search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adiperku"

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
    • தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மார்க்கமாக செல்லும் ரெயில்களில் இடங்கள் நிரம்பி வழிவதால் தெற்கு ரெயில்வே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது.

    தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக சென்று திருச்சிக்கு நாளை காலை 6.40 மணிக்கு சென்றடைகிறது.

    இதேபோல திருச்சியில் இருந்து நாளை (3-ந் தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5.50 மணிக்கு வந்து சேரும்.

    • ஆடி மாதம் வரும் ஜூலை 17-ந் தேதி பிறக்கிறது.
    • மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் ஆடி மாதம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, புதன் என ஒவ்வொரு தினங்களும் கொண்டாட்ட தினமாக வருகிறது.

    நடப்பாண்டிற்கான ஆடி மாதம் வரும் ஜூலை 17ம் தேதி பிறக்கிறது. 17ம் தேதியானது புதன்கிழமையில் வருவது இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாத பிறப்பிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தற்போது முதலே கோயில்கள் களைகட்டத் தொடங்கிவிட்டது.

    ஆடி மாதம் வரும் ஜூலை 17-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி வரை வருகிறது. ஆடி மாதம் வந்துவிட்டாலே தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் திருவிழா கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம். மிகப்பெரிய அம்மன் கோயில்கள் மட்டுமின்றி ஒவ்வொரு ஊரிலும் உள்ள அம்மன் கோயில்களிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ஆடிக் கொண்டாட்டம்:

    ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி தபசு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை என பல விசேஷங்கள் கொண்டாடப்பட உள்ளது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். ஆடி மாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்றுதல், அன்னதானம் உள்ளிட்ட பல விசேஷங்கள் தொடர்ந்து அரங்கேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை காட்டிலும் வட மாவட்டங்களில் ஆடி மாதம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம், ஆடியின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூழ் ஊற்றுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளை பக்தர்கள் மேற்கொள்வார்கள்.

    ஆடி மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும்.
    • காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    ஆடி மாதம் புனிதமான மாதம். தெய்வீக உணர்வை அதிகரிக்க செய்யும் மாதம். அதனால் தான் மற்ற எந்த மாதத்தையும் விட இந்த மாதத்தில் நிறைய வழிபாடுகள் உள்ளன.

    ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி சுவாதி, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு என்று மாதம் முழுவதும் மங்களகரமாக இருக்கும்.

    இந்த பண்டிகை நாட்களில் `ஆடிப்பெருக்கு' எனும் ஆடி பதினெட்டாம் பெருக்கு மகத்துவமும், தனித்துவமும் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் மிகச்சரியாக ஆடி 18-ந் தேதியன்று இந்த விழா நடைபெறும்.

    சங்க கால தமிழர்கள் ஆடிபெருக்கு தினத்தை, மற்ற எந்த விழாக்களையும் விட மிக, மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அதற்கு முக்கிய காரணம் காவிரி நதியை நம் முன்னோர்கள் தெய்வமாக, தாயாக கருதியது தான்.

    சங்க காலத்தில் ஆடி பெருக்கு தினத்தன்று காவிரி நதியில் புதுவெள்ளம் கரை புரண்டோடும். பொதுவாக காவிரி நதி பாயும் பகுதிகளில் மக்களின் பயன்பாட்டுக்காக படித்துறைகள் அமைத்து இருப்பார்கள்.

    அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு வெள்ளம் ஓடும். அந்த புது வெள்ளத்தை வணங்கி, வரவேற்க தமிழர்கள் `ஆடி பதினெட்டு' விழாவை கொண்டாடியதாக குறிப்புகள் உள்ளன.

    ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும். இது மலைப்பகுதிகளில் பலத்த மழையை பெய்யச்செய்து காவிரியில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கும். உடனே காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    இந்த சமயத்தில் நெல், கரும்பு பயிரிட்டால் தான், தை மாதம் அறுவடை செய்ய முடியும் என்பதை கணக்கிட்டு நம் முன்னோர்கள் செயல்பட்டார்கள்.

    அதன் தொடக்கமாகத்தான் ஆடிப்பெருக்கை பெரும் விழாவாக கொண்டாடினார்கள். சங்க காலத்தில் இந்த விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா?

    ஆடி 18-ந் தேதி காலையில், ஒவ்வொரு குடும்பத்தினரும் குளித்து, புத்தாடை அணிந்து அலை, அலையாக நதி கரைக்கு வந்த விடுவார்கள். முதலில் காவிரித்தாய்க்கு வழிபாடு நடத்துவார்கள்.

    காவிரி கரையோரம் வாழை இலை விரித்து அதில் புது மஞ்சள், புது மஞ்சள் கயிறு, குங்குமம், புத்தாடை மற்றும் மங்கல பொருட்கள் வைத்து தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை காவிரித்தாயை கங்கா தேவியாக நினைத்து, ஆராதனை செய்து வழிபடுவார்கள்.

    பிறகு சுமங்கலி பூஜை நடத்துவார்கள். குடும்பத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் தம் குடும்பத்து சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை எடுத்துக் கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    பிறகு திருமணம் ஆகாத பெண்களும், காவிரி அன்னையை வணங்கி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்வார்கள். அப்படி செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

    புதுமணத்தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று அங்கு அரசு, வேம்பு மரத்தை சுற்றி வலம் வந்து வணங்கி மஞ்சள் நூலை கட்டுவர். அரசமரமும், வேப்ப மரமும், சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்சராஜன் என்றும், வேப்ப மரத்தை விருட்ச ராணி என்றும் அழைப்பர்.

    சக்தி ரூபமாக திகழும் வேப்ப மரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலை கட்டுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்றும், திருமணமான பெண்களுக்கு சந்தானலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி, காவிரி டெல்டாவின் கடை மடை பகுதி வரை இந்த கொண்டாட்டம் அந்தந்த பகுதி மண்வாசனைக்கு ஏற்ப இருக்கும். காவிரி கரையோரங்களில் மட்டுமின்றி வைகை, தாமிரபரணி நதிக்கரைகளிலும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஒரு காலத்தில் கோலாகலமாக நடந்தது.

    நதிக்கு பூஜை செய்து முடித்ததும், கரையோரங்களில் அமர்ந்து புளியோதரை, பொங்கல், தயிர் சாதம், வடை மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவார்கள். நாள் முழுவதும் இந்த கொண்டாட்டம் இருக்கும்.

    ஆனால் இன்று ஆடி பெருக்கு விழா காவிரி கரையோரங்களில் சில இடங்களில் மட்டும், ஓரிரு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. சாதாரண விழா போல மாறிவிட்டது. காவிரியை நாம் வெறும் நதியாக பார்ப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் நம் முன்னோர்கள் காவிரியை தெய்வமாக, தாயாக கருதினார்கள். காவிரியை ஈசன் மனைவி பார்வதியாக கருதினார்கள். காவிரித் தாய்க்கு மசக்கை ஏற்பட்டதாக நினைத்தனர்.

    பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி தன் சபதம் நிறைவேறியதும் காவிரியில் புனித நீராட வந்ததால், காவிரி பெருக்கெடுத்து ஓடுவதாக நம்பினார்கள். அது மட்டுமல்ல, ராமபிரான் அசுரர்களை கொன்ற பாவம் நீங்க காவிரியில் நீராடி புனிதம் பெற்றதாக நம்பினார்கள்.

    காவிரி நதியில் 66 கோடி தீர்த்தங்கள் இருப்பதாக சங்க கால தமிழர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். எனவே அவர்கள் காவிரியை கடவுளாக பார்த்தனர்.

    காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது, கடவுள் உற்சாக பெருக்குடன் வந்து தங்களை வாழ்த்துவதாக கருதினார்கள். அந்த சமயத்தில் காவிரி கரையோரம் வழிபாடு செய்தால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்று மக்கள் மனதில் ஆழமான நம்பிக்கை இருந்தது.

    அன்றைய தினம் எந்த புதிய முயற்சியைத் தொடங்கினாலும், அது ஆடி பெருக்கு போல பெருக்கெடுக்கும் என்று கருதினார்கள்.

    * புதிய தொழில் தொடங்கலாம்.

    * புதிய வாகனம் வாங்கலாம்.

    * சேமிப்பை ஆரம்பிக்கலாம்.

    * காய்கறி தோட்டம் போடலாம்.

    * நகை வாங்கலாம்.

    * புதிய பொருட்கள் வாங்கலாம்.

    இப்படி ஆடிப்பெருக்கு தினத்தன்று நீங்கள் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது இரட்டிப்பு பலன்களைத் தரும். அன்றைய தினம் காலை காவிரியில் நீராடுவது, எல்லா தோஷங்களையும் நீங்கச் செய்யும்.

    ஆடிப்பெருக்கு தினத்தன்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ரங்கநாத பெருமாள் காவிரிக் கரைக்கு எழுந்தருளி காவிரித் தாய்க்கு சீர்வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்வார். இதை கண்டால் `கோடி புண்ணியம் கிடைக்கும்' என்பது ஐதீகமாகும்.

    • வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர்.
    • காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.

    ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது.

    மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன்மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

    வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

    காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரதது கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.

    பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் மட்டுமாவது அணைகளை திறந்து விட்டு நீர்பெருக்கெடுத்து ஒடச் செய்கின்றனர்.

    • காவிரி ஆற்றின் கரைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடபபட்டது.
    • இதைமுன்னிட்டு பக்தர்களும் பொதுமக்கள் மக்களும் காவிரியில் வந்து புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வணங்கினர்.

    மேட்டூர்:

    காவிரி பாய்ந்து ஓடும் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றின் கரைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடபபட்டது. இதைமுன்னிட்டு பக்தர்களும் பொதுமக்கள் மக்களும் காவிரியில் வந்து புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வணங்கினர்.

    புதுமணத்தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அறிவித்திருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு புனித நீராடினார்கள். மேட்டூரிலும் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அணை மற்றும் காவிரிக்கரை பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர்.

    இன்று காலையில் இருந்தே சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் மேட்டூர் வந்தனர். இவர்கள் காவேரி பாலம் பகுதியில் ஆற்றில் நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார்கள் இவ்விழாவை முன்னிட்டு காவேரி பாலம் பகுதியில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை கடைகள், ராட்டி–னங்கள், தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதால் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஏ.டி.எஸ். பி. கென்னடி தலைமையில் மேட்டூர் டி.எஸ்.பி. விஜயகுமார் மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    போலீசாருடன் நாட்டு நல பணி திட்ட மாணவர்கள், ஊர்க்காவல் படையினர், வருவாய்த்துறை இணைந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சாமி சிலைகள் சாமியின் ஈட்டி, வேல் போன்ற ஆயுதங்கள் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்து மேளதாளங்களுடன் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது.

    தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் மேட்டூர் காவிரி பாலம் மற்றும் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    காவிரி ஆற்றின் மற்ற எந்த பகுதிகளிலும் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் கண்காணிப்பு கோபுரமும், கண்காணிப்பு கேமராவும் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேட்டூர் நகராட்சி சார்பில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு காவேரி பாலம் பகுதியில் தற்காலிக உடைமாற்றும் வரை மின்விளக்கு வசதி உட்பட அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ×