search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrested broker"

    • ரவிக்குமார் மதுக்கரை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
    • லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் தப்பினார்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ்(53). இவர் கோவையில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அந்த ரியல் எஸ்டேட் சார்பில் விளாங்குறிச்சி ஜீவா நகர் அருகே வீட்டுமனை பிரிக்கப்பட்டு அங்கு தற்காலிக அலுவலகம் உள்ளது.

    கடந்த 9-ந் தேதி அந்த அலுவலகத்துக்கு அதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் புரோக்கராக பணியாற்றும் ரவிக்குமார் என்ற கென்னடி(45) வந்தார். அவர் திடீரென்று லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் தப்பினார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரவிக்குமார் மதுக்கரை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 23 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசாரிடம் ரவிக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் பல பேரிடம் கடன் வாங்கியிருந்தேன். பணம் கேட்டு அவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் அந்த கடனை எப்படி திருப்பி கொடுப்பது என யோசித்து வந்தேன்.

    அப்ேபாது தான் நான் வேலை செய்யும ரியல்எஸ்டேட் அலுவலகத்தின் மேலாளரிடம் ரூ.82 லட்சம் இருப்பதை அறிந்தேன். அதை பறிக்க திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று அலுவலகத்துக்கு சென்றபோது, மேலாளர் மட்டுமே இருந்தார். இதுதான் சரியான நேரம் என்று நினைத்து நான் வைத்திருந்த ஆக்சா பிளேடால் அவரை வெட்டினேன். இதில் காயம் அடைந்த அவர் அப்படியே கீழே விழுந்தார். உடனே நான் 82 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு நான் வந்த காரில் ஏறி தப்பினேன். அந்த பணத்தை கொண்டு நான் கடன் வாங்கியவர்களுக்கு திருப்பி கொடுத்தேன். மீதி பணத்தை வைத்துக் கொண்டு பாலத்துறை அருகே வந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே போலீசார் ரவிக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கைதான ரவிக்குமார் சுமார் 10 பேரிடம் கடன் வாங்கியிருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டுமனை மற்றும் வீடு வாங்கி தருகிறேன் என பலரிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். இதற்காக அவர்களுக்கு எழுதியும் கொடுத்திருக்கிறார். அவர் பறித்துச் சென்ற 82 லட்ச ரூபாயில் கடன் வாங்கிய சிலருக்கு கடனை திருப்பி கொடுத்ததாக கூறியிருக்கிறார். அவர் கூறுவது உண்மைதானா என்பதை சரிபார்ப்பதற்காக சிலரிடம் நாங்கள் விசாரித்த போது அவர்களும் அதை ஒப்புக் கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் ரவிக்குமாருக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் பணத்தை திருப்பி வாங்கியவர்களை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளோம். ரவிக்குமார் அவர்களிடம் கடன் வாங்கினாரா? அதற்கான ஆதாரம் உள்ளதா? என்று அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். இதற்கிடையில் ரவிக்குமாரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. அப்போது தான் இதில் உண்மையான விவரங்கள் தெரியவரும்

    ×