search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ban On Plastic In Thoothukudi"

    தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை வருகிற 15-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாலித்தீன் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தடுத்து வருகிற சுதந்திர தினத்தன்று ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் அற்ற மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள 50 மைக்கிரான் தடிமனுக்கு குறைவான பாலித்தீன் பைகளோடு 15.7.2018 முதல் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் ஸ்பூன்கள், ஸ்ட்ரா போன்றவை தடை செய்யப்படுகிறது.

    மேலும் 31.7.2018 முதல் தண்ணீர் பாக்கெட்டுகள், காய்கறிகள், பழங்கள் இறைச்சி, டீ, காபி மற்றும் உணவு பதார்த்தங்களை பாலித்தீன் பைகளில் பொதிந்து கொடுப்பது தடை செய்யப்படுகிறது.

    எனவே பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் மாநகராட்சியின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு தொடர் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால், தங்கள் வசம் இருப்பில் உள்ள மேற்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும். அதற்கு மாற்றாக தேவைப்படும் மாற்றுப் பொருட்களை கையாள தேவையான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பொது மக்கள் கடை வீதிகளுக்கு செல்லும் போது தங்கள் வீடுகளில் இருந்து துணிப்பைகள், வயர் கூடைகள், பாத்திரங்கள் போன்றவற்றை கொண்டு செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் பிளாஸ்டிக் தடை நடவடிக்கை மேற்கொண்டு, பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

    மேலும் மேற்படி நடைமுறைகளை பின்பற்ற தவறும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×