search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "All India Leaders"

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
    • அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

    பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்களும், இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஓரளவு சம பலத்துடன் இருக்கிறார்கள். இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கத்தில் இருந்தே மிக கடுமையாக அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 23 கட்சி களும் தேர்தலின் போது பல தொகுதிகளில் ஒருங்கி ணைந்து செயல்பட்டதால் வெற்றி பெற முடிந்தது. அந்த அடிப்படையில் பாராளுமன்றத்துக்குள்ளும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்து இருக்கி றார்கள்.

    குறிப்பாக முக்கிய கொள்கைகளில் ஒருமித்த கருத்துடன் செயல்பட எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதை இன்றுமுதல் அரங கேற்றும் நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் மேற்கொண்டனர்.

    அவர்களது திட்டப்படி இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்ற கூட்டம் தொடங்கும் முன்பு கூட்டணியில் உள்ள 234 எம்.பி.க்களும் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டனர். வழக்கமாக பாராளுமன்ற கூட்டத்துக்கு எம்.பி.க்கள் ஒவ்வொருவராக வருவது உண்டு.

    அதை மாற்றி எதிர்க் கட்சிகள் தங்களுக்கு இருக்கும் வலிமையை முதல் நாளே ஆளும் கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான நடை முறையை கையில் எடுத்தன. அதன்படி அவர்கள் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அணிவகுத்தனர்.

    பிறகு அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக அணி வகுத்து பாராளுமன்றத்துக்கு சென்றனர். அவர்கள் கைகளில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தி இருந்தனர். இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை ஆளும் கட்சி இஷ்டத்துக்கு மாற்றி அமைக்க முடியாது என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில் தங்களது செயலை வெளிப்படுத்தினார்கள்.

    பாராளுமன்றத்துக்குள் சென்று அமர்ந்ததும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். முதல் நாளே இன்று அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தலா ஒரு எம்.பி.க்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஆனால் அந்த குழுவில் இடம் பெற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.

    இதுதான் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ள முதல் ஒருங்கிணைந்த எதிர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதே பாணியில் தொடர்ந்து செயல்பட எதிர்க்கட்சி தலைவர்கள் சம்மதித்து உள்ளனர்.

    எனவே பாராளுமன்றம் நடக்கும் நாட்களில் கூச்சல்-குழப்பம் மற்றும் விவாதத்துடன் கூடிய அமளிக்கு பஞ்சமே இருக்காது.

    ×