search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Antony Selvaraj"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான‌ அந்தோணி செல்வராஜ் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.

    பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களில் சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், மாணவி ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 7 பேரின் உடல்கள் முதலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்நிலையில் அவர்களது உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவும், மற்ற 6 பேரின் உடல்களை மறு உத்தரவை வரும்வரை பிரேத பரிசோதனை செய்யாமல் பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பிரேத பரிசோதனை முடிந்த மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட 7 பேரின் உடல்களையும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் மற்றும் தூத்துக்குடி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

    நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோ எடுக்கப்பட்டது. பின்பு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மணிராஜ், கிளாட்சன், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித்குமார், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அந்த 6 பேரின் உடல்களையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து 6 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் அண்ணாமலை, கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் சங்கர், 2-வது நீதித்துறை நடுவர் தாவூத்தம்மாள், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வினோத் சவுத்ரி தலைமையில், தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து, சோமசுந்தரம், மும்மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்ததும் ஒவ்வொரு உடலாக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் உடலை தவிர மற்ற 5 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அவரது உறவினர்கள் வெளியூரில் இருந்ததால் அவர்கள் நேற்று வரவில்லை. இன்று (வியாழக்கிழமை) காலை அவர்கள் தூத்துக்குடி வந்த‌னர். இதையடுத்து அவர்களிடம் அந்தோணிசெல்வராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் தூத்துக்குடியில் கடந்த 15 நாட்களாக நிலவிய பதட்டம் தணிந்துள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் போலீஸ் எண்ணிகையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    ×