search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adhikumbeshwarar Temple"

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இன்று காலை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IGPonManickavel
    கும்பகோணம்:

    தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் பழமை வாய்ந்த சிலைகள் மாயமானதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மாயமான சிலைகளை கண்டு பிடிக்கவும், சிலைகளின் தன்மைகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து சிலைகள் கடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சிலைகள் குஜராத் மாநில அருட்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    கோப்புப்படம்

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சிலைகள் கடத்தலில் தீனதயாளன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷா பங்களா வீட்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கடந்த மாதம் தஞ்சை பெரிய கோவில் மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தொல்லியல் துறையினர் உதவியுடன் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இந்த கோவில்களில் இருந்த சிலைகளின் உலோக தன்மை, உயரம், எடை ஆகியவை ஆவணங்கள் படி சரியாக உள்ளதா? என்று நவீன கருவிகள் மூலம் சோதித்தனர். போலி சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பொன். மாணிக்கவேல் இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இதனால் அவர் இதுவரை சிலைகள் கடத்தல் வழக்கில் மேற்கொண்ட விசாரணை என்னவாகும்? என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொன். மாணிக்கவேலுக்கு , பதவியை நீடித்து ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை 7.30 மணியளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் வந்தார்.

    பின்னர் தன்னுடன் வந்த போலீசாரை வெளியே நிற்குமாறு கூறிவிட்டு அவர் மட்டும் தனியாக கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் இருந்த ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சிலை, மற்றும் நாயன்மார்கள் சிலை, விநாயகர்சிலை, பஞ்சமூர்த்தி சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவில் ஊழியர்களிடமும் சிலைகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

    சுமார் ஒருமணிநேரம் கோவில்களில் உள்ள சிலைகளை அவர் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்தார்.

    கும்பகோணம் கோவிலில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IGPonManickavel
    ×