search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anaimalai Masaniyamman Temple"

    • 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும்.

    இந்தநிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதற்காக கோவில் கோபுரங்கள் புனரமைப்புபணிகள் நடைபெற்றது. தற்போது புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்து வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    வருகிற டிசம்பர் 12-ந்தேதி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உத்தரவின் பேரில், தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசப்பட்டு மகா கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

    இதையடுத்து வரும் டிசம்பர் 12-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மகா கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சியின் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்க மணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து, கண்காணிப்பாளர்கள் அர்ஜூன், புவனேஸ்வரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    • அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் குண்டம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி கடந்த 22-ந் தேதி நள்ளிரவு நடந்தது.

    நேற்று காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் தொடங்கியது. இதில் 41 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. குண்டத்தில் பூக்கள் தூவப்பட்டு வழிபாடு நடந்தது.

    குண்டத்துக்கு தேவை யான விறகுகளை கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பல கிராமங்களில் இருந்து மக்கள் பால்குடும் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்பட்டது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர். சிலர் தங்கள் கைகளில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குண்டம் இறங்கியது காண்போரை பரவசப்படுத்தியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான உதவிகளை செய்தனர்.

    குண்டம் திருவிழாவை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில், குண்டம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாசாணி அம்மனை தரிசனம் செய்தனர்.

    கோவை, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனைமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனைமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குண்டம் திருவிழாவை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி காலை கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை நடக்கிறது. 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    இதனையொட்டி கோவிலில் நள்ளிரவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்ததும் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர்.

    அங்கு மயான மண்ணை கொண்டு மாசாணியம்மன் திருவுருவம் உருவாக்கப் பட்டிருந்து. நள்ளிரவு 1 மணிக்கு பம்பை இசை முழங்க மயான பூஜை தொடங்கியது.

    அப்போது அம்மன் அருளாளி அருண் சாமி வந்து ஆடியபடி, அம்மன் உருவத்தை சிதைத்து எலும்பை வாயில் கவ்வியபடியே பிடி மண்ணை எடுத்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மாசாணி தாயே என பக்தி கோஷம் எழுப்பினர்.

    இந்த பூஜையில் ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ மாசாணி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் வள்ளி கும்மியாட்டமும் நடைபெற்றது. இதனையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

    மயான பூஜையையொட்டி அங்கு ஆனைமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை நடந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.

    25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திரளான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 26-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 27-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×