search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attack try"

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணுவை இந்து அமைப்பினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணமாக இன்று வேலூருக்கு வந்தார். வேலூர் கோட்டை அருகே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். பிறகு, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க சென்றார்.

    அப்போது, நிருபர்களுக்கு அய்யாக்கண்ணு பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர்வளத்துறை செயலாளர் மற்றும் கர்நாடக தலைமை செயலாளரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலாற்றில் அணைகள் கட்ட வேண்டும். தென்பெண்ணையாற்றை பாலாற்றுடன் இணைக்க வேண்டும். இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைக்க இன்று வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த கமிட்டிக்கு காவிரி விவகாரத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமற்ற கமிட்டி என்றால் எங்களுக்கு தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சரை அழைப்போம். முதல்- அமைச்சர் வரவில்லை என்றாலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    அய்யாக்கண்ணு மோடி மீது விமர்சனம் வைத்ததால், அந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக பாடை கட்டி வந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற அமைப்பினர் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்தனர். மோடியை பற்றி விமர்சிக்க உனக்கு தகுதியில்லை. விவசாய சங்கத்திற்கு நீ தலைவனாக இருப்பதற்கும் தகுதியில்லை என்று ஒருமையில் பேசினர்.

    இதனால் அய்யாக்கண்ணுவுக்கும், இந்து அமைப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் அய்யாக்கண்ணுவை தாக்க முயற்சித்தனர்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, மோதலை தடுத்து அய்யாக்கண்ணுவை மீட்டனர். பின்னர், இது பற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே, திருச்செந்தூரில் பா.ஜ.க. பெண் பிரமுகர் அய்யாக் கண்ணுவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
    ×