search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK MLA Protest"

    • போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
    • கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.

    கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. பா.ம.க. போராட்டம் நடத்தியதால் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பணி மீண்டும் தொடங்கியது. விளைநிலங்களுக்கு செல்லாமல் மேல் வளையமாதேவியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கரைகளை சமன்செய்யும் பணியிலும், பாலத்தின் அருகில் கால்வாய் வெட்டும் பணியிலும் என்.எல்.சி. நிறுவனம் ஈடுபட்டது.

    4-வது நாளான நேற்று பணிகள் நடைபெற்றது. விடிய விடிய இந்த பணி நடந்தது. இன்று 5-வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,500 மீட்டர் அகலத்தில் சுமார் 1 ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வளையமாதேவியில் விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண் மொழிதேவன் அறிவித்து இருந்தார். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    வளையமாதேவியில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளிக்காததால் புவனகிரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×