search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrested in gangster act"

    • 2 நபர்கள் கத்தி முனையில், 3 பவுன் சங்கிலி, 1 பவுன் மோதிரம், ரொக்கம் ரூ.5,500 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • இதுகுறித்து மதிவாணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்–பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). இவர் ஜவ்வரிசி (சேகோ) தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    கடந்த 28-ந் தேதி சந்தைப்பேட்டை பழைய வணிக வளாகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த 2 நபர்கள் கத்தி முனையில், 3 பவுன் சங்கிலி, 1 பவுன் மோதிரம், ரொக்கம் ரூ.5,500 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மதிவாணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மதிவாணனிடம் நகை, பணம் பறித்த சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அன்சர் மகன் குட்டி என்கிற பக்ருதீன் (48), அம்மாபேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த கமல்பாஷா மகன் சதாம் உசேன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விசாரணையில், கடந்த 27-ந் தேதி சேலம் கந்தம்பட்டி ஆர்.டி.ஓ அலுவலகம் பின்புறம் சேகோ பேக்டரி நடத்தி வரும் ராமசாமி (75) என்பவரை, கத்தி முனையில் மிரட்டி ரூ.10,200 பறித்ததாக பக்ருதீன் மற்றும் சதாம் உசேன் மீது சூரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் அன்னதானப்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பக்ருதீன் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா (தெற்கு) ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா பக்ருதீன் மற்றும் சதாம் உசேனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    ×