search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bannari"

    • பவானிசாகர் தனித்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பண்ணாரி என்பவர் வெற்றி பெற்றார்.
    • பொதுமக்கள் அரசின் திட்டங்கள், அடிப்படை வசதிகள், ரேசன் கார்டு, உதவித் தொகை உள்ளிட்டவை பெற பண்ணாரி எம்.எல்.ஏ.வை தினமும் சந்தித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கடந்த தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி), பவானி, பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 5 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 3 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

    இதில் பவானிசாகர் தனித்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பண்ணாரி என்பவர் வெற்றி பெற்றார். இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசின் திட்டங்கள், அடிப்படை வசதிகள், ரேசன் கார்டு, உதவித் தொகை உள்ளிட்டவை பெற பண்ணாரி எம்.எல்.ஏ.வை தினமும் சந்தித்து வருகின்றனர். இவர் பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வான தன்னை யாரும் மதிப்பதில்லை என்று பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து பண்ணாரி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பவானிசாகர் தொகுதியில் கடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2011 தேர்தலில் எங்கள் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மேலும் இத்தொகுதியில் அதிக முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில் இந்த தொகுதியில் இதுவரை நடக்காத ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. எனது தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த திட்டபணிகளும் முறையாக நடைபெறவில்லை.

    நான் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த காலத்தில் பொதுமக்களின் கோரிக்கையான பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் உதவி கேட்டு என்னிடம் வந்த 2 ஆயிரம் மனுக்களை பரிந்துரை செய்து வருவாய்த்துறைக்கு அனுப்பி உள்ளேன். ஆனால் நான் பரிந்துரைக்கும் மனுக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. என்னையும், என் பரிந்துரைகளையும் அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள்.

    நேரில் சென்று கேட்டால் கூட இதோ செய்து விடுகிறேன் என்று கூறுவார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள். பொதுவாக என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள். பெயரளவுக்கு மட்டும் தான் நான் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். வி.ஏ.ஓ. முதல் தாசில்தார் வரை என்னை யாரும் மதிப்பதில்லை. மேலும் போலீசார், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் என்னை புறக்கணிக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது உத்தரவுகள் மதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் நான் அருந்ததியினர் வகுப்பை சார்ந்தவன் என்பது தான்.

    இதனால் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்னால் எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. எனக்கு முன் இந்த பதவியில் இருந்தவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்திருக்காது. அதற்கு அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம். அரசு விழாக்களுக்கு அழைக்க தவறினால் விசயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் அரசு விழாக்களுக்கு எனக்கு அழைப்பு வருகிறது.

    அதிகாரிகள் என்னை மக்கள் பிரதிநிதியாக பார்க்கவில்லை. சாதி ரீதியாக தான் பார்க்கிறார்கள்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் நம்மை என்ன செய்து விடுவார் என்று அதிகாரிகள் இருப்பதை பார்த்து இருக்கிறேன். என்னிடம் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து பலமுறை கலெக்டரிடம் முறையிட்டு உள்ளேன். இந்த விவகாரத்தில் இதுவரை நான் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லவில்லை. மக்கள் விண்ணப்பித்த மனுக்கள் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்த உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×