search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anamalai tiger archives"

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நவமலை வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் பல இடங்களில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகம் 958 ச.கி.மீட்டர் பரப்பு கொண்டது. இங்கு புலி, சிறுத்தை, யானை, அரிய வகை மரங்கள் என பல்லுயிர்கள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக குழிப்பட்டி, குறுமலை, மாவடப்பு உள்ளிட்ட இடங்களில் 4 ஆயிரம் ஏக்கரில் சந்தன மரக்காடுகள் இருந்தது.

    இந்த இடங்களில் இருந்த சந்தன மரங்கள் வனத்துறையில் பணியாற்றிய சிலர் உதவியுடன் முழுவதுமாக 13 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கடத்தப்பட்டது. 4 ஆயிரம் ஏக்கர் சந்தன மரக்காடுகள் முழுவதுமாக அழிக்கப்பட்ட இறுதி நேரத்தில் தான் கடத்தல் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

    அதற்கு பிறகு அப்போதைய அதிரடிப்படை தலைவராக இருந்த சைலேந்திரபாபு தலைமையிலான அதிரடிப்படையினர் வனப்பகுதிக்குள் சென்று மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    அதற்கு பிறகு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு டாப்சிலிப்பில் 1500 தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது தற்போது வழக்கு நடந்து வருகிறது.

    யானைகள் வேட்டை, புலிகள் வேட்டை என ஆனைமலை காடுகளில் வன வளங்கள் கொள்ளை சம்பவங்கள் தொடர்கிறது. இந்நிலையில், தற்போது நவமலை வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளது. நவமலை வனப்பகுதியில் பல இடங்களில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது தவிர குழிப்பட்டி, குறுமலை, மாவடப்பு போன்ற பகுதிகளிலும் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 1 மாதத்திற்கு முன்பு சர்க்கார் பதி வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் வன வளக் கொள்ளையை தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×