search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bahubali Elephant"

    • யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.
    • சரியான இடத்திற்கு யானை வரும்போது யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்று அழைக்கப்படும் பெரிய உருவத்துடன் கூடிய ஒற்றை ஆண் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் நுழைவதும், அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சமயபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் பாகுபலி யானை வாயில் காயத்துடன் சுற்றுவதை வனப்பணியாளர்கள் பார்த்தனர்.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் யானைக்கு காயம் இருந்தால், அதனை பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    யானையை கண்காணிப்பதற்காக வனத்துறை சார்பில் 2 குழுக்களும் அமைக்கப்பட்டது. இதுதவிர சாடிவயலில் இருந்து பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டன.

    வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக மோப்பநாய் உதவியுடன், பாகுபலி யானையை கண்காணித்து வருகின்றனர். ஆனால் யானை வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் பாகுபலி யானையின் வாயில் உள்ள காயத்தின் தன்மை அறிவதற்காவும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காகவும் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் யானையை பிடிப்பதற்கு உதவியாக முதுமலை தெப்பக்காடு முகாமில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் வரழைக்கப்பட்டன.

    அந்த யானைகள் உதவியுடன் பாகுபலி யானையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் யானை வரும் இடங்கள், அது வழக்கமாக செல்லும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பாகுபலி யானை தற்போது வேகமாக நகர்கிறது. எனவே எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் அந்த யானை வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் மயக்க ஊசி செலுத்த ஏற்ற இடத்தை ஆய்வு செய்து வருகிறோம்.

    சரியான இடத்திற்கு யானை வரும்போது யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும். இதற்காக மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்த பணிக்கு உதவுவதற்காக 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் யானையை கண்காணித்து வருகிறோம்.

    யானை சரியாக உணவு உட்கொள்கிறதா? தண்ணீர் அருந்துகிறதா? என்பதையும் வீடியோ பதிவு மூலம் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது. அது இல்லாதபட்சத்தில் உடனடி சிகிச்சை தேவைப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பெருமாள் கோவில் அருகே சென்ற யானை, கோவில் மண்டபத்தில் முன்பக்க கதவை உடைத்து கோவிலுக்குள் சென்றது.
    • பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இவை அவ்வப்போது, இரை, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியையொட்டிய ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் பகுதிகளில் மக்களால் பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது.

    இந்த யானை அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானையானது வனத்தை விட்டு வெளியேறி சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து அருகே உள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நுழைந்து வருகிறது.

    அவ்வாறு நுழையும் காட்டு யானை பகல் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் சுற்றி திரிந்து தனது பசியினை தீர்த்துக் கொள்கிறது.

    பின்னர் மாலையில் வழக்கம்போல மீண்டும் சமயபுரம் வழியாக சாலையை கடந்து வனத்திற்குள் சென்று விடுகிறது.

    நீண்ட தந்தங்களுடனும், பிரம்மிப்பூட்டும் அதன் பிரமாண்ட உருவமும் கொண்ட பாகுபலி யானையைக் கண்டு சமயபுரம், தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இருப்பினும் பாகுபலி யானை இதுவரை யாருக்கு எந்தவித தொந்தரவு கொடுத்ததும் இல்லை. யாரையும் தாக்கியதும் இல்லை. தற்போது யானையானது மூர்க்கத்தனத்துடன் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் தாசம்பாளையம் பகுதியில் பாகுபலி யானை சுற்றி திரிந்தது.

    அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே சென்ற யானை, கோவில் மண்டபத்தில் முன்பக்க கதவை உடைத்து கோவிலுக்குள் சென்றது.

    பின்னர் அங்கு சிறிது நேரம் சுற்றி விட்டு, மீண்டும் வெளியில் வந்த யானை அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

    இந்த காட்சிகள் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    தற்போது கோவில் கேட்டை உடைத்து பாகுபலி யானை கோவிலுக்குள் நுழையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போதும் இதே கோரிக்கையை மக்கள் வனத்துறையினருக்கு வைத்துள்ளனர். இதுவரை கண்டுகொள்ளாத வனத்துறையினர் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×