search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk member murder"

    அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் போலீசார் 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). முதல் நிலை காண்டிராக்டராக இருந்து வந்தார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக பதவி வகித்தார். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி காலை தனது காரில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் உரிமையாளரை சந்தித்து விட்டு அவரது வீட்டு வாசலில் காரில் அமர்ந்து இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை படுகொலை செய்தனர்.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ரமேஷ்பாபு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை குறித்து விசாரிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கொலை செய்ததாக கூலிபடையை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோர் சேலம் கோர்ட்டில் கடந்த 25-ந் தேதி சரண் அடைந்தனர். இதற்கிடையே ரமேஷ்பாபு கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த தமிழரசன் என்பவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    கூலிப்படையை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோரை காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

    அப்போது ரமேஷ்பாபு கொலையில் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயராமன் (55) மற்றும் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் மார்க்கோனி (47) ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. பிரமுகர் மார்க்கோனி ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலைக்கு தொழில் போட்டி மற்றும் அரசியல் போட்டியே காரணம் என தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலையில் தொடர்ந்து துப்பு துலங்கி வரும் தனிப்படை போலீசார் இந்த சம்பவம் குறித்து திருவையாறு குணா என்ற குணசேகரன், எமர்சன் பிரசன்ன, சிலம்பரசன், தமிழரசன், சீர்காழி குலோத்துங்கன் ஆகிய 5 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த கொலை குறித்து இன்னும் அதிக தகவல் கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து கொலையாளிகளிடம் இருந்து போலீசாருக்கு தேவையான வாக்கு மூலத்தை பெற்ற பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்ய வாய்ப்புள்ளது. இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ×