search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attack on Indian students"

    • மாணவர்களின் பெற்றோர் இந்தியாவில் அச்சத்தில் உள்ளதாக அஜய் தெரிவித்தார்
    • தாக்குதல்களை தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்றது வெள்ளை மாளிகை

    கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில், அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நிகழ்ச்சிகள் நடப்பது உலகெங்கும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    கடந்த ஜனவரியில் ஜியார்ஜியா மாநில லித்தொனியாவில், விவேக் சாய்னி எனும் மாணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    பிப்ரவரி மாத தொடக்கத்தில் சையத் மசாஹிர் அலி எனும் இந்தியாவை சேர்ந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் தாக்கப்பட்டார்.

    ஒகையோ மாநிலத்தில் நிர்வாக மேலாண்மை பட்டம் படித்து வந்த இந்தியாவை சேர்ந்த ஸ்ரேயஸ் ரெட்டி பெனிகேரி உயிரிழந்தார்.

    இந்திய அமெரிக்க சமூகத்திற்கான தலைவர் அஜய் ஜெயின் புடோரியா இது குறித்து தெரிவித்ததாவது:

    வெவ்வேறு சம்பவங்களில் பல இந்திய மாணவர்கள் உயிரிழப்பது, இந்தியர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை கோடிட்டு காட்டுகிறது. கல்லூரிகளும், காவல்துறையும் இணைந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய சம்பவங்களினால் மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும், இந்தியாவில் மிகுந்த மன வருத்தத்திலும் அச்சத்திலும் உள்ளனர். அவர்களின் கவலையை போக்கும் வகையில் அனைத்து கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஜெயின் கூறினார்.

    இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்ததாவது:

    இனம், மதம், பாலினம் உள்ளிட்ட எந்த காரணங்களுக்காகவும் வன்முறை சம்பவங்கள் நடப்பதை அமெரிக்கா ஒரு போதும் சகித்து கொள்ளாது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், அமெரிக்காவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார்.

    மாநில அரசுகளுடனும், உள்ளூர் நிர்வாகத்துடனும் மத்திய அரசு கலந்தாலோசித்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பேற்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இவ்வாறு கிர்பி தெரிவித்தார்.

    ×