்டுகள் நிரம்ப பெற்ற தலமாக பண்ருட்டி திருவதிகை தலம் உள்ளது.
    • மகேந்திரவர்மன் திருவதிகை கோவிலைக் கட்டினான்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான எல்லா ஆலயங்களிலும் நிச்சயம் கல்வெட்டுகள் இருக்கும். அந்த கோவிலை கட்டியது யார்? கோவிலின் நித்திய பூஜைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? யார்-யார் திருப்பணி செய்துள்ளனர்? என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கும் காலக் கண்ணாடியாக இந்த கல்வெட்டுக்கள் தான் உள்ளன.

    இந்த கல்வெட்டுக்கள் மட்டும் இல்லையெனில் தமிழ் மன்னர்களின் ஆன்மிக பணிகள் நமக்குத் தெரியாமலே போய் இருக்கும். இதை நன்கு உணர்ந்திருந்ததால் தான் ஆலயம் தோறும் திருப்பணிகள் செய்த மன்னர்கள் அந்த விபரங்களை கல்வெட்டுக்களில் குறிப்பிட்டு சுவர்களில் பதித்தனர்.

    அத்தகைய கல்வெட்டுகள் நிரம்பப் பெற்ற தலமாக பண்ருட்டி திருவதிகை தலம் உள்ளது. இத்தலத்தில் 4 சுற்றுச்சுவர்கள் பிரமாண்டமாக உள்ளது. இந்த சுவர்கள் முழுவதிலும் கல்வெட்டுகள் உள்ளன.

    தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்குள்ளது. பல்லவ மன்னன் இரண்டாம் பரமேசுவரப் போத்தரையன் (கி.பி.705-710) கங்க பல்லவர் (கி.பி.850-882) பிற்கால பல்லவர் (கி.பி.1216-1246) சோழ மன்னர்கள் (கி.பி.907-1273) பாண்டிய மன்னர்கள் (கி.பி.1054-1281) சாளுக்கிய மன்னர்கள் (கி.பி.1473-1492) விஜய நகர மன்னர்கள் (கி.பி.1339-1586) தஞ்சை நாயக்க மன்னர்கள் (கி.பி.1630-1650) ஆகியோரின் ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் கோவிலில் உளள்ன.

    சில இடங்களில் மட்டுமே இந்த கல்வெட்டுகள் கோர்வையாக, சீராக உள்ளன. பெரும் பாலான இடங்களில் கல்வெட்டு தகவல்கள் குண்டக்க, மண்டக்க... என மாறி, மாறியுள்ளன.

    மற்ற நாட்டு மன்னர்களின் படையெடுப்பால் முதலில் இந்த கல்வெட்டுகள் இடம் மாறியது. பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயத்தை அவர்கள் தங்கள் படை தலமாக மாற்றினார்கள்.

    இத்தகைய காரணங்களால், பல கல்வெட்டுகள் சிதைந்து போனது. என்றாலும் மிஞ்சிய கல்வெட்டுகள் தற்போது நமக்கு ஆயிரம் கதை சொல்வதாக உள்ளன.

    இந்த கல்வெட்டுகளை படிமம் எடுத்து ஆய்வு செய்துள்ள அறிஞர்கள், அந்த தகவல்களை ஒழுங்குபடுத்தி ஏராளமான உண்மைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்தனர். அந்த வகையில் திருவதிகை திருத்தலம், கல்வெட்டு களஞ்சியமாக இருப்பதை காணலாம்.

    இத்தலத்துக்கு செல்லும் போது சாமி தரிசனம் செய்து முடித்ததும் பிரகாரத்தை வலம் வரும் போது நாலாபுறமும் கண்களை சுழல விட்டு உன்னிப்பாகப் பார்த்தால் ஆங்காங்கே கல்வெட்டுகளை பார்க்க முடியும்.

    பார்க்க வேண்டிய மேலும் 3 இடங்கள்

    திருவதிகை திருத்தலத்தில் வீராட்டனேசுவரரை தரிசனம் செய்ய வருபவர்கள் அருகில் உள்ள மேலும் 3 இடங்களுக்கு சென்று வருவது நல்லது. சித்தவடமடம், குணபர வீச்சரம், வேகாக் கொல்லை ஆகியவையே இந்த 3 இடங்கள் ஆகும்.

    இதில் சித்தவட மடம் என்பது திருவதிகை நகரின் தொடக்கத்திலேயே உள்ளது. இங்குள்ள சிதம்பரேஸ்வரரை வணங்குவது நல்லது.

    திருவதிகைக்கு வடக்குத் திசையில் கடலூர் செல்லும் சாலையில் குணபரவீச்சரம் உள்ளது. சமணராக இருந்து சைவத்துக்கு மாறிய மகேந்திரவர்மன் இந்த கோவிலைக் கட்டினான்.

    அவனுக்கு ''குணபரன்'' என்றும் ஒரு பெயர் உண்டு. அந்த பெயரால் இவ்வாலயம் ''குணபரச்சுவரம்'' என்று அழைக்கப்படுகிறது. தற்போது இடிந்த நிலையில் உள்ள அந்த ஆலயம் ஆதிமூலேச்சுரம் என்றும் கூறப்படுகிறது.

    திருவதிகைக்கு தெற்கே சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் வேகாக் கொல்லை உள்ளது. முப்புரத்தை அழித்த போது ரத்தம் சிந்தியதால் திருவதிகை மண்ணெல்லாம் சிவப்பாக மாறியது.

    இன்றும் இந்த பகுதி மணல் சிவப்பாக இருப்பதை காணலாம். ஆனால் சிவபூஜை செய்ததால் 3 அசுரர்கள் மட்டும் தப்பினார்கள். அவர்கள் தீயில் எரியாத, சுடப்படாத இடம் வேகாக் கொல்லை எனப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் வேகாக் கொல்லை பகுதியில் மணல் வெண்மணலாக இருப்பதை காணலாம்.

    திருவதிகைக்கு செல்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு தரிசன நேரத்தை தீர்மானித்துக் கொண்டால் திருவதிகை அருகில் உள்ள இந்த 3 இடங்களுக்கும் செல்ல முடியும். இங்கும் நீங்கள் வழிபாடுகள் செய்தால் உங்கள் திருவதிகை பயணம் முழுமையான சிறப்பை பெறும்.

    • இந்த ஊருக்கு ஈசன் அருள் அதிகம் கிடைத்ததால் திருவதிகை என்ற பெயர் ஏற்பட்டது.
    • சிவபெருமான் தேரில் வந்ததால் கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

    1. எல்லா ஊர்களையும் விட இந்த ஊருக்கு ஈசன் அருள் அதிகம் கிடைத்ததால் இந்த ஊருக்கு ''திருவதிகை'' என்ற பெயர் ஏற்பட்டது.

    2. பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர் ''அதியரைய மங்கலம்'' என்று அழைக்கப்பட்டது.

    3. முதலாம் ராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் ''அதிராச மங்கலம்'' என்று பெயர் பெற்றது.

    4. முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் ''அதிராமங்கலியபுரம்'' என்று பெயர் மாறியது.

    5. விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் ''திருவதிகை நாடு'' என்ற பெயரில் இந்த ஊர் ஒரு சிற்றரரசரின் தலை நகரமாக இருந்தது.

    6. சேர மன்னர்களில் ஒரு பிரிவினர் ''அதிராசர்'' என்றழைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மன்னர்தான் இந்த கோவிலை கட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    7. திருநாவுக்கரசர் இத்தலத்தில் 16 தேவார திருப்பதிகங்கள் பாடியுள்ளார். திருஞான சம்பந்தர், சுந்தரர் இருவரும் தலா ஒரு பதிகம் பாடி உள்ளனர். ஒரு பத்கம் என்பது 10 பாடல்களைக் கொண்டது.

    8. சீர்காழி (71) திருவாரூர் (33) தலங்களுக்கு அடுத்தப்படியாக அதிக தேவார பாடல்கள் பெற்ற மூன்றாவது திருத்தலமாக திருவதிகை தலம் உள்ளது.

    9. புறநானூறு, கலித் தொகை ஆகிய சங்க கால நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் திருவதிகையில் சிவபெருமான் முப்புரம் எரித்த வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளது.

    10. சிவபெருமான் தன் சிரிப்பால் முப்புரத்தையும் எரித்து அழித்த சம்பவம் தில்லைக் கலம்பக பாடல்களில் இனிமையாக காட்டப்பட்டுள்ளது.

    11. மாணிக்க வாசகர் இத்தலத்துக்கு வந்து பதிகம் எதுவும் பாடி பதிவு செய்யவில்லை. என்றாலும் சிவபெருமான் முப்புரம் அழித்ததை புகழ்ந்து பாடியுள்ளார்.

    12. திரிபுரத்தை எரித்த போது சிவபெருமான் வில் ஏந்திய கோலத்தில் இருந்தார். அதே கோலத்தில் ஈசனை திருவிற்கோலம், திருச்செங்காட்டங்குடி, தஞ்சை பெரிய கோவில் ஆகிய கோவில்களிலும் தரிசிக்கலாம்.

    13. திரிபுரத்தை எரித்த போது சிவபெருமான் உக்கிரம் கொண்டு ஆடினார். அந்த ஆடலுக்கு கொடுகொட்டி, பாண்டரங்கம் என்று பெயராகும்.

    14. சுவாமி வீரட்டானேஸ்வரர் பதினாறு பட்டைகளுடன் காட்சியளிப்பது போல கோவில் தூண்கள் முழுவதும் 16 பட்டைகளுடன் விளங்கிறது.

    15. இத்திருக்கோவிலில் பூமியில் நிழல் விழாதபடி கணித முறைப்படி கர்ப்பகிரக விமானம் கட்டப்பட்டுள்ளது.

    16. திருநாவுக்கரசர் இத்தலத்தில் பாடிய தேவார பாடல்களின் பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்ஹார நிகழ்ச்சியை

    பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது.

    17. சிவபெருமான் தேரில் வந்ததால் இத்திருக்கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

    18. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற ஸ்தலமாகும்.

    19. இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.

    20. அம்பாள் சன்னதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பாகும். இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக நடக்கும்.

    21. தீராத வயிற்றுவலி இத்திருக்கோவிலில் திருநீறும், சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக நோய் தீர்ந்துவிடும்.

    22. குழந்தை பேறு இல்லாதவர்கள் அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு அபிஷேகம் செய்து அந்தப் பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.

    23. திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்து வழிபடுவோருக்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி.

    24. மாதந்தோறும் பவுர்ணமி அன்று இத்திருக்கோவிலை 16 முறை வலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும். அனைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    25. திருக்கோவில் ராஜகோபுர வாசலில் 108 நாட்டியங்களை விளங்கும் சின்முத்திரையுடன் கூடிய சிற்பங்களை கருங்கற்கலால் செதுக்கப்பட்டுள்ளது.

    26. 63 நாயன்மார்களின் நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    27. திருவாதிரை அன்று சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களில் ஸ்ரீபைரவர் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    28. ஞாயிறு அன்று ஐந்தெழுத்து வேள்வி நடத்தபடுகிறது.

    29. திங்கட்கிழமை சோமாவார வழிபாடு நடக்கிறது.

    • முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம்.
    • திருநாவுக்கரசரின் குரு பூஜை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும்.

    ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு புராண நிகழ்வு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், அந்த புராண சம்பவம் மீண்டும் ஒரு தடவை நிகழ்த்தி காட்டப்படும். அந்த வகையில் திருவதிகை தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ நாளில் சிவபெருமான், திரிபுரத்தை எரித்ததை நடத்துகிறார்கள்.

    இந்த ஆண்டு முப்புரம் எரித்து, சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று அதி காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படும். பிறகு திரிபுர சம்ஹாரமூர்த்திக்கான திருத்தேர் புறப்படும். ஏராளமானவர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுப்பார்கள்.

    அன்றிரவு 7 மணிக்கு திரிபுர சம்ஹாரமூர்த்தியை அலங்கரித்து தேரில் எழுந்தருள செய்வார்கள். இதற்கிடையே மேளவாத்தியம் முழுங்க வாணவேடிக்கையோடு சரநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சரம்கொண்டு வரப்படும்.

    அந்த சரத்தை பெற்று சிவபெருமான் புன்னகை செய்வார். முப்புரம் அழியும். இதை மக்களுக்காக நேரில் காட்ட 3 அரசுர்கள் போன்று 3 பொம்மைகள் செய்யப்படும்.

    அந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக திரிபுரசம்ஹார மூர்த்தி கையில் இருந்து செல்லும் அம்பு தாக்கி அழிக்கும். திருச்செந்தூர் தலத்தில் சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் போது புகை விட்டபடி பட்டாசு விடப்படும். அது போன்ற இத்தலத்திலும் சம்ஹார மூர்த்தியிடம் இருந்து பட்டாசு சென்று மூன்று அசுரர்களையும் அழிக்கும்.

    இந்த முப்புரமெரித்த காட்சியைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவதிகையில் திரள்வார்கள். முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம்.

    அது மட்டுமல்ல இந்த பிறவியில் எந்த எதிரிகளாலும் நமக்கு துன்பம் வராதாம். அசுரன் எனும் எதிரியை சிவபெருமான் அழிப்பதால், முப்புரமெரித்த காட்சியைக் கண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருநாவுக்கரசரின் குரு பூஜை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும். திருவதிகை தலத்தில் திருநாவுக்கரசருக்கான பூஜை மிக,மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் சதயம் நட்சத்திரம் தினத்தன்று திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப் படுகின்றன. மேலும் இத்தலத்தில் திருநாவுக்கரசர் நீண்ட நாட்கள் வாழ்ந்ததால், அவரது வரலாற்றை நினைவு கூறும் வகையில் சித்திரை மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

    ஒவ்வொரு நாளும் திருநாவுக்கரசரின் வரலாற்று நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இந்த 10 நாட்களும் திருநாவுக்கரசரை வழிபட்டால் பெரும் பேறுகள் கிடைக்கும்.

    இத்தலத்தில் தான் தெப்ப உற்சவத்தின் போது ஈசனுக்கு பதில் சிவனடியாரான திருநாவுக்கரசர் தெப்பத்தில் சென்று வருவார்கள்.தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இந்த அற்புதத்தை காணமுடியாது.

    • உலகத்து அதிசயங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில்.
    • சமய பெரியவர்கள் திருவதியை, தஞ்சை பெரிய கோவிலின் தந்தை என்று வர்ணிப்பதுண்டு.

    தஞ்சை பெரிய கோவிலை நாம் உலகத்து அதிசயங்களில் ஒன்று என்கிறோம். ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தஞ்சை கோவில் கோபுரம் கம்பிரமாக நிற்பதை கண்டு நாம் பெருமையும், ஆச்சரியமும் கொள்கிறோம்.

    ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கருவறை விமானம் மிகப் பிரமாண்டமாக, உலக அதிசய சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்கு அடிப்படையாக இருந்தது திருவதிகை கோவில்தான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. திருவதிகை கோவில் கருவறை விமான அமைப்பைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட ராஜராஜசோழன், சோழ மண்டலத்தில் இப்படியரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற நோக்கில் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினார்.

    எனவேதான் சமயப் பெரியவர்கள் திருவதியை திருத்தலத்தை தஞ்சை பெரிய கோவிலின் தந்தை கோவில் என்று வர்ணிப்பது உண்டு.

    ஆலய அமைப்பு, கருவறை அமைப்பு, லிங்கம் அமைப்பு உள்பட பல விஷயங்களில் திருவதிகை திருத்தலம் போலவே தஞ்சை பெரிய கோவிலும் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திருவதிகை கோவிலின் கருவறை ராசசிம்மன் காலத்தைச் சேர்ந்ததாகும். இது ஒரு தேர் போன்று இருக்கிறது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் மாடகோவில்கள் இருக்கின்றன.

    இந்த மாடகோவில்களில் நான்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. மூன்று மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இது ஐந்து நிலைகளை உடையது.

    மேல் நிலையில் விமானம் பண்டியல் எண் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு பக்கங்களிலும் அட்ட திக்கு பாலகர்களின் சுதை உருவம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த நான்கு நிலைகளிலும் நான்கு புறமும் சிவனின் வடிவங்களும், விஷ்ணுவின் வடிவங்களும், பிரம்மாவின் வடிவங்களும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன.

    கல்காரம் எனப்படும் கீழ்பகுதி முழுவதும் மூன்று பக்கங்களிலும் சுதை உருவங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    மாடக்கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கடவுளின் உருவம் சுதையாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கம் உள்ள மாடகோவிலில் நந்திதேவன், ஊர்மிளா, சுதை உருவமும், மற்றொன்றில் பஞ்சமூக சிவனும், பார்வதியும் சுதை உருவங்களாக உள்ளன. இவை இரண்டும் கிழக்கு நோக்கி உள்ளன.

    இவற்றின் வெளிப்பக்கத்தில் திரிபுர சம்கார மூர்த்தியும், மீனாட்சி கல்யாணமும், சந்திரசேகரர் உருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. மேலும் சிவன், யானையைத் தோலுரித்ததும், பிச்சாண்டவர் திருவுருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கத்தில் தட்சிணாமூர்த்தி திருக்கோவிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    மாடக்கோவில்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணுவும், மையத்தில் லிங்கோர்ப்பவரும் பக்கத்தில் மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியரும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் மகாவிஷ்ணுவின் வடிவங்கள் சுதைகளாக உள்ளன.

    வடக்கு பக்கம் மாடக்கோவில்களில் கிழக்கு நோக்கி பிரம்மாவின் உருவமும், சிவன், பார்வதி உருவமும் அமைந்துள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் ராவணன் கைலாய மலையைத் தூக்கி யாழ்மீட்டிய நிகழ்ச்சியும், உமாமகேஷ்வரர் உருவமும் சுதையாக அமைந்துள்ளன.

    இந்த மாடகோவில்களின் வெளிபக்க மூலைகளில் அரிமாக்கள் நின்றவாறு முன்னங்கால்கள் தூக்கிய நிலையில் நின்றுள்ளன.

    முதல் நிலையில் நான்கு புறமும் ஒற்றை திருவாட்சிகள் இருக்கின்றன. மூலவருக்குப் பின்னால் உமா மகேஸ்வரரின் சுதை உருவமும் நின்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    கருவறையின் உள்ளே சுற்றி வரும் சாலகார வழி இருந்துள்ளது. தற்போது இது அடைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பு போன்று காஞ்சி கைலாசநாதர் திருக்கோவில், தஞ்சை பெருவுடையார் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோவில்களில் காணலாம். திருவதிகைக்குப் பின்னரே இந்த கோவில்கள் கட்டப்பட்டன.

    ×