search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIADMK Minister"

    சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க. அரசு பாதுகாப்பாக திகழ்கிறது என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
    பரமத்திவேலூர்:

    பரமத்தி மற்றும் வேலூர் பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார்.

    இந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு, ஏராளமான முஸ்லிம்களுக்கு இப்தார் நோன்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் 9 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசும் போது கூறியதாவது:-

    முஸ்லிம்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மறைந்த ஜெயலலிதாவின் ஆசியுடன் செயல்படும் இந்த அ.தி.மு.க. அரசு அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான அரசாக திகழ்கிறது. அவரின் கொள்கை சாதி, மதம் இல்லாமல், அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதாகும். அந்த கொள்கையிலிருந்து சிறிதும் விலகி செல்லாமல் சிறுபான்மையின மக்களை முழுமையாக பாதுகாக்கும் அரசாக திகழ்கிறது.

    இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. பேசும் போது, ‘தமிழ்நாடு சமூக நல்லிணக்கத்திற்கான அடையாளமாக விளங்குகின்றது. மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலம் அமைக்க தங்களின் நிலங்களை வழங்கி சிறப்பித்த பெருமை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. பெண்களுக்கு முழு உரிமை வழங்கியது ஷரியத் சட்டம் தான் ஆகும். இதன்படி இஸ்லாமிய பெண்களுக்கு கணவனை தேர்வு செய்யும் உரிமை, மணவிலக்கு பெறும் உரிமை, மறுமணம் செய்து கொள்ளும் உரிமை, சொத்துரிமை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. தலைமை ஹாஜிக்கள் இல்லாத மாவட்டங்களில் அந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என்றார்.

    நிகழ்ச்சியில் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று வேலூர் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்திற்கு (கபர்ஸ்தான்) ரூ.7 லட்சத்தில் சுற்றுச்சுவரும், ரூ.1½ லட்சத்தில் பேவர் பிளாக் தரையும், மோகனூர் பள்ளிவாசலுக்கு ரூ.6½ லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவரும் தனது நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் அமைத்து தரப்படும் என நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் (பொறுப்பு) பால்பிரின்லி ராஜ்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.


    ×