search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agathiyar Lake"

    • 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்தவை.
    • கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.

    கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அகத்தியர் ஏரியின் கிழக்கே அமைந்திருக்கிறது, பூதநாதர் குழு கோவில்கள். இவை கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்து சமய ஆலயங்களாகும். இவை இரண்டு துணைக் குழுக்களாக அமைந்துள்ளன.

    அதில் ஒன்று கிழக்கு பூதநாதர் குழு அல்லது பூதநாதர் முதன்மை குழு என்று அழைக்கப்படுகிறது. இது 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தை சேர்ந்தவை. இவை பெரும்பாலும் திராவிட கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன.

    மற்றொன்று வட பூமிநாதர் குழு அல்லது மல்லிகார்ஜூன குழு என்று அழைக்கப்படுகிறது. இவை 11 முதல் 12-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் கட்டப்பட்டவை. இதன் பெரும்பாலான கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.

    இந்த பூதநாதர் கோவிலானது, பழமையான இந்து கோவில்களில் ஒன்று. இந்த ஆலயம் ஒரு மைய மண்டபத்துடன், எண்கோணம், கனசதுரம், வட்டம் ஆகிய அமைப்புகளில் நான்கு விதமாக கட்டிட அமைப்புகளைக் கொண்டு காட்சியளிக்கிறது.

    மைய மண்டபமானது, சிவலிங்கம் வீற்றிருக்கும் சிறிய சதுர வடிவ கருவறைக்கு முன்பு இருக்கிறது. மலையின் அடிவாரத்தில், நீர் நிலைக்குள் இருப்பது போல் இந்த ஆலயம் கட்டப்பட்டிருப்பது, பார்ப்பவர்களின் கண்களை கவர்வதாக இருக்கிறது.

    கருவறையின் உச்சியில் (விமானம்) திராவிட கட்டிடக் கலை பாணியிலான 'திரிதால' (மூன்று தளங்கள்) கட்டுமானம் கொண்டிருக்கிறது. கீழ் பகுதியில் பாதபந்த மற்றும் கும்ப அமைப்பு உள்ளது. விமானச் சுவர்களில் பிரம்மகாண்ட பாணியில் செவ்வக வடிவ தூண்களும், கின்னரர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.

    இரண்டாவது தளமானது, கீழ் தளத்தை விட சற்று சிறியதாக உள்ளது. மூன்றாவது தளம், இரண்டாவது தளத்தின் பாதி அளவில் காணப்படுகிறது. உச்சியில் குட்டையான சிகரத்துடன் காட்சி தருகிறது.

    கோவிலின் அடிவாரத்தின் வலதுபுறத்தில் கங்கை தேவி தன் வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இடது புறத்தில் யமுனாதேவி தன் வாகனமான ஆமையின் மீது வீற்றிருக்கிறார். தவிர விநாயகர், மகிஷாசுரமர்த்தினி உருவங்கள் காணப்படுகின்றன.

    பிரதான கோவிலின் வடக்கே ஒரு சிற்றாலயம் உள்ளது. இது முதலில் மகாவிஷ்ணுவுக்காக கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தக் கோவிலை, லிங்காயத்து மரபினர் கைப்பற்றினர். அவர்கள்தான் இதற்கு ஒரு வெளிப்புற மண்டபத்தைக் கட்டி, கருவறைக்குள் நந்தியையும், சிவலிங்கத்தையும் நிறுவியுள்ளனர்.

    முதன்மை பூதநாதர் கோவிலுக்கு அருகாமையிலேயே மல்லிகார்ஜூனா குழு கோவில்கள் உள்ளன. இவை ஏரியின் வடக்கு பகுதியில் உள்ளன. தெற்கு வாசலைக் கொண்ட இந்த ஆலயம், பாம்சனா நாகர பாணியில் கட்டப்பட்டவை. இது ஒரு காலத்தில் மிகப்பெரிய விஷ்ணு வழிபாட்டிற்குரிய கோவிலாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

    பின் வழிபாடு இல்லாமல் போன இந்த ஆலயத்தில், பின்வந்தவர்கள் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். கோவிலில் எட்டு தூண்களுடன் செவ்வக வடிவ மண்டபம் உள்ளது. இது உள் மண்டபம், அந்தரளம், கருவறை ஆகிய அமைப்புடன் காணப்படுகிறது. இந்த கோவில் சுவரில் விஷ்ணு, சிவன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.

    ×