search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "additional police security"

    கார் மீது அரசு பஸ் மோதிய எதிர்பாராத விபத்து சம்பவத்தை தொடர்ந்து திருச்சியில் இன்று கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், சென்ற இடங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. #Banwarilalpurohit
    திருச்சி:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை ரெயிலில் திருச்சி வந்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற அவர் அங்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தினை வழங்கினார்.

    புதுக்கோட்டைமாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 5 மணிக்கு கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சிக்கு புறப்பட்டார். திருக்கோகர்ணம் அருகே முத்துடையான்பட்டி என்ற கிராமம் அருகில் கவர்னர் கார் வந்த போது, எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி அரசு பஸ் வந்தது.

    திடீரென எதிர்பாராத விதமாக அரசு பஸ் கவர்னர் காரின் வலது பக்க கதவில் மோதியது. இதில் கார் பாகங்கள் உடைந்து ரோட்டில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த கவர்னர் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் கவர்னரை பின்னால் வந்த காரில் ஏற்றி, பாதுகாப்பாக திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

    கவர்னர் காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் சென்ற நிலையில் அரசு பஸ் மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

    அரசு பஸ்சை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த டிரைவர் விஜயசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனக்கு முன்னால் சென்ற கல்லூரி பஸ்சை முந்த சென்றபோது எதிர்பாராத விதமாக கவர்னர் கார் மீது மோதிவிட்டதாக கூறினார்.

    அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பிறகு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தலைமை செயலகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    கவர்னர் கார் மீது மோதிய அரசு பஸ்சை ஓட்டி வந்த விஜய சுந்தரம் தி.மு.க. தொழிற் சங்கத்திலும் பொறுப்பில் உள்ளார் என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தி வரும் கவர்னருக்கு தி.மு.க.வினர் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நேற்று புதுக்கோட்டையிலும் கவர்னருக்கு தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் 500 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவற்றையெல்லாம் கடந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருச்சிக்கு திரும்பிய போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.

    நேற்று இரவு திருச்சி வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலை 10 மணிக்கு திருச்சி சங்கம் ஓட்டலில் நடைபெற்ற உயிருக்கு உறுதிமொழி என்ற உடலுறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அதன்பிறகு தஞ்சையில் நடைபெறும் பல்கலை கழக விழாவில் பங்கேற்க கார் மூலம் தஞ்சை புறப்பட்டு சென்றார். மாலை 4.30 மணிக்கு மீண்டும் கார் மூலம் திருச்சி வரும் கவர்னர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். நேற்று நடைபெற்ற எதிர்பாராத விபத்து சம்பவத்தை தொடர்ந்து திருச்சியில் இன்று கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், சென்ற இடங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கவர்னர் கார் செல்லும் போது அச்சாலையில் மற்ற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.  #TNGovernor #Banwarilalpurohit
    ×